Home Featured நாடு “சிலாங்கூரில் பாஸ் கூட்டணியிலிருந்து விலகும்படி ஜசெகவை வலியுறுத்தும் தைரியம் உண்டா?” இராமசாமிக்கு டத்தோ ஆர்.எஸ். மணியம்...

“சிலாங்கூரில் பாஸ் கூட்டணியிலிருந்து விலகும்படி ஜசெகவை வலியுறுத்தும் தைரியம் உண்டா?” இராமசாமிக்கு டத்தோ ஆர்.எஸ். மணியம் சவால்

608
0
SHARE
Ad

கிள்ளான் –  பாஸ்-அம்னோவின் உத்தேச கூட்டணி குறித்து மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ  டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் வெளியிட்ட கருத்தினை விமர்சனம் செய்யும் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமிக்கு சிலாங்கூரில் பாஸ் கூட்டணி அரசிலிருந்து விலகும்படி ஜசெகவை வலியுறுத்தும் தைரியம் உள்ளதா என சிலாங்கூர் கோத்தா ராஜா தொகுதி காங்கிரஸ் தலைவர் டத்தோ ஆர்.எஸ். மணியம் (படம்) கேள்வியெழுப்பினார்.

Maniam R.S.Datoகேவலம் பதவிக்காக கொள்கைகளை விட்டுக் கொடுத்து விட்டு சிலாங்கூர் மாநிலத்தில்  பாஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கும் ஜசெக தலைவர்களுக்கு அம்னோ- பாஸ் கூட்டணி தொடர்பில் கருத்துரைப்பதற்கு எந்த அருகதையும் கிடையாது என்றும் அவர் சொன்னார்.

“சிலாங்கூரில் மட்டும் ஜசெக வாய்திறக்காதது ஏன்?”

#TamilSchoolmychoice

சிலாங்கூர் மாநில அரசில் பாஸ் கட்சியின் முக்கிய பங்காளி கட்சியாக ஜசெக விளங்குகிறது. அந்த கூட்டணிக்கு எதிராக வாய் திறக்காத ராமசாமி அம்னோ-பாஸ் கூட்டணி தொடர்பில் மஇகா எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து மட்டும் தன்மூப்பான முறையில் அறிக்கை விடுவது வியப்பாக உள்ளது என்று நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஆர்.எஸ். மணியம் கூறினார்.

“பேராசிரியர் ராமசாமிக்கு உண்மையில் ஜசெகவில் செல்வாக்கு இருந்தால் சிலாங்கூர் மாநிலத்தில் பாஸ் கட்சி கூட்டணியிலிருந்து விலகும்படி ஜசெகவை வலியுறுத்த வேண்டும். ஆனால், அவரால் அவ்வாறு செய்ய முடியாது. காரணம், ஜசெகவைப் பொறுத்தவரை அவர்களின் பிரத்தியேக சீனக் கொள்கையை   கொண்ட அக்கட்சிக்கு இந்தியர்களின் வாக்குகளைச் சேகரித்துக் கொடுக்கும் தபால்காரராக மட்டும் இராமசாமி கருதப்படுகிறார்” என  ஆர்.எஸ். மணியம் தெரிவித்தார்.

penang-p.ramasamy“எதிர்க்கட்சி கூட்டணியின் வீழ்ச்சி உள்பட நாட்டின் அரசியல் நிலவரங்கள் குறித்து எதுவும் தெரியாத அளவுக்கு மலேசிய இந்தியர்கள் பேசாமடந்தைகள்  என்ற எண்ணத்தில் இராமசாமி சொந்த கற்பனைகளை கருத்துக்களாக வெளியிட்டு வருவது வியப்பைத் தருகிறது. கடந்த இரு  பொதுத்தேர்தல்களின் போது பாஸ் கட்சி பக்கத்தானின் முக்கியப் பங்காளியாகவும் அக்கூட்டணியின் வெற்றிக்கு உறுதுணையாகவும் இருந்த போது அக்கட்சியுடன் உறவு கொள்வது ராமசாமிக்கு நியாயமானதாக தெரிந்தது. ஆனால் பக்கத்தானில் ஜசெகவின் மேலாதிக்கம் வளர்ந்து வருவது, காஜாங் நகர்வு திட்டம் தோல்வி மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட மந்திரி புசார் பதவி விவகாரம் ஆகியவற்றை பாஸ் கட்சி அணுக்கமாக கவனித்து வந்தது. ஜசெகவுடன் நேரடியாக மோதுவதற்கு பாஸ் கட்சி முடிவெடுத்த போது எதிர்க்கட்சிக் கூட்டணியில் தனது செல்வாக்கை வளர்த்துக் கொள்ளும் நோக்கில் பாஸ் கட்சியுடனான உறவை முறித்துக் கொள்ள ஜசெக முடிவெடுத்த து” என்றும் ஆர்.எஸ். மணியம் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

