Home Featured நாடு ஜோங் நம் மரணத்திற்கு மலேசியா தான் காரணம் – வடகொரியா குற்றச்சாட்டு!

ஜோங் நம் மரணத்திற்கு மலேசியா தான் காரணம் – வடகொரியா குற்றச்சாட்டு!

606
0
SHARE
Ad

kim-jong-nam-0சியோல் – கடந்த வாரம் தங்களது நாட்டவர் கோலாலம்பூரில் கொல்லப்பட்டதற்கு, மலேசியா தான் காரணம் என வடகொரியா குற்றம் சாட்டுவதாக அந்நாட்டு தேசிய செய்தி ஊடகமான கேசிஎன்ஏ தெரிவிக்கின்றது.

கடந்த பிப்ரவரி 13-ம் தேதி, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வடகொரிய தூதரகக் கடப்பிதழ் வைத்திருந்த ஒருவர், மாரடைப்பால் காலமானதாக மலேசியா முதலில் அறிவித்ததாகக் கூறும் கேசிஎன்ஏ செய்தி நிறுவனம், பின்னர் அவர் விஷம் பாய்ச்சிக் கொல்லப்பட்டதாக தனது நிலைப்பாட்டை உடனடியாக மாற்றிக் கொண்டதாகத் தெரிவித்திருக்கிறது.

மேலும், மலேசியாவின் இந்த அநியாயமான செயல், வடகொரிய எதிர்ப்பாளர்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டதாகவும் அந்த செய்தி நிறுவனம் கூறுகின்றது.

#TamilSchoolmychoice

அதோடு, இறந்தவர் தூதரகக் கடப்பிதழ் வைத்திருந்தவர் என்பதை அறிந்தும், மலேசியா அனைத்துலகச் சட்டத்தை மீறி, அவரது சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்திருக்கிறது என்றும் கேசிஎன்ஏ குற்றம் சாட்டியிருக்கிறது.

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரர் கிம் ஜோங் நம், கடந்த வாரம் மலேசியாவில் கொலை செய்யப்பட்டதை அடுத்து, இருநாட்டு தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த கொலை விசாரணையை மலேசியக் காவல்துறை கையாண்டு வருவதை வடகொரியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது. ஆனால் மலேசியக் காவல்துறை இந்தக் கொலை விவகாரத்தில் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்களை வெளியிட்டு வருகின்றது.

உச்சக்கட்டமாக நேற்று தேசிய காவல்படைத் தலைவர் காலிட் வெளியிட்ட அறிக்கையில்,  கோலாலம்பூரில் இருக்கும் வடகொரிய தூதரகத்தைச் சேர்ந்த இரண்டாம் நிலை அதிகாரி ஒருவரும், வடகொரிய விமான நிறுவனத்தின் பணியாளர் ஒருவரும் இந்தக் கொலை தொடர்பாக விசாரணை செய்யப்படவிருப்பதாகத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.