Home Featured நாடு இலங்கை சுற்றுலா மையங்களை மலேசியாவில் பிரபலப்படுத்தும் பிரச்சார இயக்கம் தொடக்கம்!

இலங்கை சுற்றுலா மையங்களை மலேசியாவில் பிரபலப்படுத்தும் பிரச்சார இயக்கம் தொடக்கம்!

1176
0
SHARE
Ad

IMAG3352கோலாலம்பூர் – கோலாலம்பூர் புத்ரா உலக வாணிப மையத்தில் இன்று தொடங்கி, செப்டம்பர் 6ஆம் தேதி வரை,  மாட்டா எனப்படும் சுற்றுலா மற்றும் பயண முகவர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் கண்காட்சியை முன்னிட்டு, அந்தக் கண்காட்சியில் கலந்து கொள்ளும் இலங்கையின் சுற்றுலா மேம்பாட்டுக் கழகம், தனது நாட்டின் சுற்றுலா மையங்களை மலேசியர்களுக்கு பிரபலப்படுத்த பல்வேறு பிரச்சார இயக்கங்களை முடுக்கி விட்டுள்ளது.

இதன் தொடர்பில் நேற்று வியாழக்கிழமை தலைநகரில் உள்ள ஒரு பிரபல தங்கும் விடுதியில் கோலாலம்பூரில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் இணைந்து, மலேசிய சுற்றுலாப் பயண நிறுவனங்கள், தகவல் ஊடகங்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியொன்றை இலங்கை சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.

சுற்றுலா மற்றும் பயண முகவர்களும், சுற்றுலாத் துறையின் வணிக நிறுவனங்களும் இந்த சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டன.

#TamilSchoolmychoice

மாட்டா கண்காட்சியில் கலந்து கொள்ள இலங்கை சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் உயர் அதிகாரிகள் குழு ஒன்று மலேசியாவுக்கு வருகை தந்திருக்கின்றது.

இலங்கைத் தூதர் இப்ராகிம் அன்சார் உரை

IMAG3391நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய மலேசியாவுக்கான இலங்கைத் தூதர், இப்ராகிம் அன்சார் (படம்), இலங்கையில் அமைதி திரும்ப தனது நாட்டின் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து விளக்கினார்.

கடந்த காலங்களில் உள்நாட்டுப் போரினால் நிலைகுலைந்து போயிருந்த இலங்கையில் கடந்த ஆறு ஆண்டுகளாக எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பதைப் பெருமையுடன் சுட்டிக் காட்டிய இலங்கைத் தூதர், இதன் காரணமாக, உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் ஈர்ப்பதில் இலங்கை முன்னணி வகிக்கின்றது என்று கூறினார்.

பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய, இலங்கைத் தூதர், ஐக்கிய நாட்டு சபையின் யுனெஸ்கோ அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட 8 மையங்கள் இலங்கையில் இருப்பதாகவும், அதில் 6 மையங்கள் பாரம்பரியச் சின்னங்கள் என்றும், மேலும் 2 மையங்கள் இயற்கை வளங்களுக்காகப் பாதுகாக்கப்படும் மையங்கள் என்றும் விளக்கினார்.

இலங்கையில் தற்போது நெடுஞ்சாலைகளும், புதிய சாலைகளும் அமைக்கப்பட்டு வருவதாகவும், அதன் காரணமாக, கூடிய விரைவில், இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களின் பயணங்களை சுலபமாகவும், எளிதாகவும் அமைத்துக் கொள்ளும் சூழல் ஏற்படும் என்றும் இலங்கைத் தூதர் இப்ராகிம் அன்சார் விளக்கினார்.

இலங்கை சுற்றுலா மையங்கள் குறித்த விளக்கம்

IMAG3400இலங்கை சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் உதவி இயக்குநரான சாமி லங்கா (படம்) இலங்கையின் முக்கிய சுற்றுலா மையங்கள் குறித்து விளக்கினார்.

கடந்த ஆண்டில் மட்டும் 15 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்ததாகவும், இந்த ஆண்டில் ஜூலை மாதம் முடிவதற்குள்ளாகவே, பத்து இலட்சம் பயணிகள் இலங்கைக்கு வந்திருப்பதாகவும் சாமி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மலேசிய சுற்றுலாக் கழகத்தின் உதவி இயக்குநர் சித்தி சல்வா ஒத்மான் மற்றும் பிபிபி கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் அண்ட்ரூ தியோங் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.