Home Featured கலையுலகம் அவதாரம் இசைத்தொகுப்பு – 20 ஆண்டு காலக் கனவு! 10 ஆண்டு கால உழைப்பு!

அவதாரம் இசைத்தொகுப்பு – 20 ஆண்டு காலக் கனவு! 10 ஆண்டு கால உழைப்பு!

744
0
SHARE
Ad

கோலாலம்பூர் –  பாலன்ராஜ்.. மலேசிய இசைத்துறையில் பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என மூன்று துறைகளிலும் தனித்திறமைகளைக் கொண்டிருக்கும் ஒரு மண்ணின் மைந்தன்.

Avatharam

(இசையமைப்பாளர் பாலன்ராஜ்)

#TamilSchoolmychoice

சிகாமட்டிலுள்ள பத்து அன்னாம் என்ற இடத்தில் தோட்டத் தொழிலாளி ராஜூ- காமாட்சி தம்பதியரின் 5 –வது வாரிசாகப் பிறந்து, அம்மண்ணின் மணத்துடனே வளர்ந்து ஆழமான கனவுகளை தனக்குள் விதைத்துக் கொண்டவர்.

ஆலயங்களில் தனது தந்தை தேவாரத்தையும், திருவாசகத்தையும் மனமுருகிப் பாடுவதையும், சகோதரர் ராமசாமி, இசைஞானி இளையராஜாவின் பாடல்களை மனம் உருகிக் கேட்பதையும் பார்த்து தனக்குள் இசை ஆர்வத்தைப் புகுத்திக் கொண்ட பாலன்ராஜ், தனது வாழ்க்கைப் பயணத்தில் இசை மிகப் பெரிய மாற்றங்களை உண்டாக்கும் என்பதை அறிந்து அதனோடு பயணிக்கத் தொடங்கியுள்ளார்.

அதன்பின்பு, தனது சகோதரரே சொந்தமாக இசையமைக்கத் தொடங்க அவருடன் இணைந்து இசையமைக்கக் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார் பாலன்ராஜ்.

தனது 14-வயதில் இருந்து தனக்குப் பிடித்த ஒலிகளைப் பதிவு செய்து வந்த பாலன்ராஜ், பின்னர் வரிகள் எழுதியும், பாடியும் இசைத்துறையில் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டுள்ளார்.

ஒரு இசைத்தொகுப்பை உருவாக்க வேண்டும் என்ற கனவு தனது பள்ளிப் பருவக் காலத்திலேயே வந்துவிட்டதாகச் சொல்கிறார் பாலன்ராஜ். அக்கனவு தற்போது நினைவாக கடந்த 10 ஆண்டுகளாகக் கடுமையான போராட்டங்களை எதிர்க்கொண்டிருக்கின்றார்.

எஞ்சினியரிங் படிப்பு முடித்து பணியில் அமர்ந்த பின்னரும், இசையிலும் புதிய முயற்சிகளைச் செய்து வந்துள்ளார். அந்த சமயத்தில் அவருக்கு பக்க பலமாக இருந்தவர் தான் தியாகு முருகேசு.

??????????

(இசையமைப்பாளர் தியாகு முருகேசு)

இசைக் குடும்பத்தில் இருந்து வந்தவரான தியாகு முருகேசு, முறைப்படி இசை தயாரிப்பில் டிப்ளமோ படிப்பு படித்தவர்.

கடந்த 1990-ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 1500 இசை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி, வானொலி, மேடை நாடகங்கள் என பலதுறைகளில் சாதித்து, விருதுகள் பெற்றவரான தியாகு முருகேசு, பாலன்ராஜுக்கு உற்ற துணையாக இருந்து, பல அற்புதமான பாடல்களை உருவாக்கக் காரணமாக இருந்துள்ளார்.

அதன் பின்னர் இந்த இருவரின் கூட்டணியோடு இசையில் சங்கமித்தவர் எம்.ஜெகதீஸ். தனது சொந்த சகோதரரான தியாகு முருகேசு நிகழ்ச்சிகளில் பரபரப்பாக இயங்கத் தொடங்கிய சமயத்தில், அவருக்குப் பதிலாக பாலன்ராஜுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளார்.

