Home நாடு மலேசியாவில் கொடிய விஷமுள்ள ‘பிரவுன் விடோ’ சிலந்திகள் – ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

மலேசியாவில் கொடிய விஷமுள்ள ‘பிரவுன் விடோ’ சிலந்திகள் – ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

653
0
SHARE
Ad

Brown Widow Spiders

கோலாலம்பூர், ஜூலை 13 – கொடிய விஷத்தன்மை வாய்ந்த ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த சிலந்தி வகை ஒன்று, தற்போது உலகெங்கும் மெல்ல பரவி வருகின்றது. இந்நிலையில், மலேசியக் கடலோரப் பகுதிகளிலும் அந்த வகை சிலந்திகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

‘பிரவுன் விடோ ஸ்பைடர்’ என்று அழைக்கப்படும் அந்த வகை சிலந்தி, மலேசியாவில் பினாங்கு, சிலாங்கூர், ஜோகூர் ஆகிய இடங்களில் இருப்பதை மலாயாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அதன் உருவம் மற்றும் மரபணு மாதிரிகளைக் கொண்டு ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

கடந்த 2011 மற்றும் 2012-ம் ஆண்டுகளில், பினாங்கில், புக்கிட் மெர்த்தாஜாம் என்ற இடத்தில் புதிதாகக் கட்டப்பட்ட குடியிருப்புப் பகுதியில் உள்ள வீடுகளில் 1 செமீ நீளமுடைய சிலந்திகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் உடனடியாக அந்தக் குடியிருப்புப் பகுதியில் தேவையான பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தெளிக்குமாறு மேம்பாட்டு நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.

அதே போல் சிலாங்கூரில், செர்டாங் மற்றும் பண்டார் சன்வேயில், மாணவர் ஒருவரின் மிதிவண்டியிலும், உணவுக்கடை ஒன்றின் மேசையிலும் இருந்தது கண்டறியப்பட்டது. ஜோகூரில் கார் கதவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்ற தகவலை ஸ்டார்2.காம் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்புகளின் முடிவுகள் அண்மையில், ‘விஷத்தன்மை கொண்ட உயிரினங்கள் மற்றும் நச்சுப்பொருட்கள், வெப்ப மண்டல நோய்கள்’ ( the Journal Of Venomous Animals And Toxins Including Tropical Diseases) என்ற இதழில் வெளியிடப்பட்டது.

இதனிடையே, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, சுங்கை பூலோவில் கண்டுபிடிக்கப்பட்ட சிலந்தி ஒன்றின் மாதிரியை, சிலாங்கூர் சுகாதாரத்துறை மலாயாப் பல்கலைக்கழத்தின் ஆராய்ச்சி குழுவினருக்கு அனுப்பி வைத்தது. அதை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் அது பிரவுன் விடோ வகை சிலந்தி தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

spider

விஷத்தன்மை கொண்ட இந்த பிரவுன் விடோ சிலந்தி, உலகின் 58 நாடுகளில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கப்பல் கொள்கலன்களில் பதுங்கிக் கொள்ளும் இந்த வகை சிலந்திகள் அதன் மூலமாக தெற்கு மற்றும் வடக்கு அமெரிக்கா, ஆசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு பரவியுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பிரவுன் விடோ சிலந்தியில் பல வகைகள் உள்ளன. இங்கு காணப்படும் பிரவுன் விடோ வகை சிலந்தியும், ஜப்பான் கடலோர நகரங்களில் காணப்படும் சிலந்தியும் ஒரே வகை என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவற்றில் சிலாங்கூரில் கண்டறியப்பட்ட சிலந்தி இந்தியா மற்றும் பிரேசிலில் காணப்படும் சிலந்தி வகையுடன் ஒத்திருப்பதாகவும் ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

இது குறித்து மரபணு மாதிரிகளின் இந்த வகை உயிரினங்களை ஆராய்ச்சி செய்து வரும் டாக்டர் ஜான் – ஜேம்ஸ் கூறுகையில், “எங்களைப் பொறுத்தவரையில், பொதுமக்கள் இந்த சிலந்தி குறித்த தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். யாரையாவது சிலந்தி கடித்தால், உடனடியாக மருத்துவ சிகிச்சைப் பெற வேண்டும். காரணம் அது பிரவுன் விடோ வகை சிலந்தியாக இருக்கலாம். எந்த வகை சிலந்தி என்று மருத்துவர்களுக்குத் தெரிந்தால் மட்டுமே அவர்களால் சரியான மருந்தைக் கொடுத்து காப்பாற்ற முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

எப்படி நம்மை தற்காத்துக் கொள்வது?

இந்த வகை சிலந்திகள் கடிப்பதில் இருந்து எப்படி நம்மைப் பாதுகாத்துக் கொள்வது. இந்த கேள்விக்கு ஆராய்ச்சியாளர்கள் கூறும் பதில் என்னவென்றால்,

1.வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

2. பூச்சிக் கொல்லி மருந்துகளை வீட்டிலும், தோட்டங்களிலும் பயன்படுத்தி விஷத்தன்மை கொண்ட பூச்சிகள் வராமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

3. இது போன்ற விஷத்தன்மை கொண்ட சிலந்திகளை அடையாளம் காண, அதைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

4. தலையை விட சிலந்தியின் வயிற்றுப் பகுதி வட்டமாக பெரிதாக இருந்தாலோ, சிலந்தியின் கால் பகுதிகளில் அடர் கறுமை நிறத்தில் பட்டைகள் இருந்தாலோ, வயிற்றுப்பகுதில் வித்தியாசமான குறியீடுகள் தெரிந்தாலோ அது பிரவுன் விடோ சிலந்தியாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்பு: உங்கள் பகுதிகளில் இது போன்ற குறியீடுகள் கொண்ட வித்தியாசமான சிலந்திகளைக் கண்டால் உடனடியாக, noisha@ummc.edu.my or mustakiza@picoms.edu.my என்ற மின்னஞ்சலுக்குத் தகவல் அளியுங்கள்.