ஜசெகவில் செல்வாக்கும்-சொல்வாக்கும் இல்லாத இராமசாமி

“ஜசெகவின் பலஇனக் கட்சி என்ற மாயத் தோற்றத்தின் அடையாளச் சின்னமாக மட்டுமே ராமசாமி விளங்குகிறார். அதிகாரமற்ற வெறும் அலங்காரப் பதவியாக மட்டுமே அவர் வகித்து வரும் இரண்டாவது துணை முதல்வர் பதவி விளங்குகிறது. லிம் குவான் எங்கை மீறி அவருக்கு ஜசெகவில் செல்வாக்கும் – சொல்வாக்கும் கிடையாது. மஇகா மீது தாக்குதல்  நடத்துவதன் மூலம் இந்தியர்களின் வாக்குகளை ஜசெகவுக்கு திருப்புதற்காக அவருக்கு வழங்கப்பட்ட கூலிதான் துணை முதல்வர் பதவி” என்றும் மணியம் இராமசாமியைச் சாடினார்.

DAP-Logo-Feature“பினாங்கு வாழ் இந்தியர்களுக்கு ராமசாமி செய்த காரியம் என்னவென்றால் மஇகா மீது காழ்ப்புணர்வை ஏற்படுத்தும் விஷமத்தனமான அரசியல் நடவடிக்கைகளும் நம்பிக்கைத் துரோகமும் மட்டுமே ஆகும்.ஜசெக சீன சமூகத்தின் அரசியல் நலனை மட்டுமே மையமாக கொண்ட கட்சி என்பது அண்மையில் நடைபெற்ற அக்கட்சியின் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அக்கட்சியில் இந்திய சமூகத்திற்கு என்று எந்த தொலைநோக்குக் கொள்கையும் கிடையாது. அங்கு ராமசாமியின் கொள்கை மட்டுமே உள்ளது. மஇகாவை திட்டாவிட்டால் ராமசாமிக்கு ஜசெகவில் வேலையே கிடையாது. மஇகாவைப் பற்றிக் கருத்து கூறுவதற்கு மட்டுமே அவர் பத்திரிகைகளை அணுவது வேடிக்கையாக உள்ளது” என்று ஆர்.எஸ். மணியம் தமதறிக்கையில் மேலும் கூறினார்.

“இராமசாமி எவ்வளவுதான் விஷத்தைக் கக்கினாலும் நீண்ட நெடிய அரசியல் வரலாற்றைக் கொண்ட மஇகா  அவற்றையெல்லாம் கடந்து முன்னோக்கி வெற்றி நடை போதும் என்பது திண்ணம். எதிர்காலச் சவால்களைச் சமாளிக்க தயாராகி வரும் மஇகாவுக்கு இராமசாமி போன்ற பலவீனமான தலைவர்கள் எல்லாம் ஒரு  அச்சுறுத்தலே கிடையாது. அடுத்தப் பொதுத்தேர்தலில் தொகுதி வழங்கப்படாவிட்டால் இராமசாமி ஜசெகவில் நீடிப்பரா என்பது சந்தேகமே. அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் அவர் அரசியலிருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியத்  தொகையில் சுகமான வாழ்க்கையை அனுபவிப்பார். ஆனால், மஇகாவின் போராட்டம் ஒருபோதும் ஓயாது. இந்தியர்களுக்காக குரல் கொடுக்கும் தனது கடமையை அது தொடர்ந்து ஆற்றி வரும்” என  ஆர்.எஸ். மணியம் குறிப்பிட்டார்.