Avatharam1

(இசையமைப்பாளர் எம்.ஜெகதீஸ்)

அதன் பின்னர் பாலன்ராஜ் – ஜெகதீஸ் கூட்டணியின் முயற்சியில் ‘மாயங்கள்’, உலகநாயகன் கமல்ஹாசனுக்காக ‘வானம் உனது உயரம் சொல்லும்’, ‘தூங்காவனம்’ ஆகிய பாடல்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது.

Avatharam3அதனை கமல்ஹாசனே கேட்டு இருவரையும் வாழ்த்தியது அவர்களுக்குக் கூடுதல் உற்சாகத்தை அளித்தது.

தற்போது எம்.ஜெகதீஸ் மலேசியாவின் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராகத் திகழ்ந்து வருகின்றார். ‘மறவன்’ திரைப்படத்தில் சைக்கோ மந்த்ராவுடன் இணைந்து அவர் இசையமைத்த ‘ரொக்கப் பணம் சாமி’ என்ற பாடல் பெரிதும் பேசப்பட்டது.

இப்படியாக இசையால் இணைந்த இந்த மூன்று இசை ஆர்வலர்களின் கூட்டணியில் உருவான 12 பாடல்களும் ஓர் இசைத்தொகுப்பாக உருமாறி, இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற அவர்களின் நெடுநாள் கனவு ‘அவதாரம்’ என்ற பெயரில் இசைத்தொகுப்பாக நாளை ஜூலை 3-ம் தேதி பெட்டாலிங் ஜெயா தோட்டமாளிகையில் அறிமுகமாகவுள்ளது.

Avatharam 4

இந்த இசைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 12 பாடல்களை ஏற்கனவே இசைத் துறையில் புகழ்பெற்ற லோகேஸ்வரன், சந்தேஸ், ஸ்விட்ச் லோக்கப், மிஸ்டா கேரி, ஹஸ்மிதா செல்வம், எஸ்எல்ஒய் ஸ்வாட் போன்ற பாடகர்களும், அர்ஜுன் ராவ், விக்னேஸ் மனோகர், தயாஷினி போன்ற வளர்ந்து வரும் இளம் கலைஞர்களும் பாடியுள்ளார்கள்.

‘மறவன்’ புகழ் ஹரிதாஸ் இந்த இசைத்தொகுப்பில் இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.

அதோடு, இந்நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், தமிழக சினிமாக்களில் இருந்து வரும் இசையும், பாடல்களும் மலேசியாவில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில், இங்கும்  திறமையும், உழைப்பும், பேரார்வமும் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் மலேசிய இசைத்துறைக்கு முன்னோடியாக இருந்த பல இசையமைப்பாளர்கள் தான் இந்த இசைத்தொகுப்பை வெளியீடு செய்யவுள்ளனர்.

தோட்டப்புறங்களில் இருந்து பட்டணம் நோக்கி பல கனவுகளும் வரும் இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள், தாங்கள் விரும்பியவற்றின் மீது அதிக அளவு ஆர்வத்தையும், கடும் உழைப்பையும் கொடுத்தால் எந்தக் கனவும் சாத்தியமாகும் என்பதற்கு பாலன்ராஜ் போன்றவர்கள் உதாரணமாகச் சொல்லலாம்.

இந்த மூன்று இசையமைப்பாளர்கள், கண்ட கனவின் மறுவடிவமாக ‘அவதாரம்’ என்ற இசைத்தொகுப்பு வெளியீடு நாளை பிரம்மாண்டமான முறையில் அறிமுகமாகின்றது.

இப்படியாக, பல சிறப்பம்சங்களோடு நாளை அறிமுகமாகவுள்ள ‘அவதாரம்’ இசைத்தொகுப்பு அறிமுக விழாவில் கலந்து கொள்ள நுழைவு முற்றிலும் இலவசம்.

என்றாலும், முன்பதிவு செய்து கொள்ள விரும்புவோருக்காக டிக்கெட் விற்பனையும் நடைபெற்று வருகின்றது.

இது குறித்த மேல்விவரங்களை அறிய விரும்புவோர் பாலன்ராஜ் – 012-7075752, எம்.ஜெகதீஸ் – 011-31769120, எம்எம்எம் குமார் – 016-6537740 ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம். நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களை அறிந்து கொள்ள மண்ணின் மைந்தன் (Mannin Mainthan Malaysia – MMM) பேஸ்புக் பக்கத்தை வலம் வரலாம்.

அவதாரம் முன்னோட்டம்: