Home Featured வணிகம் வியட்னாமில் ஆப்பிள் நிறுவனத்தின் தகவல் தரவுத் தளம்!

வியட்னாமில் ஆப்பிள் நிறுவனத்தின் தகவல் தரவுத் தளம்!

617
0
SHARE
Ad

Apple and FBI to face off in courtஹானோய் – தொழில் நுட்பத்திலும், திறன்பேசிகள் (Smart Phone) எனப்படும் நவீன ஸ்மார்ட் போன் தயாரிப்பிலும் உலகின் முன்னணி நிறுவனமான ஆப்பிள், வியட்னாமில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் (4.1 பில்லியன் மலேசிய ரிங்கிட்) முதலீட்டில் தகவல் தரவுத் தளம் (database centre) ஒன்றை நிறுவுகின்றது.

ஆசிய நாடுகளைத் தளமாகக் கொண்டு இயங்கும் நோக்கத்தில் இந்த முதலீடு மேற்கொள்ளப்படுகின்றது என வியட்னாம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆய்வு மேம்பாட்டு மையமாகவும் செயல்படவிருக்கும் இந்தத் தளம், ஆப்பிள் நிறுவனத்தின் முதல் வியட்னாமியத் திட்டமாகும்.

அநேகமாக ஹானோய் நகரில் இந்தத் திட்டம் நிறுவப்படலாம்.

#TamilSchoolmychoice

வியட்னாமில் ஆர்வம் காட்டிவரும் ஆப்பிள் நிறுவனம் “ஆப்பிள் வியட்னாம் எல்எல்சி” என்ற துணை நிறுவனத்தை கடந்த அக்டோபரில் ஹோ சி மின் நகரில் தொடக்கியது. இதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்துல வணிகப் பிரிவு வியட்னாமில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவதோடு, தனது வணிகத்தை அந்நாட்டில் விரிவாக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றது.

தற்போது ஆப்பிள் சாதனங்கள் வியட்னாமில் உள்ள விநியோகஸ்தர்கள் மூலமும், உள்நாட்டு கைத்தொலைபேசி நிறுவனங்கள் மூலமும் வியட்னாமில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. நிறைய சாதனங்கள் பயணிகளால் வெளிநாட்டிலிருந்து நேரடியாக வாங்கப்பட்டு நாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன.

கூடிய விரைவில் ஆப்பிள் நேரடியாக தனது விநியோக மையங்களை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆய்வு மேம்பாட்டுக்காக 8 பில்லியன் அமெரிக்க டாலர்

vietnam-mapகடந்த ஆண்டு மட்டும் உலகம் எங்கும் ஆய்வு மேம்பாட்டுக்காக (Research & Development) ஏறத்தாழ 8 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஆப்பிள் செலவிட்டுள்ளது. இது 2015ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்திற்குக் கிடைத்த மொத்த வருமானத்தில் 3 சதவீதமாகும்.

தற்போது, அமெரிக்கா, பிரிட்டன், சீனா, தைவான், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் தனது ஆய்வு மேம்பாட்டு மையங்களை அமைத்துள்ள ஆப்பிள் புதிய மையமொன்றை ஜப்பானில் தற்போது நிர்மாணித்து வருகின்றது. அடுத்து ஜூன் மாதத்தில் இந்தியாவிலும் புதிய ஆய்வு மேம்பாட்டு மையத்தை ஆப்பிள் நிறுவனம் திறக்கவிருக்கின்றது.

உலக அளவில் ஆப்பிள் நிறுவனத்தின் வணிகப் போட்டியாளரான சாம்சுங் நிறுவனமும் வியட்னாமின் ஹானோய் நகரில் 300 மில்லியன் அமெரிக்க டாலரின் ஆய்வு மேம்பாட்டு மையத்தை நிறுவி வருகின்றது. இதனைத் தொடர்ந்துதான் ஆப்பிள் நிறுவனமும் வியட்னாமில் களமிறங்குகின்றது எனக் கருதப்படுகின்றது.