Home Featured தொழில் நுட்பம் சென்னையில் “தமிழ் எழுத்துருவியல் மாநாடு” – முத்து நெடுமாறன் முதன்மை உரையாளராகக் கலந்து கொள்கிறார்.

சென்னையில் “தமிழ் எழுத்துருவியல் மாநாடு” – முத்து நெடுமாறன் முதன்மை உரையாளராகக் கலந்து கொள்கிறார்.

913
0
SHARE
Ad

Tamil Typhography Conf logoசென்னை – எதிர்வரும் அக்டோபர் 17, 18ஆம் தேதிகளில் தமிழகத் தலைநகர் சென்னையில், கணித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் “தமிழ் எழுத்துருவியல் மாநாடு” நடைபெறுகின்றது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணைய கல்விக் கழக அரங்கில் நடைபெறும் இந்த மாநாட்டில் பல முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டு உரையாற்றுவதோடு, தங்களின் தொழில்நுட்பத் திறனையும், அனுபவங்களையும் பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கின்றனர்.

மலேசியாவிலிருந்து ‘முரசு அஞ்சல்’ மென்பொருள் உருவாக்குநரும், நீண்ட காலமாக தமிழ்க் கணினித் துறையில் ஈடுபட்டு, இணையத்தில் மற்றும் செல்பேசித் தளங்களில் தமிழின் பயன்பாடு பரவி வருவதில் முக்கியப் பங்காற்றி வந்துள்ளவருமான முத்து நெடுமாறன் இந்த மாநாட்டின் முதன்மை உரையாளர்களில் (Principal Speakers) ஒருவராகக் கலந்து கொண்டு உரையாற்றுகின்றார்.

முத்து நெடுமாறன் (படம்)  ‘செல்லினம்’ தளத்தின் உருவாக்குநர் என்பதோடு, ‘செல்லியல்’ தகவல் ஊடகக் குறுஞ்செயலியின் தொழில் நுட்ப வடிவமைப்பாளரும், தோற்றுநரும் ஆவார்.

#TamilSchoolmychoice

muthu-nedumaranகருத்தரங்கம் பற்றி…

தமிழ் எழுத்துருக்களைத் தரப்படுத்தவும், புதிய எழுத்துருக்களை உருவாக்கவும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்று கணித்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சொ.ஆனந்தன் கூறியிருக்கின்றார்.

ஒரு மொழியில் எழுதுவதற்கும், படிப்பதற்கும் உகந்த வகையிலும், அம்மொழியை எழுதும்போதும், அச்சிடும்போதும், காட்சிப்படுத்தும்போதும் கவரும் வகையிலும் அம்மொழியின் எழுத்துருக்களை ஒழுங்கமைக்கின்ற ஒரு கலையாகவும் ஒரு தொழில்நுட்பமாகவும் விளங்குவது எழுத்துருவியல் ஆகும்.

எழுத்துருக்களை ஒழுங்கமைப்பது என்பது, எழுத்துருவின் வடிவங்கள், புள்ளிக் கணக்கில் அவற்றின் உருவளவு, வரியின் நீளம், வரிகளுக்கு இடையேயான இடவெளி (Leading), எழுத்துகளுக்கு இடையேயான இடவெளி (Tracking) ஆகியவற்றைத் தெரிவு செய்வதும், எழுத்திணைகளுக்கு இடையேயான இடவெளியைச் சரிசெய்வதும் (Kerning).ஆகும். எழுத்துருவியல் என்னும் சொல்லானது எழுத்துகளின் பாணி (Style), ஒழுங்கமைப்பு, செயலாக்கத்தில் உருவாக்கப்படும் எழுத்துகள், எண்கள், சின்னங்கள் இவற்றின் தோற்றம் ஆகியவற்றையும், உள்ளடக்கியதாகும்.

Tamil Typography - logoஎழுத்துருவியல் படிப்பெளிமை என்கிற விஷயம் இன்றைய சூழலில், குறிப்பாக, சிறிய காட்சித்திரை கொண்ட கையடக்கச் சாதனங்களின் பயன்பாடு பெருகியுள்ள இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழ்ப் பயனர்களிடையே, எழுத்துருவியலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், அதுபற்றிய ஒரு விழிப்புணர்வை உருவாக்கவும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாடு, வரும் ஆண்டுகளில் நடைபெறப்போகும் இதுபோன்ற பல மாநாடுகளுக்கு முன்னோடியாகத் திகழும் என்றும், தமிழ் எழுத்துருவியலின் முறைப்படியான வளர்ச்சிக்கு உதவும் என்றும் நம்புகிறோம்.

விவாதிக்கப்படவிருக்கும் தலைப்புகள்

இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட இருக்கும் முதன்மையான தலைப்புகள்:

1) ஓலைச் சுவடி முதல் கையகச் சாதனங்கள் வரை – தமிழ் வரிவடிவத்தின் பரிணாம வளர்ச்சி.

