Home இந்தியா ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான புதிய விதி தமிழக மாணவர்களை பாதிக்கும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான புதிய விதி தமிழக மாணவர்களை பாதிக்கும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

467
0
SHARE
Ad
imagesசென்னை, மார்ச். 13- மத்திய பணியாளர் தேர்வு ஆணைய விதிமுறைகளில் செய்யப்படவுள்ள மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மத்திய பணியாளர் தேர்வு ஆணைய நடைமுறைகளில் மத்திய அரசு இந்த ஆண்டு முதல் செய்துள்ள மாற்றம், மிகவும் பாரபட்சமானது. இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து மத்திய பணியாளர் தேர்வுகளை எழுதவுள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில் இருந்து இத்தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களின் முயற்சிக்கு புதிய விதிமுறைகளில் உள்ள 4 பெரிய மாற்றங்கள் எதிர்விளைவை ஏற்படுத்தும்.
முதலாவதாக, உயர்நிலைப் பள்ளி வரை தமிழை பயிற்று மொழியாக கொண்டு, பின்னர் உயர்கல்வியை ஆங்கிலத்தில் கற்ற மாணவர்கள் தமிழிலேயே பணியாளர் தேர்வு ஆணைய தேர்வுகளை எழுதி வந்தனர்.
தற்போதைய மாற்றத்தின்படி, விருப்பத் தேர்வு உள்ளிட்ட பிரதான தேர்வுகளை உயர்கல்வி வரை தமிழில் படித்தவர்கள் தான் இனி தமிழில் தேர்வு எழுத முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்களின் தாய்மொழியான தமிழில் தேர்வு எழுத நினைப்பவர்களின் வாய்ப்பை மறுக்கும் வகையில் இந்த முடிவு அமைந்துள்ளது. எனினும், இந்தியில் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் மீது எந்த நிர்பந்தமும் சுமத்தப்படவில்லை.
இந்தியும், தமிழும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள மொழிகளாகும். இந்த நிலையில் மத்திய அரசின் இந்த புதிய முடிவு தமிழ் பேசும் தேர்வு எழுதுவோருக்கு மட்டுமின்றி இந்தி பேசாத இதர மாநிலங்களை சேர்ந்த தேர்வு எழுதுபவர்களுக்கும் பாரபட்சமானது ஆகும்.
குறிப்பாக, கிராமப்புறங்களை சேர்ந்த தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இந்த முடிவு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.