Home Featured தொழில் நுட்பம் கல்லாப் பெட்டியில் காசு தரவேண்டியதில்லை! திருமுகத்தைக் காட்டுங்கள் போதும்!

கல்லாப் பெட்டியில் காசு தரவேண்டியதில்லை! திருமுகத்தைக் காட்டுங்கள் போதும்!

697
0
SHARE
Ad

24-google-300சான் பிரான்சிஸ்கோ – ஓர் உணவகத்திற்கு சாப்பிடச் செல்கிறீர்கள் அல்லது ஒரு கடையில் ஒரு பொருள் வாங்குகிறீர்கள். வாங்கிவிட்டு, நேராக அந்தக் காலத்தில் கல்லாப்பெட்டி என வணிகர்கள் கூறும் – பணம் செலுத்தும் முகப்பிடம் சென்று – உங்களின் பணப்பையை எடுத்து, அல்லது சட்டைப் பைகளில் துழாவி அதற்குரிய பணத்தை எடுத்துக் கொடுக்கிறீர்கள்.

கூடிய விரைவில் இவையெல்லாம் மாறிவிடும் – கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள பரிட்சார்த்த திட்டம் ஒன்று வெற்றியடைந்தால்!

தற்போதைய நவீனத் தொழில்நுட்பத்தின் வழி கைத்தொலைபேசிகளைக் கொண்டு கட்டண முகப்பிடங்களில் கட்டணங்களைச் செலுத்தலாம். ஆப்பிள் நிறுவனத்தின் ‘ஆப்பிள் பே’ மற்றும் அண்ட்ரோய்ட் கருவிகளின் ‘அண்ட்ரோய்ட் பே’ மற்றும் ‘கூகுள் வால்லெட்” போன்ற தொழில்நுட்பங்கள் இது போன்றவையாகும்.

#TamilSchoolmychoice

ஆனால், இதற்கும் அடுத்த கட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்கின்றது கூகுள்.

McDonaldsஅமெரிக்காவின் தொழில்நுட்ப மையமான சிலிக்கோன் பள்ளத்தாக்குப் பகுதியில் – மேக் டொனால்ட்ஸ், பாப்பா ஜோன்ஸ் பீட்சா – போன்ற சில கடைகளில் இந்தப் பரிட்சார்த்தத் திட்டத்தை கூகுள் செயல்படுத்தி வருகின்றது.

எப்படி இயங்குகின்றது கூகுள் திட்டம்?

இதன்படி, உங்களின் கைத்தொலைபேசியில் இயங்கும் புளூடூத் மற்றும் வைஃபை எனப்படும் கட்டற்ற இணையத் தொடர்பு ஆகியவை மூலம் நீங்கள் கட்டணம் செலுத்தும் முகப்பிடத்தை நெருங்கியதுமே, அந்த முகப்பிடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் தொழில்நுட்பம் உங்களை அடையாளம் கண்டுவிடும்.

நீங்கள் கல்லாப் பெட்டியை நெருங்கியதும் அங்கு கட்டணம் பெறுபவரிடம் “நான் கூகுள் மூலம் கட்டணம் செலுத்த விரும்புகின்றேன் (I will pay with Google)” என்று கூறவேண்டும்.

உடனே, உங்களின் கைத்தொலைபேசியில் நீங்கள் “புரொபைல் (Profile)” படமாக வைத்திருக்கும் உங்களின் புகைப்படத்தை கூகுளின் தொழில்நுட்பம் ஒப்பிட்டுப் பார்த்து, உண்மையிலேயே வந்திருப்பது நீங்கள்தானா என்பதை உறுதி செய்யும்.

இதுவரையில் நீங்கள் கரங்களை எதற்குமே பயன்படுத்த வேண்டியதில்லை. சட்டைப் பைகளில் இருந்து எதையும் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. உங்களின் கைத்தொலைபேசியை வெளியே எடுக்கவும் வேண்டியதில்லை.

ஆனால், உங்களின் கைத்தொலைபேசியில் புளூடூத் எனப்படும் தொழில்நுட்பமும், வைஃபை அல்லது “மொபைல் டாத்தா-Mobile data”  என்ற இணையத் தொடர்பும் இருக்க வேண்டும். அவ்வளவுதான்!

Drive-in-signமேலும் சில விற்பனை மையங்களில், கட்டண முகப்பிடங்களில் புகைப்படக் கருவிகளைப் பொருத்தி, அதன் மூலம் உங்களின் முகத்தைப் புகைப்படம் எடுத்து, பொருத்திப் பார்த்து, கட்டணம் செலுத்துவது நீங்கள்தான் என்பதை உறுதி செய்துவிட்டு, நீங்கள் செலுத்த விரும்பும் கட்டணத்தை கழித்துக் கொள்ளும் நடைமுறையையும் கூகுள் சோதித்து வருகின்றது.

இந்தத் திட்டம் வெற்றியடைந்தால், டிரைவ்-இன் எனப்படும் காரில் இருந்து கொண்டே பொருட்களை வாங்கும் இடங்களில் சில வினாடிகளில் நீங்கள் பணத்தைச் செலுத்தி விட்டுப் பொருட்களைப் பெற்றுச் செல்ல முடியும்!

திட்டத்திற்காக காத்திருப்போம்!

-செல்லியல் தொகுப்பு