2) மேற்கத்திய எழுத்துருவியலிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் – காலப்போக்கில் மேற்கத்திய எழுத்துருவியல் எவ்வாறு வளர்ச்சி பெற்றது? – சவால்களும் தீர்வுகளும்

3) இந்திய எழுத்துருவியல் பரிசோதனைகள் – இந்திய எழுத்துருவியலைத் தரப்படுத்தலில் எடுக்கப்பட்ட முன்முயற்சிகள்

4) தமிழ் எழுத்துருவியலின் பண்புக்கூறுகள்

5) ஆப்பிள், ஆண்ட்ராய்டு சாதனங்களில் தமிழ் எழுத்துருவியலின் அனுபவங்கள்

6) அச்சு ஊடகத்தில் எழுத்துருவியல் பிரச்சினைகள்

7) எண்மிய அச்சிலும் (digital print), காட்சித்திரைச் சாதனங்களிலும் எழுத்துருவியல் பிரச்சினைகள்

8) கலை, விளம்பர ஊடகங்களில் எழுத்துருவியல் பிரச்சினைகள்

கருத்தரங்கம் அமைப்பாளர்களைப் பற்றி:

Tamil Typhography - logo 1பதினாறு ஆண்டுகளாக இயங்கிவரும், கணித்தமிழ்ச் சங்கம் தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்களின் சங்கமாகும். தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழின் வளர்ச்சிக்கு வழிவகை செய்யும் பணியில் பல்லாண்டு காலமாக ஈடுபட்டு வருகிறது. தமிழ் எழுத்துருக் குறியாக்கத் தரப்பாடுகளை வளர்த்தெடுப்பதிலும், தமிழ் மென்பொருள்களின் வளர்ச்சியிலும் முன்னெடுப்பிலும் தமிழ்நாடு அரசு, உத்தமம் (உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்) ஆகியவற்றுடன் நெருங்கி இணைந்து பணியாற்றி வருகிறது.

கருத்தரங்கில் பங்கேற்க உள்ள சிறப்பு அழைப்பாளர்கள்:

இந்த கருத்தரங்கில் ஐ.ஐ.டி. பாம்பேயைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் ஜி.வி.ஸ்ரீகுமார், அதே ஐ.ஐ.டி. பாம்பே வடிவமைப்பு (டிசைன்) துறையைச்  சேர்ந்த பேராசிரியர் முனைவர் கிரிஷ் டால்வி, (Girish Dalvi), அசாம் மாநிலம் கௌஹாத்தி ஐ.ஐ.டி.யைச் சார்ந்த பேராசிரியர் முனைவர் டி.உதயகுமார் (D.Udaya Kumar) (இந்திய அரசின் ரூபாய் சின்னத்தை வடிவமைத்த தமிழர்), குஜராத் அகமதாபாத் தேசிய வடிவமைப்புப் பள்ளியைச் (டிசைன் ஸ்கூல்)  ஆதார்ஸ் ராஜன், 20க்கும் மேற்பட்ட இந்திய மொழிகள், 6 வெளிநாட்டு மொழிகள் சார்ந்த 4,000க்கும் மேற்பட்ட எழுத்துருக்களை வடிவமைத்து இந்தியாவின் தனித்துவமாக பன்மொழி மென்பொருள் ஸ்ரீலிபி தயாரிப்பு நிறுவனமான புனே மாடூலர் இன்போடெக் நிறுவனத் தலைவர் முனைவர் என்.எம்.கூப்பர், உலகம் முழுவதும் அனைத்துத் தளங்களிலும் பரவலாகப் பயன்படும் முதன்மை தமிழ் எழுத்துருக்கள் ‘அனு’ தமிழ் எழுத்துரு வடிவமைப்பாளர் அனுகிராபிக்ஸ் திரு. முரளி கிருஷ்ணா, பல்வேறு தமிழ் ஊடகங்களில் தமிழ் எழுத்துருக்களை விதைத்து 25 ஆண்டுகளாக அச்சுத்துறையில் முன்னனியில் இருந்துவரும் இளங்கோ மென்பொருள் நிறுவனர் திரு.இளங்கோவன், வள்ளி மென்பொருள் நிறுவனரும், கணித்தமிழ்ச் சங்கத் தலைவருமான திரு. வள்ளி ஆனந்தன் உள்ளிட்ட கணித்தமிழ் முன்னோடிகள் பங்கேற்கிறார்கள்.

sellinam-promo-1024x500

Murasu Anjal-New-Logo-

 

 

 

 

 

 

இவர்களோடு, இணையத்தில் தமிழை ஏற்றி வைத்த முன்னோடிகளில் ஒருவரும், செல்பேசிகளில் தமிழ் உலாவர முக்கிய காரணகர்த்தாவாக விளங்கும் மலேசிய நாட்டைச் சேர்ந்த முரசு அஞ்சல் மென்பொருள் நிறுவனத் தலைவருமான முத்து நெடுமாறனும் முதன்மை நிலை உரையாளராகக் கலந்து கொண்டு உரையாற்றுவார் என ஏற்பாட்டாளர்களான கணித் தமிழ்ச் சங்கத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு:

கணித்தமிழ்ச் சங்கம்,

2வது மாடி, 421, அண்ணா சாலை,   சென்னை–18.

தொலைபேசி: 24355564 / 24358665; 

செல்பேசி: 94440-75051; 

E-மின்னஞ்சல் முகவரி:: tamiltypography@gmail.com

.