Home நாடு “தமிழ் மலர் பத்திரிக்கை அலுவலக சம்பவம் – சமாதானம் செய்யவே சென்றேன்” சரவணன் விளக்கம்

“தமிழ் மலர் பத்திரிக்கை அலுவலக சம்பவம் – சமாதானம் செய்யவே சென்றேன்” சரவணன் விளக்கம்

2118
0
SHARE
Ad

Saravanan-deputy minister-featureகோலாலம்பூர் – மஇகா கூட்டரசுப் பிரதேசம் குறித்தும், அதன் தலைவர் டத்தோ எம்.சரவணன் குறித்தும் எழுதப்பட்ட சில விவகாரங்கள் தொடர்பில் விளக்கம் கேட்க, மஇகா கூட்டரசுப் பிரதேசத்தின் இளைஞர், கிளைத் தலைவர்கள் சிலர் நேரில் இன்று தமிழ் மலர் அலுவலகம் சென்றது தொடர்பிலும், அங்கு வாக்குவாதங்கள், கைகலப்புகள் நிகழ்ந்ததாக, சமூக ஊடகங்களில் செய்திகள் பரவியதைத் தொடர்ந்து, அது குறித்து டத்தோ எம்.சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.

“மஇகா கூட்டரசுப் பிரதேசம் சார்பாக வருமானங்களும், கணக்குகளும் முறையாக தணிக்கை செய்து சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. நேற்று திங்கட்கிழமை செப்டம்பர் 4-ஆம் தேதி நடைபெற்ற மஇகா கூட்டரசுப் பிரதேச மாநாட்டில் இந்தக் கணக்குகள் முறையாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. எனவே, இந்நிலையில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. எனது நற்பெயரையும், மஇகாவின் நற்பெயரையும் குலைப்பதற்காக அவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது” என்று சரவணன் மேலும் தெரிவித்தார்.

“எனவே, இன்று மத்தியானம் தமிழ் மலர் அலுவலகத்தில் வாக்குவாதங்கள், கைகலப்புகள் நடைபெற்றதாகக் கேள்விப்பட்டதும், அலுவல் காரணமாக மஇகா தலைமையகத்திலிருந்த நான் அங்கு விரைந்து சென்றேன். பதட்டத்தைத் தணிக்கவும், சமாதானம் செய்யவும் முயற்சிகள் செய்தேன். அங்கு சென்றிருந்த மஇகா உறுப்பினர்களை சமாதானப்படுத்தி அமைதியாக இருக்கச் சொன்னேன்” என்றும் சரவணன் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“சம்பந்தப்பட்ட மஇகா உறுப்பினர்களை காவல் நிலையத்தில் புகார் செய்யும்படியும் கேட்டுக் கொண்டிருக்கின்றேன். இது தொடர்பில் காவல் துறையினர் முழுமையாக விசாரிக்க வேண்டும்” என்றும் சரவணன் கேட்டுக் கொண்டார்.

இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி மஇகாவின் நற்பெயரைக் குலைக்கும் வண்ணம் ஒரு சிலர் பெரிதாக்கி வருகின்றனர் என்றும் தெரிவித்த சரவணன், இது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி தனது சட்ட ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்து வருவதாகவும் கூறினார்.