Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ – மசாலா கதை, கவர்ச்சி ஆட்டம், லாஜிக்னா என்ன?

திரைவிமர்சனம்: ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ – மசாலா கதை, கவர்ச்சி ஆட்டம், லாஜிக்னா என்ன?

1652
0
SHARE
Ad

MSKS2கோலாலம்பூர் – வில்லன் அசுடோஸ் ராணா, தனது தம்பி வம்சியோடு பல கடத்தல், கட்டப்பஞ்சாயத்துகளைச் செய்து, அமைச்சர்களில் இருந்து அடிமட்ட அரசியல்வாதிகள் வரை அனைவரையும் ஆட்டிப் படைக்கிறார். நியாயமான போலீஸ் உயர் அதிகாரியான சத்யராஜ், அதைத் தடுக்க முடியாமல், “ஒன்ன அடக்க மீசைய முறுக்கிக்கிட்டு எவனாச்சும் ஒருத்தன் வருவாண்டா!” என்று சவால் விட்டுக் காத்திருக்கிறார்.

அப்ப தான் நம்ம ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ லாரன்ஸ் (சிவா) ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு மாற்றம் வாங்கிட்டு வராரு. வந்தவரு வில்லன அடக்குவாருன்னு பார்த்தா, கண்ணாபின்னான்னு ரௌடிகளோட சேர்ந்துக்கிட்டு லஞ்சம் வாங்குறாரு, குத்துப்பாட்டுக்கு ஆடுறாரு, நிக்கி கல்ராணிய விரட்டி விரட்டி காதலிக்குறாரு. ஏன் இப்படி எல்லாம் நடந்துக்குறாரு? என்ற கேள்விக்கு ஒரு பிளாஷ்பேக் வச்சிருக்காங்க.

MSKS4திடீர்னு ஒரு கொலை நடக்குது, அது சிவாவ ரொம்பவே பாதிக்குது. அதோடு, சத்யராஜுக்கும், லாரன்சுக்கும் இடையில் இருக்கும் உறவுமுறை பற்றி சொல்லி, வில்லன் ஒரு குண்டத் தூக்கிப் போடுறாரு. இந்த ரெண்டு டுவிஸ்ட்டும், சாதாரணமா இருந்த சிவாவ, ‘மொட்ட சிவாவா.. அதுவும் ரொம்ப கெட்ட சிவாவா’ மாற்றுது.. அதுக்குப் பிறகு வில்லன் கதை என்னாகுது? என்பது தான் மீதிக் கதை..

#TamilSchoolmychoice

படத்துல என்ன இருக்கு?

கொஞ்சம் சேட்டைக்கார போலீசாகவும், பிறகு ‘ரொம்பவே’ போலீசாகவும் இரண்டு விதமாக வித்தியாசம் காட்டி நடித்து ரசிக்க வைத்திருக்கிறார் லாரன்ஸ். படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் அனைத்திலும் அவரது தனித்துவமான நடனம் மிகவும் ரசிக்க வைக்கிறது.

‘காஞ்சனாவில்’ எதிரிகளைப் பேயடி அடித்த மாதிரி, இப்படத்தில் ஒற்றை ஆளாக எதிரிகளை பிரித்து மேய்கிறார் லாரன்ஸ். படத்தில் அவரை அவரே, “அரைகுறை மெண்டல் போலீஸ்’ என்று சொல்லிக் கொள்கிறார். அதுக்காக கொஞ்சமாவது லாஜிக் இருக்க வேண்டாமா போலீஸ்கார்?

MSKSகதாநாயகி நிக்கி கல்ராணி.. சன்டிவி செய்தியாளராக நடித்திருக்கிறார். நிக்கி வரும் காட்சிகளில் அவரது முகத்தை விட இடையைத் தான் கேமரா அதிகம் காட்டுகிறது. லாரன்சுடன் குத்துப்பாடலுக்கு நன்றாக ஆடியிருக்கிறார். நடிப்பதற்கு ஏதாவது இருக்கா? என்று இயக்குநர் சாய்ரமணியிடம் ஒருமுறை கூட கேட்டிருக்கவே மாட்டார் போல.

‘ஹரஹரமகாதேவகி’ பாடலுக்கு வந்து கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார் லஷ்மி ராய். டிங்கு சர்ச்சையால் இந்தப் பாடல் நன்றாகவே பிரபலமாகியிருக்கிறது. லஷ்மி ஆடியவுடன் அதற்கு கூடுதல் மவுசு வந்துவிட்டது.

ஸ்ரீமன், கோவை சரளா, தம்பி இராமையா, சாம்ஸ், சதிஸ், மனோபாலா, தேவதர்ஷினி, மதன்பாப் என நகைச்சுவைக்கென்று ஒரு பெரிய பட்டாளமே இருக்கிறது. ஆனால் காமெடிக்காட்சிகள் அந்தளவிற்கு எடுபடவில்லை.

MSKS3திரைக்கதையைப் பொறுத்தவரையில், முதல்பாதியில் இருக்கும் சுவாரசியம், பிற்பாதியில் ‘மொட்ட சிவா’ அவதாரம் எடுத்த பிறகு காணாமல் போய்விடுகிறது. காரணம், முற்பாதியில் வில்லன் கதாப்பாத்திரத்திற்கு இருக்கும் கனம், இரண்டாம் பாதியில் அப்படியே ஐஸ்கட்டியாக உருகி, கடைசியில் காமெடிப் பீசாக ஆக்கிவிட்டிருக்கிறார் இயக்குநர்.

சர்வேஸ் முராரி ஒளிப்பதிவில் கதைக்கேற்ப காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன. அம்ரிஸ் கணேஷ் இசையமைப்பில் குத்துப்பாட்டு ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுக்கக் கூடியவையாக பாடல்கள் இருக்கின்றன.

யாருக்கான படம்?

எனக்கு கதை, லாஜிக் பற்றி கவலையே இல்லங்க.. அனல் பறக்குற மாதிரி சண்டை இருக்கணும்,  காட்சிகள் சும்மா தீயாய் நகரணும், “டாய்..” “ஏய்..” “வாடா” இப்படியாக ஸ்பீக்கர் வைக்காமலேயே ஊரே கேக்குற மாதிரி ஹீரோவும், வில்லனும் மாறி மாறி போனில் கத்தணும்.. இப்படிப்பட்ட படம் தான் எனக்கு வேணும்னு நெனக்குறவங்க.. இந்தப் படத்த தாராளமா போய் பார்க்கலாம்.

MSKS1குறைஞ்சது ரெண்டு குத்துப்பாட்டாவது இருக்கணும்.. ஹீரோவும், ஹீரோயினும் நல்லா குத்தாட்டம் போட்டிருக்கணும்னு நெனக்குறவங்களுக்கு இங்க ரெண்டுப் பாட்டு கூடுதலாகவே இருக்கு. லஷ்மி ராயும், நிக்கி கல்ராணியும் அந்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

மற்றபடி, லாரன்ச காக்கிச்சட்டையில பார்த்திட்டு, அடடா.. சூர்யாவின் ‘சிங்கம்’ படம் மாதிரி, திரையரங்க விட்டு வெளியே வரும் போது அப்படியே நெஞ்ச நிமித்திக்கிட்டு, “போலீஸ்காரன்னா இப்படி இருக்கணும்பா” சொல்ற மாதிரி படம்னு நெனச்சு போனா ஏமாற்றம் தான்.

-ஃபீனிக்ஸ்தாசன்