Home Featured நாடு அரசியல் பரபரப்பு சூழலில் கேமரன் மலைக்கு சுப்ரா 2 நாள் வருகை!

அரசியல் பரபரப்பு சூழலில் கேமரன் மலைக்கு சுப்ரா 2 நாள் வருகை!

741
0
SHARE
Ad

subra-dr

கேமரன் மலை – அண்மைய சில வாரங்களாக அரசியல் ரீதியாக அனைவரின் பார்வையும் பதிந்திருக்கும் நாடாளுமன்றத் தொகுதியான கேமரன் மலைக்கு இன்று சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாள் வருகை மேற்கொள்ளும் மஇகா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான அங்கு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

மஇகா 2004 முதல் வெற்றி பெற்றுத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் கேமரன் மலை தொகுதியை மஇகா யாருக்கும் விட்டுக் கொடுக்காது என்றும் மீண்டும் போட்டியிடும் என அதன் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

ஆனால், மைபிபிபி கட்சித் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் (படம்) தொடர்ந்து கேமரன் மலைக்கு வருகை தந்து சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, “கேமரன் மலையில் மைபிபிபி போட்டியிடும். வேட்பாளராக நானே நிற்பேன்” என அடிக்கடி அறிவித்து வருகிறார்.

Kayveas“நான்தான் கேமரன் மலையில் போட்டியிடப் போகிறேன். முடிந்தால் தடுத்துப் பாருங்கள்” என்றுகூட அவர் கூறியதாக தமிழ் நாளேடுகள் செய்திகள் வெளியிட்டிருந்தன.

ஆனால், தேசிய முன்னணியில் பொதுவாக, இதுபோன்ற முரட்டுத் தனமான, முரண்டு பிடிக்கும் நடைமுறைகள் உறுப்பியக் கட்சிகளின் தேசியத் தலைவர்களால் பின்பற்றப்படுவதில்லை.

தேசிய முன்னணி (தே.மு) உறுப்பியக் கட்சிகள் தொடர்ந்து வெற்றி பெற்றத் தொகுதிகளை அந்தக் கட்சிகளிடம் இருந்து பிடுங்கி மற்ற கட்சிகளுக்குத் தாரைவார்க்கும் போக்கை தேசிய முன்னணி எப்போதுமே செய்ததில்லை. வலுவான அரசியல் காரணங்கள் இருந்தால் மட்டும், ஒரு கட்சி ஒரு தொகுதியில் தொடர்ந்து தோல்வியடைந்தால் மட்டுமே தொகுதிப் பரிமாற்றங்கள் வழக்கமாக மேற்கொள்ளப்படும்.

தொகுதிப் பரிமாற்றம் அப்படியே செய்யப்பட்டாலும், யார் வேட்பாளர் என்னும் இறுதி முடிவைப் பிரதமரும், தேசிய முன்னணித் தலைவருமான நஜிப் துன் ரசாக்தான் எடுப்பார். வேட்பாளர் யார் என்பதை தே.மு. உறுப்பியக் கட்சிகளின் தேசியத் தலைவர்கள் பரிந்துரைத்தாலும், பல்வேறு காரணங்களை அடிப்படையாக வைத்து பிரதமர்தான் இறுதி முடிவை எடுப்பார்.

MIC Logo 440 x 215இத்தகைய சூழ்நிலையில் எப்போது தேர்தல், எந்தக் கட்சிக்கு எந்தத் தொகுதி, என்பது போன்ற அடிப்படை விவகாரங்களிலேயே தேசிய முன்னணி கட்சிகளுக்கிடையில் புரிந்துணர்வும், இணக்கமும் ஏற்படாத சூழ்நிலையில், மஇகா பாரம்பரியமாகப் போட்டியிட்டு வரும் ஒரு தொகுதிக்குள் நுழைந்து “இங்குதான் நான் போட்டியிடப் போகிறேன்” என்று கேவியஸ் கூறிவருவது தேசிய முன்னணியின் நடைமுறைகளுக்கும், பாரம்பரிய அரசியல் வழக்கங்களுக்கும் எதிரானதாகவும், முரண்பாடானதாகவும் பார்க்கப்படுகின்றது.

மைபிபிபி கட்சிக்கு எந்தத் தொகுதி?

