Home நாடு லோ யாட் பிளாசா: நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தகராறில் மேலும் 3 பேர் கைது!

லோ யாட் பிளாசா: நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தகராறில் மேலும் 3 பேர் கைது!

515
0
SHARE
Ad

Low yatகோலாலம்பூர், ஜூலை 13 – தலைநகரில் உள்ள பிரபல லோ யாட் வணிக வளாகத்தின் வெளியே நேற்று நள்ளிரவில் மீண்டும் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து இன்று காலை மேலும் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற இந்த சம்பவத்தில் 3 செய்தியாளர்கள் உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை, வாடிக்கையாளர் ஒருவருக்கும், அங்குள்ள மின்னணு கருவிகள் விற்பனைக் கடை ஊழியர்களுக்கும், திறன்பேசி விற்பனையில் ஏற்பட்ட தகராறு, அன்று இரவே பூதாகரமாக வெடித்ததோடு, நேற்று இரவில் சுமார் 50 முதல் 60 பேர் வரை கூடி கலவரமாக மாறியதாக பல்வேறு முக்கிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

அந்தக் குறிப்பிட்ட வணிக வளாகத்திற்கு அருகேயுள்ள உணவுக்கடை முன்பு நேற்று இரவு கூடிய 60 ஆடவர்கள், அங்கு பாதுகாப்பிற்கு இருந்த காவல்துறையினருடன் தகராறு செய்ததோடு, தலைக்கவசத்தால் தாக்கியுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அந்தப் பகுதியில் ஏற்பட்ட வெடிச்சத்தத்தைத் தொடர்ந்து, அங்கு நள்ளிரவு 1 மணியளவில் இரண்டு வாகனங்களில் வந்த கலவரத்தடுப்புப் படையினர், அவர்களைக் கட்டுப்படுத்தும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக ‘தி ஸ்டார்’ இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தையடுத்து, லோ யாட் பிளாசா அருகே செல்லும் பல முக்கியச் சாலைகள் மூடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இனவாதப் பிரச்சனை அல்ல

Low yat 1

இதனிடையே, இச்சம்பவத்திற்குக் காரணம் இனவாதப் பிரச்சனை தான் என நட்பு ஊடகங்களில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. எனினும், காவல்துறை அதை முற்றிலும் மறுத்துள்ளது.

இது குறித்து நகரக் காவல்துறைத் தலைவர் தாஜுடின் முகமட் இசா கூறுகையில், “இரண்டு தரப்பிலும் வெளிப்படையான முறையில் விசாரணை நடத்தப்படும் என்பதை நான் உறுதியாகக் கூறுகின்றேன். பொதுமக்கள் நட்பு ஊடகங்களின் வழியாகப் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். காவல்துறை வெளியிடும் தகவல்களை மட்டும் நம்புங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை, லோ யாட் பிளாசாவில் திறன்பேசி ஒன்றை வாங்க வந்த 22 வயது இளைஞர் அதைத் திருடியதாகவும், பின்னர் அங்கிருந்த பாதுகாவலர்களால் பிடிக்கப்பட்டதாகவும் பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், அந்த இளைஞர் தனது நண்பர்களுக்குத் தகவல் சொல்லியதால், அங்கு வந்த அவர்கள் கடை ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டதோடு, சுமார் 70,000 மதிப்பிலான பொருட்களை அடித்து நொறுக்கி சேதம் விளைவித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.