Home Featured கலையுலகம் ஜோதிலட்சுமி : சில நினைவுகள் – சில தகவல்கள்!

ஜோதிலட்சுமி : சில நினைவுகள் – சில தகவல்கள்!

1620
0
SHARE
Ad

jothiletchumy-decd

சென்னை – திங்கட்கிழமை காலமான (8 ஆகஸ்ட் 2016) பிரபல நடிகை ஜோதிலட்சுமியின் பெயரைக் கேட்டதுமே பல ‘பெரிசுகளுக்கு’ இனிமையான, பசுமையான நினைவுகள் பின்னோக்கிப் போகும். பல ஆண்டுகளுக்கு கவர்ச்சி நடனம் என்றால் அது ஜோதிலட்சுமிதான் என அடித்துச் சொல்லும் அளவுக்கு தமிழ் – தெலுங்கு திரையுலகங்களைத் தனது ஆட்டத்தால் கட்டிப் போட்டவர் அவர். அவரைப் பற்றிய சில நினைவுகளும், தகவல்களும் இதோ:-

  • தமிழைப் பொறுத்தவரையில் எம்ஜிஆரின் ‘பெரிய இடத்துப் பெண்’ படம்தான் ஜோதிலட்சுமிக்கு முதல் படம் எனத் தகவல். அதில் முண்டா பனியனுடன் “கட்டோடு குழுலாட” என எம்ஜிஆர் பாடிக் கொண்டு வர அவருடன் இரண்டு பெண்கள் ஆடுவார்கள். அவர்களில் ஒருவர்தான் ஜோதிலட்சுமி. மற்றொருவர் மணிமாலா, பிற்காலத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவியானவர்.

jothiletchumy-decd.jpg-feature

  • அந்தக் காலத்தில் கதாநாயகிகள் இழுத்துப் போர்த்திக் கொண்டு வர, கவர்ச்சிக்காக எல்லாப் படங்களிலும் ஒரு காபரே நடனம் சேர்க்கப்படும். தமிழ், தெலுங்கு படங்களின் இலக்கணமே இதுதான் என்னும் அளவுக்கு ஒவ்வொரு படத்திலும் இத்தகைய நடனங்கள் இடம் பெற, அதில் ஜோதிலட்சுமி கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்தார்.
  • அவர் இல்லாத படங்களே இல்லை என்னும் அளவுக்கு அவரது ஆக்கிரமிப்பு தொடர்ந்தது. சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்கவும் செய்தார். எம்ஜிஆரின் நீரும் நெருப்பும், அடிமைப் பெண் போன்ற படங்களிலும் சிறு வேடங்களில் நடித்தார். அடிமைப் பெண் படத்தில் ‘காலத்தை வென்றவன் நீ’ பாடலுக்கு ஜெயலலிதாவுடன் ஆடியவர் ஜோதிலட்சுமி.
  • எம்ஜிஆரின் ரிக்‌ஷாக்காரன் படத்தில், “பம்பை உடுக்கை கட்டி, பரிவட்டம் மேலே கட்டி” என்ற பாடலுக்கு எம்ஜிஆருடன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஆட்டம் போட்டிருப்பார்.
#TamilSchoolmychoice

jothiletchumy-actress-decd

  • பின்னர் கவர்ச்சியும், சண்டைக் காட்சிகளும் கலந்த சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்தார். “கன்பைட் காஞ்சனா என்பது அத்தகைய படங்களில் ஒன்று.
  • பின்னர் அவரது தங்கை ஜெயமாலினியும் அக்காளின் அடிச்சுவட்டைப் பின்பற்றி கவர்ச்சி நடனங்கள் ஆட ஆரம்பித்தார். கொஞ்ச நாளைக்கு அவரது கொடியும் பறந்தது.
  • அதன்பின்னர், சிலுக்கு சிமிதாவின் வருகை, கண்களாலேயே அவர் காட்டிய வித்தியாசக் கவர்ச்சி – தமிழ்த் திரையுலகையே புரட்டிப் போட ஜோதிலட்சுமியும் ஓரங்கட்டப்பட்டார். பின்னர் முதுமையும் சேர்ந்து கொள்ள, திரைப்படங்களில் வாய்ப்பு குறைந்தது.

jyothilakshmi-

  • ஜோதிலட்சுமி போன்ற நடிகைகள் காட்டிய கவர்ச்சியைப் பின்னர் வந்த கதாநாயகிகளே காட்டத் தொடங்கியதும், கதாநாயகிகளே கவர்ச்சி ஆட்டம் போடத் தொடங்கியதும், தமிழ்த் திரையுலகத்தின் போக்கையே மாற்றியமைத்தது. காபரே நடனங்கள் நுழைக்கப்படுவதும் படங்களில் குறைந்த காரணத்தால், ஜோதிலட்சுமி போன்றவர்களுக்கும் வாய்ப்புகள் குறைந்தன.
  • “அவர் கடினமான உழைப்பாளி. பழகுவதற்கு இனிமையானவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிப் படங்களில் தனது இயல்பான நடிப்பின் மூலம் தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ளார். அவரது மறைவு திரைப்படத் துறையினருக்கு பேரிழப்பு” எனத் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார் ஜோதிலட்சுமியுடன் சில படங்களில் நடித்திருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
  • தமிழைவிட மிகப் பெரிய இரசிகர் கூட்டத்தை தெலுங்குப் படவுலகிலும் பெற்றிருந்தார் ஜோதிலட்சுமி.
  • அவரது மகள் ஜோதிமீனாவும் பின்னர் நடிக்க வந்தாலும், அவ்வளவாக புகழ் பெறவில்லை.
  • 68வது வயதில் காலமான ஜோதிலட்சுமிக்கு ரத்தப் புற்றுநோய் என்ற செய்தி பலருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கலாம். காரணம் அண்மையில் சில படங்களில் கூட அவர் அந்த நோயின் தாக்கம் தெரியாதவாறு நடித்திருந்தார்.

– இரா.முத்தரசன்