Home Featured நாடு மலேசியன் இன்சைடர் இணையப் பத்திரிக்கை ஆசிரியர்களிடம் காவல் துறை விசாரணை

மலேசியன் இன்சைடர் இணையப் பத்திரிக்கை ஆசிரியர்களிடம் காவல் துறை விசாரணை

616
0
SHARE
Ad

he-Malaysian-Insider-TMI-logo (1)கோலாலம்பூர் – மலேசியன் இன்சைடர் இணையப் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் நடவடிக்கை மறுஆய்வு வாரியம் தொடர்பான கட்டுரை குறித்து இன்று அந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர்களிடம் மலேசியக் காவல் துறை விசாரணை நடத்தியது.

மலேசியன் இன்சைடர் பத்திரிக்கையின் ஆசிரியரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஜஹாபர் சித்திக், நிர்வாக ஆசிரியர் லியோனல் மொராய்ஸ், செய்திகளுக்கான துணை ஆசிரியர் வி.அன்பழகன் ஆகிய மூவரும் இன்று மலேசியக் காவல் துறையின் தலைமையகமான புக்கிட் அமானுக்கு பிற்பகல் 3.15 மணியளவில் சென்றனர்.

அவர்களுடன் எட்ஜ் மீடியா குரூப் நிறுவனத்தின் வழக்கறிஞரும், மனித உரிமை வழக்கறிஞர் ஷாரிட்சான் ஜோஹான் ஆகியோரும் உடன் சென்றனர்.

#TamilSchoolmychoice

அந்த இணையப் பத்திரிக்கையின் மற்ற ஆசிரியர்களிடமிருந்தும் காவல் துறையினர் பின்னர் வாக்குமூலத்தைப் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் நடவடிக்கை மறுஆய்வு வாரிய உறுப்பினர் ஒருவர் தன் பெயர் குறிப்பிட விரும்பாமல் தெரிவித்த தகவல்களின்படி, எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் சென்டிரியான் பெர்ஹாட் மீதான விசாரணை அறிக்கையை அரசாங்கத் தலைமை வழக்கறிஞரிடம் ஊழல் தடுப்பு ஆணையம் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும் என இன்சைடர் செய்தி ஒன்றை வெளியிட்டது.

பிரதமர் நஜிப் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் அந்த செய்தி தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து மலேசியன் இன்சைடர் இணையத் தளம் மலேசிய தொடர்பு மற்றும் பல்ஊடக, ஆணையத்தால் நேற்று முடக்கப்பட்டது.

மலேசியன் இன்சைடர் வெளியிட்ட கட்டுரை, 1998ஆம் ஆண்டின் மலேசிய தொடர்பு மற்றும் பல்ஊடக ஆணைய சட்டங்களின் 233வது பிரிவின்படி,   நாட்டின் பாதுகாப்புக்கு பாதகம் விளைவிக்கக் கூடியது என்ற காரணத்தினால் அந்த இணையத் தள பத்திரிக்கை முடக்கப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டது.

மலேசிய இன்சைடர் பத்திரிக்கையின் செய்தி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்ற காரணத்தினால்தான் இந்த நடவடிக்கை அவசியமானது என தொடர்பு மற்றும் பல்ஊடக அமைச்சர் டத்தோஸ்ரீ சாலே சைட் கெருவாக் அறிவித்திருந்தார்.