Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: அன்பானவன்,அசராதவன்…– பார்க்கக் கூடாத அலங்கோலம்!

திரைவிமர்சனம்: அன்பானவன்,அசராதவன்…– பார்க்கக் கூடாத அலங்கோலம்!

977
0
SHARE
Ad

தமிழ்த் திரைப்பட உலகின் பெயரைக் கெடுப்பதற்கென்றே, படம் பார்த்தவர்கள் வாய்வலிக்கத் திட்டும் வண்ணம், சமூக ஊடகங்களில் சினிமா இரசிகர்கள் கிழி கிழியென்று சமூக ஊடகங்களில் குமுறும்படி, ஒரு சில படங்கள் அவ்வப்போது வெளிவரும்.

அந்த வரிசையில் தங்கப்பதக்கம் பெறும் அளவுக்கு பெருமை பெறக்கூடிய படம் ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ –

#TamilSchoolmychoice

படம் பார்த்து முடித்து விட்டு வரும்போது நமக்கு எழும் கேள்வி – சிம்புவை வைத்து இயக்குநர் ஆதிக் இரவிச்சந்திரன் “செஞ்சாரா?’ – அல்லது இயக்குநரை வைத்து சிம்பு “செஞ்சாரா?” என்பதுதான்!

துண்டு துண்டாக, சம்பந்தம் சம்பந்தமில்லாத காட்சிகள். தொடர்பில்லாத திரைக்கதை. துபாயில் படம் ஆரம்பிக்கிறது. சிம்பு பெரிய துப்பாக்கிக் கடத்தல் கும்பல் தலைவன் என கஸ்தூரி (பழைய நடிகை) கவர்ச்சி உடை போலீசாக வந்து சொல்லிவிட்டு, சிம்புவின் நண்பனிடம் கதை கேட்க ஆரம்பிக்கிறார். ஆனால் படத்தின் இறுதிவரையில் சிம்பு எப்படி துபாயில் கடத்தல் மன்னனானார் என்பது சொல்லப்படவே இல்லை!!!

கதை – திரைக்கதை

முதலில் மதுரையில் ரவுடியாகச் சுற்றித் திரியும் சிம்பு அங்கு ஸ்ரேயாவைக் காதலிக்கிறார். ஒரு பிரச்சனையில் சிறைக்குப் போகிறார் சிம்பு. இடையில் ஸ்ரேயாவுக்கு வேறொருவருடன் திருமணம் செய்து வைக்கப்பட, அதனைத் தடுத்து நிறுத்த நண்பர்கள் சிம்புவைக் காப்பாற்றி வெளியே கொண்டு வருகிறார்கள். ஆனால் சிம்புவோ மனம் மாறி, ஸ்ரேயா நன்றாக இருக்கட்டும் என்று கூறிவிட்டு நண்பர்களுடன் பாண்டிச்சேரி செல்கிறார். பின்னர் அங்கிருந்து துபாய் சென்று பெரிய கடத்தல் மன்னனாகிறார் என்பது வாய்வழியாக சொல்லப்பட்டாலும், அது இறுதி வரை காட்டப்படவே இல்லை.

ஸ்ரேயாவும் அதன் பிறகு என்ன ஆனார் என்பதும் தெரியவில்லை.

இடையில், ஏறத்தாழ 50 வயது முதியவராக உலா வருகிறார் சிம்பு. அப்போது தமன்னா கதைக்குள் வர, அவரைக் காதலிக்கும் சிம்புவை எல்லோரும் அஸ்வின் தாத்தா என்று அழைக்கிறார்கள். தமன்னாவுடன் கல்யாணம் எனக் கனவு காணும் சிம்புவின் முன்னால் ஒருவரைக் கொண்டு வந்து தமன்னா காட்டி, இவரைத்தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்கிறார்.

அவர் யார் என்று பார்த்தால், அவர் இளவயது – இன்னொரு சிம்பு. படமும் அத்தோடு முடிந்து விடுகிறது.

ஆனால், இவ்வளவு மோசமாக படம் எடுத்தும் இறுதிக் காட்சியில் பாகுபலி அளவுக்கு – அடுத்தது என்ன நடக்கப் போகிறது என்பதை இரண்டாம் பாகத்தில் பாருங்கள் என்று காட்டும் இயக்குநரின் துணிச்சலைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

இத்தனை அலங்கோலமான திரைக்கதையோடு நகரும் படத்தில் சிம்புவின் ஹீரோயிசத்தைக் காட்டும்போது மட்டும் ரஜினி, எம்ஜிஆரை விட பெரிய அளவில் காட்டியிருக்கிறார்கள்.

சிம்புவோடு, ஸ்ரேயா, தமன்னா என இரண்டு கவர்ச்சிக் கதாநாயகிகள் என்பதால் முத்தக் காட்சிகள் இருக்குமே என ஆவலோடு போகிறவர்களை ஏமாற்றாமல் சிம்புவுக்கு முத்தக் காட்சிகள் வைத்திருக்கிறார்கள். ஆனால் யாரோடு என்றால் ஸ்ரேயாவின் அப்பாவாக வரும் ஒய்.ஜி.மகேந்திரனுடன்! ஐந்தாறு முறை காட்டுகிறார்கள், படு கேவலமான அந்தக் காட்சிகளை!

படத்தின் ஒரே ஆறுதல், மொட்டை இராஜேந்திரன், விடிவி கணேஷ், கோவை சரளா கோஷ்டியின் நகைச்சுவை அலம்பல்கள்.

படம் பார்த்து விட்டு, இதை எப்படியெல்லாம் திரைவிமர்சனத்தில் திட்டலாம் – அதற்குப் பொருத்தமான வார்த்தைகள் என்ன என நாம் யோசித்துக் கொண்டிருந்த கடந்த ஓரிரண்டு நாட்களிலேயே, ஏராளமான சினிமா இரசிகர்கள் படத்தை கன்னா பின்னாவென்று, காறித் துப்பித் திட்டித் தீர்த்து விட்டார்கள் – சமூக ஊடகங்களில்!

இப்படியெல்லாம் படம் எடுப்பவர்களும் இருப்பார்களா – அதில் சிம்பு போன்றவர்களும் நடிப்பார்களா என நம்மைச் சிந்திக்க வைத்திருக்கும் இந்தப் படத்தை மறந்தும் கூட பார்த்து விடாதீர்கள்!

ஒரு படம் எப்படி எடுக்கப் படக் கூடாது என்பது குறித்து விளக்கம் பெற நினைப்பவர்கள் மட்டும் பார்க்கலாம் – படிப்பினைக்காக!

-இரா.முத்தரசன்