Home Featured தமிழ் நாடு சயாம் – பர்மா மரண இரயில்பாதை: சென்னையில் ஆவணப்பட வெளியீடு – திரையிடல்

சயாம் – பர்மா மரண இரயில்பாதை: சென்னையில் ஆவணப்பட வெளியீடு – திரையிடல்

898
0
SHARE
Ad

unnamed

சென்னை – தமிழுலகம் அதிகம் அறிந்திடாத துயரம் தான், சயாம்(தாய்லாந்து)- பர்மா மரண இரயில்பாதை. சிங்கப்பூர்-மலாயாவை இரண்டாம் உலகப்போர் நேரத்தில் கைப்பற்றிய ஜப்பானிய இராணுவம், அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைவதற்காக மிக நீண்ட இரயில்பாதை ஒன்றை அமைத்தது. அந்தப் பணிக்கு 30,000 பிரிட்டிஷ்-ஆஸ்திரேலியப் போர்க்கைதிகளோடு, ஒன்றரை லட்சம் (மலாயாவின் இரப்பர் தோட்டத் தொழிலாளர்கள்) தமிழர்களையும், 50,000 பர்மியர்கள், சீனர்கள், இந்தோனேசியர்கள் மற்றும் மலாய் இனத்தவர்களையும் கொண்டு சென்றது.

ஒரே நாளில் சயாம் மற்றும் பர்மா ஆகிய இருமுனைகளில் தொடங்கப்பட்ட இந்த இரயில்பாதை என்னும் துயரக்கதையின் பக்கங்கள் கனமானவை. ஏறத்தாழ 72 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இந்த கொடிய சம்பவத்தில் 1,00,000 தமிழர்கள் உள்ளிட்ட 1,50,000 ஆசியத்தொழிலாளர்கள் தம் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். கண்ணீரைப் பெருக வைக்கும் இச்சம்பவம் 1 மணி நேர ஆவணப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

unnamed

மரண இரயில்பாதையில் பணியாற்றி உயிருடன் மீண்டு, இன்று தங்களது வாழ்நாளின் இறுதிக்கணங்களை எண்ணிக் கொண்டிருக்கும் முதியவர்கள் பலர் அந்த நினைவலைகளையும், மனித உரிமைகள் பற்றிக் கவலைப்படும் எவரின் உள்ளத்திலும் ஆழமான காயங்களை உருவாக்கும் பல சம்பவங்களையும் பகிர்ந்துள்ளனர்.

பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர்கள், ஆய்வாளர்களின் பங்கேற்பில், உரிய ஆவணங்கள்/ஆதாரங்களோடு பர்மா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தியா ஆகிய 5 நாடுகளில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கான ஆதாரங்கள்/தகவல்கள் ஆகியவை கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா,சிங்கப்பூர், இலங்கை, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் ஆவணக் காப்பகங்கள் மற்றும் நூலகங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன.

தனது ஆய்வுப்பணியின் நிமித்தம் துவங்கிய பயணத்தினை சுமார் 10 ஆண்டுகால கடுமையான உழைப்பினால் ஒரு ஆவணப்படமாக நமக்கு கொடுத்திருக்கிறார் இயக்குனர் குறிஞ்சிவேந்தன்.

தமிழினத்தின் அறியப்படாத மற்றுமொரு துயர்சார்ந்த இந்த வரலாற்று நிகழ்வின் ஆவணப்படத்தினை முதன்முறையாக சென்னையில் திரையிட ‘நிமிர்’ அமைப்பு ஏற்பாடு செய்திருக்கிறது. இதற்கான ஒத்துழைப்பினை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் , புலம்பெயர் ஆய்வு மையம் வழங்கி இருக்கிறது.

ஆவணப்படம் திரையிடல் பற்றிய மேல்விவரங்கள்:

நாள்: 27 ஆகஸ்ட் 2016

நேரம்: மாலை 5 மணி

இடம்: ஆர்.கே.வி ஸ்டூடியோஸ், வடபழனி (வடபழனி பேருந்து நிலையம் எதிரில்)

தொடர்பிற்கு: 9884072010

தகவல்: ஆன்டனி ராஜ் (RapportAsia)