Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘துப்பறிவாளன்’ – நாயின் மரணத்திற்கு பின்னால் இவ்வளவு பெரிய கதையா?

திரைவிமர்சனம்: ‘துப்பறிவாளன்’ – நாயின் மரணத்திற்கு பின்னால் இவ்வளவு பெரிய கதையா?

1272
0
SHARE
Ad

Thuparivaalan2கோலாலம்பூர் – 2014-ம் ஆண்டு ‘பிசாசு’ திரைப்படம் வெளியானதோடு, அதன் பின்னர் மூன்று ஆண்டுகள் இடைவெளி விட்டிருந்த இயக்குநர் மிஸ்கின், தற்போது விஷாலுடன் கூட்டணி அமைத்து, துப்பறியும் கதை ஒன்றுடன், ‘துப்பறிவாளன்’ ஆகக் களமிறங்கியிருக்கிறார்.

மின்னல் தாக்கி தந்தை மகன் மரணம், மயங்கி விழுந்த போலீஸ் உயர் அதிகாரி மரணம், சிறுவன் வளர்த்த நாய் ஒன்றின் மரணம் இப்படியாக மூன்று வெவ்வேறு மரணங்கள் நகரில் நிகழ்கின்றன.

Thupparivalan1மனிதர்களின் மரணங்கள் அவர்களின் குடும்பத்தினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வழக்கு மூடப்பட்டுவிட, நாயின் மர்ம மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாத சிறுவன், இணையத்தில் தேடிப் பிடித்து துப்பறிவாளர் கணியன் பூங்குன்றனின் (விஷால்) உதவியை நாடுகிறான்.

#TamilSchoolmychoice

நாயின் மரணத்தைக் கண்டறிய துப்புத்துலக்க ஆரம்பிக்கும் விஷால், பல அதிர்ச்சிகரமான சம்பவங்களையும், உண்மைகளையும் கண்டறிகின்றார்.

அவை என்ன? என்பது தான் படத்தின் சுவாரசியம்.

நடிப்பு

கணியனாக விஷாலின் உடல்மொழியும், நடிப்பும் அருமை. விஷாலாகப் பார்க்காமல், மி‌ஷ்கின் பட நாயகனாகவே தான் தெரிகின்றார்.

இந்த மாஸ், மசாலா ஐட்டங்களை விட்டு வெளியே வந்தாலே விஷாலிடம் ஒரு சிறந்த நடிகரைப் பார்க்க முடிகின்றது.

thupparivaalan-mainஅதற்கு, ‘செல்லமே’, ‘சத்யம்’, ‘அவன் இவன்’, ‘நான் சிகப்பு மனிதன்’ உள்ளிட்ட படங்களை உதாரணமாகச் சொல்லலாம். அந்த வரிசையில் விஷாலுக்கு இது ஒரு சொல்லிக் கொள்ளும் படியான வித்தியாசமான கதாப்பாத்திரம்.

பிரசன்னா.. அதிபுத்திசாலி ஹீரோவுடன், எதுவுமே புரியாமல் பின்னால் அலைய ஒரு நண்பன் இருக்க வேண்டும் என்பது தமிழ் சினிமாவின் வழக்கம் அல்லவா? அந்த வகையில் “வெளியே போய் நில்லுடா” என்று விஷால் கூறினால், “எதுக்கு வெளிய நிக்க சொல்றான்?” என்று குழம்பிய படியே வெளியே போய் நிற்கும் படியான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். என்றாலும், பிரச்சன்னாவின் அப்பாவித்தனமும், நடிப்பும் ரசிக்கவே வைக்கின்றது.

பாக்கியராஜ் மிக வித்தியாசமான கதாப்பாத்திரம். அது பாக்கியராஜ் தான் என்பதை முதல் காட்சியில் குரலை வைத்து மட்டுமே அடையாளம் காண முடிந்தது. அந்த அளவுக்கு உருமாற்றியிருக்கிறார்கள்.

