Home நாடு பிகேஆர் தியான் சுவா சிறை செல்வாரா?

பிகேஆர் தியான் சுவா சிறை செல்வாரா?

959
0
SHARE
Ad

Tian-Chua-pkr-vpபுத்ரா ஜெயா – பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர்களில் ஒருவரும், கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள பத்து நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான தியான் சுவா மீதான காவல் துறையின் வழக்கொன்று நாளை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு விசாரணைக்கு வரும்போது அவர் சிறை செல்வாரா அல்லது அந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படுவாரா என்பது தெரிய வரும்.

2012-ஆம் ஆண்டில் பெர்சே-3 பேரணியில் பங்கேற்ற அவர் காவல் துறையின் பயிற்சி மையத்தின் வளாகத்திலிருந்து அகன்று விடுமாறு, காவல் துறை விடுத்த உத்தரவை மீறிய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுக் குற்றம் சாட்டப்பட்டு, உயர் நீதிமன்றத்தால் ஒரு மாத சிறைத்தண்டனையும், 1,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டார்.

அந்தத் தண்டனையை எதிர்த்து தியான் சுவா, மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் (கோர்ட் ஆப் அப்பீல்) மேல்முறையீடு செய்திருக்கிறார். “வழக்கைப் பற்றி நான் கவலைப்படவில்லை. சிறை செல்லவும் நான் தயாராக இருக்கிறேன்” என்று அவர் கூறியதாக மலேசியாகினி இணைய செய்தித் தளம் தெரிவித்தது.

#TamilSchoolmychoice

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது 1 ஒரு வருட சிறைத் தண்டனை பெற்றால், அவர் இயல்பாகவே தனது நாடாளுமன்றப் பதவியை இழப்பார் என்றும் மீண்டும் அவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் மலேசியச் சட்டங்கள் தெரிவிக்கின்றன.

எனவே, எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் தியான் சுவா மீண்டும் போட்டியிட முடியுமா என்பதை நாளைய நீதிமன்றத் தீர்ப்பு நிர்ணயிக்கும்.

எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் சட்ட சிக்கல்கள் எதுவும் இல்லாத பட்சத்தில் தியான் சுவா மீண்டும் பத்து தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.