Home உலகம் சீனாவில் நடந்த தலைமாற்று அறுவை சிகிச்சையால் சர்ச்சை!

சீனாவில் நடந்த தலைமாற்று அறுவை சிகிச்சையால் சர்ச்சை!

1312
0
SHARE
Ad

Head transplantபெய்ஜிங் – சீனாவில் மனித உடல் ஒன்றுக்கு மருத்துவர்கள் குழு, தலை மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பது மருத்துவ உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த தலை மாற்று அறுவை சிகிச்சை குறித்த தகவலை கடந்த வெள்ளிக்கிழமை, வியன்னாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், இத்தாலிய பேராசிரியர் செர்ஜியோ கானாவெரோ வெளியிட்டிருக்கிறார்.

சீனாவின் ஹார்பின் மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரென் ஷியாவ்பிங் தலைமையிலான மருத்துவக் குழு இந்தத் தலை மாற்று அறுவை சிகிச்சையை, இறந்து போன மனிதனின் உடலுக்கு நடத்தி முடித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

18 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையின் முடிவில், ரென் ஷியாவ்பிங்கின் மருத்துவக் குழு, வெற்றிகரமாக மனிதத் தலையின் அனைத்து நரம்புகளையும், இரத்தக் குழாய்களையும், மற்றொரு உடலுடன் பொருத்தியிருக்கிறது.

மருத்துவர் ரென்னும் மற்றும் இத்தாலியப் பேராசிரியர் கானாவெரோவும் கடந்த 5 ஆண்டுகளாக இது தொடர்பான ஆராய்ச்சிகள் கூட்டாக முயற்சி செய்து வருகின்றனர்.

விரைவில், இந்தத் தலைமாற்று அறுவை சிகிச்சை உயிருள்ள ஒரு மனிதனுக்குச் செய்யப்படும் என்று பேராசிரியர் கானாவெரோ தெரிவித்திருக்கிறார்.

தலைமாற்று அறுவைச் சிகிச்சைக்குத் தயாராகும் ரஷியர்

இந்த முறை யாருக்குப் பயன்பெறும் என்றால், மூளைச் சாவு அடைந்த ஒருவரின் ஆரோக்கியமான உடலை அவரது குடும்பத்தார் தானமாக வழங்கும் பட்சத்தில், முற்றிலும் உடல் சேதமடைந்து நல்ல ஆரோக்கியமான தலையையும், மூளை செயல்பாடுகளையும் கொண்ட ஒருவருக்கு அவரது சேதமடைந்த உடல் நீக்கப்பட்டு, தானமாகப் பெறப்படும் உடல் பொருத்தப்படும் என்று மருத்துவர் ரென் குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.

இதனிடையே,ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர் மிகவும் ஆபத்தான இந்தத் தலை மாற்று அறுவை சிகிச்சைக்கு தன்னை தயார் படுத்தி வருகிறார்.

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் வசிக்கும் வேலேரி ஸ்ரிடோனோவ் என்பவர், சிறு வயதிலேயே ‘வேர்டிங் ஹாப்மேன்’ (Werdnig-Hoffman) எனும் மரபு ரீதியான நோயின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நோயின் காரணமாக இவரின் உடல் பகுதி முழுவதும் செயல் இழந்துள்ளது. தலை பகுதி மட்டுமே ஆரோக்கியமாக உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ மாட்டார்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில், வேலேரி 30 வயதைக் கடந்துள்ளார். எனினும், அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகின்றது.

இந்நிலையில், பேராசிரியர் செர்ஜியோ கானாவெரோவைச் சந்தித்த வேலேரி, தலைமாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டிருக்கிறார்.

மருத்துவ உலகில் சர்ச்சை

இதனிடையே, இந்த விவகாரம் மருத்துவ உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இறந்த மனிதனுக்கு நடத்தப்பட்டிருக்கும் இந்த அறுவை சிகிச்சை வெற்றியா? தோல்வியா? என்பது தெரியாது என்றும், இதே போன்ற ஒரு அறுவை சிகிச்சையை உயிரோடு இருக்கும் மனிதனுக்கு செய்யும் போது பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை எதிர்க்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்றும் பெய்ஜிங் ஒன்றிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த பேராசிரியர் ஷாய் ஷியோமி தெரிவித்திருக்கிறார்.

மேலும், ஷாய் ஷியோமி கூறுகையில், “இது இதயம் மாற்றும் அறுவை சிகிச்சை போல் சாதாரண மாற்று அறுவை சிகிச்சை கிடையாது. உதாரணமாக நபர் 1-ன் தலையை நபர் 2-ன் உடலுடன் பொருத்தும் பட்சத்தில், உயிருடன் வரும் புதிய மனிதர் யார்? அவர் நபர் ஒன்றா? அல்லது நபர் இரண்டா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்தக் கேள்விக்கு இப்போதைக்குப் பதில் கிடையாது. ஆனால் மருத்துவ நிபுணர்களின் பெரும்பாலான கருத்து என்னவாக இருக்கிறது என்றால், செயல்பாட்டில் உள்ள மனிதத் தலை தான் உடலை விட மிகவும் முக்கியமானது என்று தெரிவித்திருப்பதாக ஷாய் ஷியோமி குறிப்பிட்டிருக்கிறார்.