Home நாடு முன்னாள் அரசியல் எதிரி படாவி தொகுதியில் களமிறங்கிய மகாதீர்!

முன்னாள் அரசியல் எதிரி படாவி தொகுதியில் களமிறங்கிய மகாதீர்!

978
0
SHARE
Ad

கப்பளா பத்தாஸ் – தனது முன்னாள் அரசியல் எதிரியான துன் அப்துல்லா படாவியின் சொந்த நாடாளுமன்றத் தொகுதியான பினாங்கு மாநிலத்தின் கப்பளா பத்தாசில் நேற்று பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் சக தலைவர்களுடன் களமிறங்கி பெர்சாத்து கட்சியின் தலைவரான துன் மகாதீர் பிரச்சாரம் செய்தார்.

mahathir-lim guan eng-kepala batas-18082017மகாதீருடன் மேடையில் பக்காத்தான் ஹரப்பான் தலைவர்கள்...

கப்பளா பத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பிரதமராகவும் இருந்த துன் அப்துல்லா படாவியை பதவியை விட்டு இறக்குவதில் முக்கியப் பங்காற்றியவர் மகாதீர். அதைத் தொடர்ந்து 2013 பொதுத் தேர்தலில் கப்பளா பத்தாசில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்ட படாவிக்குப் பதிலாக அவரது முன்னாள் அரசியல் செயலாளர் டத்தோஸ்ரீ ரிசால் மரிக்கான் அந்தத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

#TamilSchoolmychoice

கப்பளா பத்தாஸ் தொகுதியைக் கைப்பற்றும் நோக்கில் அங்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தில் மகாதீரோடு, பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், பெர்சாத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், மகாதீரின் மகன் முக்ரிஸ் மகாதீர், ஜசெக தலைவர் லிம் கிட் சியாங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு வாக்களியுங்கள் எனக் கூட்டத்தினரைக் கேட்டுக் கொண்ட மகாதீர், “குண்டர்களும், திருடர்களும் நாட்டை ஆள அனுமதிக்காதீர்கள்” என்றும் அறைகூவல் விடுத்தார்.

நஜிப் மற்றும் படாவியின் ஆட்சிக் காலத்துக்கு முன்பு இருந்தது போல் (அதாவது தனது ஆட்சிக் காலத்தின்போது) மலேசியாவை மாற்ற ஆட்சி மாற்றம் தேவை என்றும் மகாதீர் கூறினார்.

தனக்கு 92 வயதாகி விட்டதால் அதிக நேரம் நிற்கவோ, உரையாற்றவோ முடியாது என்றாலும், இன்னும் தன்னால் அதிகமாக உழைக்க முடியும் என்றும் மகாதீர் தெரிவித்தார்.

மகாதீர் தலைமையிலான பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி, தற்போது தேசிய முன்னணி வசமுள்ள தொகுதிகளைக் குறிவைத்துப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது.

அதே வேளையில், பெல்டா நிறுவனத்தில் தோன்றியிருக்கும் ஊழல் புகார்களைத் தொடர்ந்து பெல்டா நிலக் குடியேற்றம் அமைந்திருக்கும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளைக் குறிவைத்தும் பக்காத்தான் ஹரப்பான் தனது பிரச்சாரங்களைத் தீவிரமாக முடுக்கி விட்டிருக்கிறது.

படம்- நன்றி: லிம் குவான் எங் டுவிட்டர் பக்கம்