Home Featured நாடு “பணம் பத்திரமாக இருக்கின்றது” – சரவணன் விளக்கம்! “கணக்கைப் பரிசோதிக்க வருகின்றேன்” செர்டாங் எம்பி!

“பணம் பத்திரமாக இருக்கின்றது” – சரவணன் விளக்கம்! “கணக்கைப் பரிசோதிக்க வருகின்றேன்” செர்டாங் எம்பி!

937
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தான் தலைமை வகிக்கும் நாம் இயக்கத்தின் கணக்கு வழக்குகள் சர்ச்சையாகியிருப்பதைத் தற்காத்துப் பேசிய இளைஞர், விளையாட்டுத் துறை துணை அமைச்சர் 19 மில்லியன் ரிங்கிட் பணம் பத்திரமாக தனது அமைச்சின் கட்டுப்பாட்டிலேயே வைக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

Saravanan - MIC -இந்திய சமுதாயத்தில் மறுமலர்ச்சித் திட்டங்களுக்காக அமைக்கப்பட்ட ‘நாம்’ இயக்கம் விவசாயத் திட்டங்களில் குறிப்பாக, நாடு முழுக்க மிளகாய் பயிரிடும் திட்டங்களில் கவனம் செலுத்தி வந்தது.

விளையாட்டுத் துறை அமைச்சில் 107 மில்லியன் கையாடல் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து, சரவணன் தலைமையேற்றுள்ள ‘நாம்’ இயக்கத்திற்கு வழங்கப்பட்ட 19 மில்லியன் நிதி ஒதுக்கீடும் எதிர்க்கட்சிகளில் கவனத்தை ஈர்த்தது.

#TamilSchoolmychoice

ஜசெகவைச் சேர்ந்த பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவகுமார் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு வழங்கப்பட்ட எழுத்து மூலமான பதிலில் நாம் அறக்கட்டளைக்கு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன என்று அரசாங்கம் சார்பாக பதிலளிக்கப்பட்டது.

Ong-Kian-Ming-Serdang MPஇதனைத் தொடர்ந்து ஜசெகவின் செர்டாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கியான் மிங் (படம்) விடுத்த அறிக்கையொன்றில், மஇகா தலைவர்களைக் கொண்ட ஓர் அரசு சாரா இயக்கத்திற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்தது முறையற்றது எனத் தெரிவித்திருந்தார்.

நாம் விளையாட்டுத் துறை அமைச்சின் கீழ் வரவில்லை என்றும், அதன் கணக்குகள் தணிக்கை செய்யப்படவில்லை என்றும் ஓங் தொடர்ந்து குற்றம் சாட்டியிருந்தார்.

“ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். ஜசெக தலைவர்களைக் கொண்ட ஓர் அரசு சாரா இயக்கத்திற்கு பினாங்கு மாநில அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்திருந்தால் எப்படிப்பட்ட கண்டனங்கள் எழுந்திருக்கும்? இந்நேரம் ஊழல் தடுப்பு ஆணையத்தை அரசாங்கம் அனுப்பியிருக்கும்” என்றும் ஓங் தெரிவித்திருந்தார்.

சரவணன் பதில்

நாம் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த சரவணன், 19 மில்லியன் நிதி ஒதுக்கீடு பிரதமர் துறை அமைச்சால் வழங்கப்பட்டது என்றும், அந்தப் பணத்தை அமைச்சின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பதாகவும், “நான் நியாயமானவன் அந்தப் பணத்தைத் தொடவில்லை” எனக் கூறியிருக்கின்றார்.

நேரடியாக நாம் இயக்கத்திற்கு கொடுத்திருந்தால் சர்ச்சைகள் எழும் என்பதாலேயே விளையாட்டுத் துறை அமைச்சின் மூலமாக விநியோகிக்கப்பட அந்தப் பணம் அந்த அமைச்சிலேயே வைக்கப்பட்டதாகவும் சரவணன் கூறியிருக்கின்றார்.

கணக்குகளைப் பரிசோதிக்க வருகின்றேன் – சவாலை ஏற்றுக் கொண்ட ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்

இதற்கிடையில், நாம் அலுவலகம் வந்து அதன் கணக்கு வழக்குகளை செர்டாங் நாடாளுமன்ற  உறுப்பினர் ஓங், ஒரு கணக்காய்வாளரின் துணை கொண்டு பரிசோதிக்கலாம் எனவும் சரவணன் சவால் விடுத்திருந்தார்.

பதிலுக்கு அந்த சவாலை ஏற்றுக் கொள்வதாக ஓங் அறிவித்துள்ளார். நாம் அலுவலகம் செல்ல எப்போதும் தான் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.