Home Featured கலையுலகம் சாகித்ய அகாடமி: வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் 23 மொழிகளில் மொழிபெயர்ப்பு

சாகித்ய அகாடமி: வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் 23 மொழிகளில் மொழிபெயர்ப்பு

888
0
SHARE
Ad

vairamuthu_2007064gசென்னை – கவிஞர் வைரமுத்து எழுதி 2003-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற புகழ்மிக்க நாவலான கள்ளிக்காட்டு இதிகாசம் 23 மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதாக சாகித்ய அகாடமி அறிவித்துள்ளது.

இதுகுறித்துச் சாகித்ய அகாடமியின் செயலாளர் சீனிவாசராவ் கவிஞர் வைரமுத்துவுக்குக் கடிதம் மூலம் தகவல் தெரிவித்திருக்கிறார்.

இந்நூல் இதுவரை 1லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்பனையாகி நாவல் சரித்திரத்தில் பெரும் சாதனை படைத்திருக்கிறது.

#TamilSchoolmychoice

வைகை அணை கட்டப்பட்ட போது, நீர் தேங்கும் பகுதியில் உள்ள 16 கிராமங்கள் காலி செய்யப்பட்ட வலியை மண் வாசனையோடு வட்டார வழக்கில் கண்ணீர் கலந்து சொன்ன காவியம் தான் கள்ளிக்காட்டு இதிகாசம்.

லண்டனில் நிகழ்ந்த அதன் அறிமுக விழாவில் இங்கிலாந்து நாட்டு அந்நாள் கல்வி அமைச்சர் ஸ்டீபன் டிம்ஸ் மற்றும் லண்டன் மாநகர அந்நாள் மேயர் ராபின் வேல்ஸ் இருவரும் கலந்துகொண்டு கள்ளிக்காட்டு இதிகாசம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

அதன்படி, தமிழில் வெளியான இந்த நாவலை உலகம் முழுவதும் கொண்டு  சேர்க்க சாகித்ய அகாடமி முயற்சி மேற்கொண்டுள்ளது.

அதற்காக ஆங்கிலம், அஸ்ஸாமி, வங்காளி, போடா, டோக்ரி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மைதிலி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, ராஜஸ்தானி, சமஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தெலுங்கு, உருது ஆகிய 23 மொழிகளில் இக்காவியத்தை மொழிபெயர்க்க சாகித்ய அகாடமி முடிவெடுத்திருக்கிறது.

மொழிபெயர்ப்புப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

“இந்த மொழிபெயர்ப்பு முயற்சி தமிழுக்கும் இந்திய மொழிகளுக்கும் இடையே கட்டப்படும் கலாச்சாரப் பாலமாகும். மொழிபெயர்ப்பு முடிந்ததும் அந்தந்த மாநிலத் தலைநகரங்களில் அறிமுகவிழா நடத்தப்படும்” என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.