Home Featured வணிகம் சீனா பங்குகள் சரிவைத் தொடர்ந்து உலகமெங்கும் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி!

சீனா பங்குகள் சரிவைத் தொடர்ந்து உலகமெங்கும் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி!

782
0
SHARE
Ad

Dow-Jones-பெய்ஜிங் – கடந்த சில ஆண்டுகளில் உலகம் காணாத பொருளாதார சரிவாக, இன்று சீனாவின் பங்குச் சந்தை மாபெரும் சரிவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, உலகம் எங்கும் உள்ள முக்கிய நாடுகளின் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன.

சீனாவின் பிரம்மாண்டமான பொருளாதார பலம் குறித்த ஐயப்பாடுகள் உலகம் எங்கிலும் எதிரொலித்ததன் காரணமாகவும் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்ததாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக ஆசிய பங்குச் சந்தைகளில் விலைகள் கடும் வீழ்ச்சியை எதிர்நோக்கின. இன்று பிற்பகலில் ஐரோப்பாவின் பங்குச் சந்தைகளும் வீழ்ச்சியை நோக்கி நகரத் தொடங்கின.

#TamilSchoolmychoice

அமெரிக்க பங்கு சந்தையும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

China_10ஒட்டு மொத்தமாக 5 முதல் 7 சதவீதம் வரையில் பங்கு விலைகள் இறங்குமுகமாக இருந்தன.

எண்ணெய் விலையும் 4% சரிந்து, கடந்த ஆறு வருடங்களில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்த விலையாக ஒரு பீப்பாய்க்கு 39 அமெரிக்க டாலருக்கு விற்பனையானது.

சீனாவின் பொருளாதாரக் கண்ணாடியாகக் கருதப்படும், ஷங்காய் பங்கு சந்தை 8.5 சதவீதம் வீழ்ச்சியடைந்து, இந்த ஆண்டு முழுக்கக் கண்ட இலாபம் அனைத்தையும் ஒரே நாளில் துடைத்தொழித்துவிட்டதாக பங்குச் சந்தை விற்பன்னர்கள் கணக்கிட்டுள்ளனர்.

வீழ்ச்சிக்கான மூன்று காரணங்கள்

மூன்று முக்கிய அம்சங்கள் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு அச்சமூட்டி, அவர்கள் தங்களின் பங்குடமைகளை விற்றுவிட்டு வெளியேறுவதற்கு காரணமாக அமைந்ததாக பொருளாதார வல்லுநர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

முதலாவது, சீனாவின் பொருளாதாரம், பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்ததைவிட மெதுவான பின்னடைவுகளைச் சந்தித்து வருவது.

இரண்டாவது, கடந்த பத்தாண்டுகளில் வட்டி விகிதங்களை எதையும் உயர்த்தாத அமெரிக்க மத்திய வங்கி, இப்போது முதல் முறையாக வட்டி விகிதங்களை உயர்த்தும் என்ற அச்சம்.

மூன்றாவதாக, எண்ணெய் விலை மிகவும் குறைந்துள்ளதால், அதனை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பொருளாதாரங்கள் பாதிக்கப்படும் என்ற அச்சம் – அதோடு எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டங்கள் காணும் அல்லது இலாபங்கள் குறையும் என்ற எதிர்பார்ப்பு.

இதற்கிடையில் மலேசியாவின் ரிங்கிட் நாணயமும் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

-இரா.முத்தரசன்