Home Featured தமிழ் நாடு “கொடுப்பதும், கெடுப்பதும் மழை தான்” – வள்ளுவர் விருது பெற்ற வைரமுத்து சுவாரசிய பேச்சு!

“கொடுப்பதும், கெடுப்பதும் மழை தான்” – வள்ளுவர் விருது பெற்ற வைரமுத்து சுவாரசிய பேச்சு!

1010
0
SHARE
Ad

vairamuthuபுது டெல்லி – டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் சமீபத்தில் திருக்குறள் விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அந்த விழாவில், கவிஞர் வைரமுத்துவிற்கு ‘வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற பின், விழாவில் பேசிய வைரமுத்து, திருக்குறள் இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஒலிப்பதை பெருமை பொங்கப் பேசினார்.

திருக்குறள் மனிதனைப் பேசுகிறது. தமிழன் – வங்காளி – மலையாளி – மராட்டியன் – தெலுங்கன் என்று இனம் பிரித்துப் பேசவில்லை என்று கூறிய வைரமுத்து, திருக்குறள் மனிதற்கு உணர்த்திய பல்வேறு விசயங்களை எடுத்துரைத்தார்.

பகவத்கீதை – கடவுள் மனிதனுக்குச் சொன்னது, திருக்குறள் – மனிதன் மனிதனுக்கு சொன்னது. இந்த பூமியில் வாழப்போகும் கடைசி மனிதனைப் பற்றியும் திருக்குறள் சிந்திக்கிறது என்று வைரமுத்து கூறியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

#TamilSchoolmychoice

இறுதியாக அவர், சென்னை வெள்ளம் குறித்தும் திருக்குறளில் இருப்பதாகக் கூறினார். அவர், “இந்த மாத மழையில் எங்கள் சென்னை மூழ்கிவிட்டது. மழைத் தண்ணீர் மனிதர்களைக் குடித்துவிட்டுப் போய்விட்டது. எங்கள் வானம் பகலைத் தொலைத்துவிட்டது. இது ஒரு நூற்றாண்டின் பேரழிவு.”

“இந்தத் துயரம் பற்றியும், அதிலிருந்து மீள்வது பற்றியும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட குறள் எங்களுக்கு வழிகாட்டுகிறது.

‘கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்பாய் மற்றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை’

“கெடுப்பதும் மழைதான்; கெட்டவர்களை மீண்டும் வாழவைப்பதும் மழைதான் என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார்” என திருக்குறளின் பெருமையை அவர் எடுத்துரைத்தார்.