Home Featured நாடு ந.பச்சைபாலனின் ‘எஸ்.பி.எம். தமிழ் இலக்கியம் தேர்வுக் களஞ்சியம்’

ந.பச்சைபாலனின் ‘எஸ்.பி.எம். தமிழ் இலக்கியம் தேர்வுக் களஞ்சியம்’

3140
0
SHARE
Ad

SPM Tamil Literature book coverகோலாலம்பூர் – எஸ்.பி.எம். தேர்வில் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்குப் புதிய பாடநூல்கள் இவ்வாண்டு முதல் (2016-2020) அறிமுகமாகின்றன. டாக்டர் மு.வரதராசனின் “அகல் விளக்கு”, கு.அழகிரிசாமியின் ‘கவிச்சக்கரவர்த்தி’, தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட 12 கவிதைகள் ஆகியன அவையாகும்.

இவ்வாண்டு எஸ்.பி.எம். தேர்வில் தமிழ் இலக்கியப் பாடத்திற்குத் தயாராகும் மாணவர்களுக்கும், படிவம் நான்கில் பயிலும் மாணவர்களுக்கும்  உதவும் நோக்கில் புதிய பாடநூல்களுக்கான வழிகாட்டி நூலாகத் ‘தேர்வுக் களஞ்சியம்’ வெளிவரவுள்ளது.

மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம் (இலக்கியகம்) இம்முயற்சிக்கு ஆதரவை நல்கியுள்ளது. இலக்கியம் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த இலக்கியகம் இதுபோன்ற  முயற்சிகளை ஊக்குவித்து வருகிறது.

#TamilSchoolmychoice

patchai-balanஇலக்கியம் கற்பதிலும் கற்பித்தலிலும் உள்ள சிரமத்தைக் கருத்திற்கொண்டு ஆசிரியருக்கும் மாணவருக்கும் உதவும் நோக்கில் இந்த இலக்கிய வழிகாட்டி நூல் தயாராகியுள்ளது. இந்நூலை இலக்கிய ஆசிரியர் ந.பச்சைபாலன் (படம்) எழுதியுள்ளார்.

கவிதை, சிறுகதை, இலக்கியக் கட்டுரை என இலக்கியப் பரப்பில் தன் பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கிவரும் ந.பச்சைபாலன், எஸ்.பி.எம். மாணவர்களுக்காக ஏடுகளில் இலக்கியப் பாடத்திற்கான கட்டுரைகளைப் படைத்து வருகிறார். மாணவர்களுக்கு இலக்கியப் பாடத் தேர்வுப் பயிலரங்குகளையும் நடத்தி வருகிறார்.

ஆசிரியர் இன்றிப் பயிலும் மாணவர்களுக்கும் பயன்படும் நோக்கில் கவிதை, நாடகம், நாவல் ஆகிய மூன்று பகுதிகளுக்கும் விரிவான விளக்கங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. தேர்வுத்தாள் அமைப்பு பற்றிய விளக்கமும் மாதிரிக் கேள்விகளும் விடைகளும் சிறந்த பயனைத் தரும். தேர்வுக்குத் தேவையான அனைத்துக் கூறுகளும் நேர்த்தியாகத் தொகுக்கப்பட்டுள்ளதால் இந்நூல் மாணவரையும் ஆசிரியரையும் கவரும் என்பதில் ஐயமில்லை. 2020வரை உள்ள புதிய இலக்கியப் பாட நூல்களையொட்டிய இந்த வழிகாட்டி நூலைத் தற்போது படிவம் ஒன்று முதல் ஐந்துவரை பயிலும் மாணவர்கள் பெற்றுப் பயன்பெறலாம்.

இந்நாட்டில்  ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, படிவம் ஐந்தில் ஒரு தேர்வுப் பாடமாகத் தமிழ் இலக்கியம் இடம்பெற்று வருகிறது. தமிழ்ப்பள்ளியில் ஆறு ஆண்டுகள் பயின்று தமிழ்க்கல்வி பெற்ற மாணவர்கள் இடைநிலைப்பள்ளியில் தமிழோடு தமிழ் இலக்கியத்தையும் பயிலும் வாய்ப்பினைப் பெறுகின்றனர். தமிழோடு தமிழ் இலக்கியமும் சிறந்த தேர்ச்சிக்குத் துணைபுரியும் என்பதால் தமிழ் மாணவர்கள் இலக்கியமும் பயில்வதைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஊக்குவிக்க வேண்டும்.

312 பக்கங்களில் அழகிய வடிவமைப்பில், குறைந்த விலையில் வெளிவரும் இந்நூலைப் பெற விழைவோர் 012 6025450 (ந.பச்சைபாலன்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தங்கள் ஆசிரியர்கள்வழி  இந்நூலைப் பெறலாம்.