இப்போது மைபிபிபி என உருமாற்றம் கண்டிருக்கும் பிபிபி கட்சி, நீண்ட காலமாக தேசிய முன்னணியில்உறுப்பியக் கட்சியாக இருந்தாலும் பல தேர்தல்களில் அந்தக் கட்சிக்கு நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டதில்லை.

myppp-logoமுதன் முறையாக, 2004 பொதுத் தேர்தலில் கெராக்கான் கட்சி விட்டுக் கொடுத்த தைப்பிங் தொகுதியில் பிபிபி சார்பில் கேவியஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2008 பொதுத் தேர்தலிலும் மீண்டும் கெராக்கான் கட்சி விட்டுக் கொடுத்த காரணத்தால், அதே தைப்பிங் தேர்தலில் போட்டியிட்டாலும், ஜசெக வேட்பாளரிடம் தோல்வி கண்டார்.

2013 பொதுத் தேர்தலில் கேவியஸ் எந்த நாடாளுமன்றத் தொகுதியிலும் போட்டியிடவில்லை என்றாலும், இறுதி நேரத்தில் பேராக் மாநிலத்தில் உள்ள பாசிர் பெடாமார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி கண்டார் கேவியஸ்.

அதேசமயம், 2013 பொதுத் தேர்தலிலும் கெராக்கான் கட்சி தனது கெப்போங் நாடாளுமன்றத் தொகுதியை விட்டுக் கொடுக்க, அங்கே பிபிபி சார்பாக சந்திரகுமணன் போட்டியிட்டுத் தோல்வி கண்டார்.

Bharatpt D5கேமரன் மலையின் அழகுத் தோற்றம்…

சில நாட்களுக்கு முன்னால் பேராக் மந்திரி பெசார் சாம்ரி அப்துல் காதிர் “தொடர்ந்து இரண்டுமுறை பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியுற்றவர்களுக்கு தேசிய முன்னணி மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்காது” என அறிவித்திருந்தார். இந்த நடைமுறை பின்பற்றால், 2008, 2013 என தொடர்ந்து 2 தேர்தல்களில் தோல்வியுற்ற கேவியசுக்கு மீண்டும் பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது.

இந்த சூழ்நிலையில்தான் தொடர்ந்து மைபிபிபி சார்பில் கேமரன் மலையில் நானே போட்டியிடுவேன் என கேவியஸ் தன்னிச்சையாகக் கூறி வருகின்றார். உண்மை நிலவரம் என்னவென்றால், கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களிலும் கெராக்கான் கட்சி விட்டுக் கொடுத்ததுபோல் ஏதாவது ஒரு தே.மு.உறுப்பியக் கட்சி தனது தொகுதியை விட்டுக் கொடுத்தால்தான் மைபிபிபி ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட முடியும்.

புதிய நாடாளுமன்றத் தொகுதிகள் எதுவும் இல்லாத காரணத்தால், ஏதாவது ஒரு தே.மு.கட்சி தனது தொகுதியை விட்டுக் கொடுத்தால்தான் மைபிபிபி பொதுத் தேர்தலில் போட்டியிட முடியும். மஇகாவுக்கு இருப்பது போன்று மைபிபிபி கட்சிக்கென ஒதுக்கப்பட்ட தொகுதிகள் என எந்த நாடாளுமன்றத் தொகுதியும் இல்லை.

எனவே, ஏதாவது ஒரு கட்சியுடன் தேசிய முன்னணிக்கே உரிய சகோதரத்துவத்துடனும் பரஸ்பர அரசியல் நல்லெண்ணத்துடனும் பேச்சு வார்த்தைகள் நடத்தி தொகுதியை முடிவு செய்வதை விட்டு விட்டு, அதிரடியாக மஇகாவின் பாரம்பரியத் தொகுதிக்குள் நுழைந்து எதிர்மறையான பிரச்சனைகளைக் கிளப்பி வருவது கேமரன் மலை மஇகாவினரிடையே கடும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக அரசியல் பரபரப்பும், வெப்பமும், குளிர்ப் பிரதேசமான கேமரன் மலையில் அதிகரித்து வரும் நிலையில், இரண்டு நாள் வருகை மேற்கொண்டு மஇகா தேசியத் தலைவருமான சுப்ரா அங்கு வருகை தருவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

சுப்ரா சில முக்கிய அறிவிப்புகளையும் வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

-செல்லியல் தொகுப்பு