வினய்.. இதுவரை அப்பாவி இளைஞனாக, செல்லப் பிள்ளையாக, காதல் நாயகனாக, பிளேபாயாக பார்த்திருப்போம். இந்தத் திரைப்படத்தில் ஒரு மிரட்டலான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்குப் பின்னணிக் குரல் படுபயங்கரம்..

andreathupparivaalanஆண்ட்ரியா.. வசனம் இல்லை.. குளோசப் காட்சிகள் இல்லை. ஆனால் நடிப்பால் வசீகரிக்கிறார்.

இவர்களோடு, ஆடுகளம் நரேன், ஜான் விஜய், சிம்ரன், ஷாஜி சென், அனு இமானுவேல் எனப் பலரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

மற்றவை

படம் தொடங்கியது முதல் முடிவு வரை.. நிகழ்ந்த மரணங்களுக்கு இடையிலான தொடர்பு என்ன? என்ற எதிர்பார்ப்பிலேயே ரசிகர்களை உட்கார வைத்திருப்பது சுவாரசியம். கடைசியில் அதற்கான காரணத்தை சொல்லாமல் விட்டதும் கூட புதுமை தான்.

கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி அருமை. அதில் விஷாலின் நடிப்பு தத்ரூபம்.

நாயின் மரணத்தை வைத்து இவ்வளவு பெரிய விசயத்தைக் கண்டறியலாம் என்பதில் இருக்கும் உண்மை மிகவும் ரசிக்க வைக்கின்றது.

“நான் எவ்வளவோ மனுஷங்களைக் கொலை செஞ்சிருக்கேன். அப்பெல்லாம் சிக்கல.. ஆனால் ஒரு நாய் என்னை சிக்க வச்சிருச்சு” என்ற வசனமே அதற்கு சாட்சி.

தனியாகப் பாடல்கள் இல்லையென்றாலும், அரோல் கரோலியின் பின்னணி இசை காட்சிகளுக்குத் தகுந்தாற் போல் பேசுகிறது. பல இடங்களில் வரும் வயலின் அருமை. பிசாசில் இருந்த ஈர்ப்பை மீண்டும் உணர முடிகின்றது.

கார்த்திக் வெங்கட்ராமனின் ஒளிப்பதிவு அழகு. விஷாலின் அறை முதல், அடுக்குமாடிக் குடியிருப்புகள் வரை அனைத்திலுமே கிளாசிக் கலந்தே இருக்கின்றது.

vishalஎன்றாலும், துப்பறியும் காட்சிகளில் வியந்து ரசிக்கும் படியோ? நுட்பமான விசயங்களைப் புதிதாகத் தெரிந்து கொள்ளும் வகையிலோ? காட்சிகள் இல்லை. அண்மையில் தமிழில் வெளிவந்த துப்பறியும் படங்கள் பல, அப்படிப்பட்ட நுட்பமான காட்சிகளைக் கொடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துவிட்டன மிஷ்கின் சார்.

பீச்சில் புல்லட் பதிந்த தடத்தைத் தேடிக் கண்டுபிடிப்பது, வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மரம் வெட்டும் இயந்திரத்தை முகர்ந்து பார்த்து இரத்த வாடையை அறிவது, சிரிப்பு வரவழைக்கும் அமிலம் இவையெல்லாம்  எவ்வளவோ படங்களில் பார்த்துவிட்ட ஒன்று. அந்த மின்னல் மட்டும் தான் புதிது.

அதுமட்டுமா? ‘உனக்கு நெருக்கமானவரைக் கொல்லப் போகிறேன்’ என்று வில்லனே ஹீரோவுக்கு தகவல் அனுப்புவது, போலீஸ் கூட்டத்திலேயே ஒரு கருப்பு ஆடு இவையெல்லாம் அதர பழசான டுவிஸ்ட்.

இப்படியாகப் பல பழைய, தெரிந்த காட்சிகள் கொண்ட திரைப்படமாக ‘துப்பறிவாளன்’ தெரிந்தாலும் கூட, நடிப்பு, வசனங்கள், உடல்மொழி, பின்னணி இசை என மிஷ்கினின் முந்தைய திரைப்படங்களில் நாம் ரசித்த தனித்துவம் இதிலும் இருப்பதால், ‘துப்பறிவாளன்’ ரசிக்க வைக்கின்றான்.

-ஃபீனிக்ஸ்தாசன்