Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘ஜூலி 2’ – ஒரு நடிகையின் அந்தரங்க வாக்குமூலம்!

திரைவிமர்சனம்: ‘ஜூலி 2’ – ஒரு நடிகையின் அந்தரங்க வாக்குமூலம்!

1714
0
SHARE
Ad

Julie 2கோலாலம்பூர் – முதல் பார்வை முதல் முன்னோட்டம் வரை இளசுகளை வாய்ப்பிளக்க வைத்ததோடு, பலரின் ஆர்வத்தையும் தூண்டிய ராய் லஷ்மியின் ‘ஜூலி 2’ இன்று உலகமெங்கும் வெளியாகியிருக்கிறது.

ஒரு சினிமா நடிகையின் அந்தரங்க வாழ்க்கை தான் கதை.. ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என பல மொழிகளில் துவைத்துக் காயப்போடப்பட்ட ஒரு கதைக் கரு தான். என்றாலும், ‘ஜூலி 2’ படத்தில் ராய் லஷ்மி நடித்திருக்கிறார் என்பதே அதன் விளம்பரத்திற்குப் பெரும் தீனி போட்டது.

சரி.. படத்தில் ராய் லஷ்மியின் பங்களிப்பு எப்படி இருக்கிறது? கதைப்படி, படத்தின் தொடக்கத்திலேயே முன்னணி நடிகையாக ஒய்யாரமாக வலம் வருகிறார் ஜூலி (ராய் லஷ்மி). ஒரு பிறந்தநாள் விழாவில், தான் ஒரு அப்பா பெயர் தெரியாத பெண் என்றும், முன்னணி நடிகையாவதற்கு முன் விபச்சாரம் செய்து கொண்டிருந்ததையும் வெளிப்படையாக அறிவிக்கிறார்.

#TamilSchoolmychoice

இதனால், பல தயாரிப்பாளர்கள் தங்களது படங்களில் இருந்து ஜூலியை விலக்குகின்றனர். இதனிடையே, நகைக் கடை ஒன்றில் நகை வாங்கச் செல்லும் ஜூலியை, அங்கு வரும் கொள்ளை கும்பல் ஒன்று துப்பாக்கியால் சுட்டுச் சாய்க்கிறது.

உயிருக்குப் போராடுகிறார் ஜூலி. போலீஸ் இது வெறும் கொள்ளைச் சம்பவம் அல்ல. இதற்குப் பின்னால் ஜூலியைக் கொல்ல ஒரு பெரிய திட்டமே போடப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிகிறது.

அப்போது அவரது ஒப்பனைக் கலைஞரான ரதி மூலம், அவர் நடிகையான பின்னணி ஒவ்வொன்றாக சொல்லப்படுகின்றது. எதற்கு ஜூலி சுடப்படுகிறார்? அதன் மர்மம் என்ன? என்பதே சுவாரசியம்.

வாய்ப்புத் தேடும் இடங்களில் தயாரிப்பாளர்கள் வெளிப்படையாகப் படுக்கைக்கு அழைப்பதைக் கண்டு அறுவெறுப்படைவதும், அப்பாவியாக அழுவதுமாக முதல் பாதியில் அடக்கமாகவும், இரண்டாம் பாதியில் தயாரிப்பாளர்களின் ஆசைக்கு இணங்கச் சம்மதிக்கும் போது துணிச்சலாக ஆடை களைவதுமாக ராய் லஷ்மியின் நடிப்பு அசத்தல்.

Julie2movieகுறிப்பாக, உயிருக்கு அச்சுறுத்தல் வரும் நேரத்தில், தனது உடலை காட்டியே எதிரியை வீழ்த்துவதும், கண்ணீருடன் அந்தச் செயலைப் புரிவதுமாக பல இடங்களில் கலங்கவும் வைத்திருக்கிறார்.

“என் உடலை தான் எல்லோரும் விரும்புறாங்க.. இந்த உலகத்துல என்னை உண்மையா காதலிக்க யாரும் இல்ல” என்று நடிகை ரதியைக் கட்டிப்பிடித்து கதறும் காட்சி உண்மையில் படம் பார்க்கும் நம்மை கொஞ்சம் கலங்க வைப்பதோடு, பளிச்சென எப்போதும் சிரித்த முகமாக இருக்கும் நடிகைகளின் ஆழ்மனதில் உள்ள துயரங்களையும் வெளிப்படுத்துகிறது. அப்படிப்பட்டவர்களைப் பழிவாங்க ஜூலி செய்யும் துணிச்சலான காரியம் அருமை.

ஒப்பனைக் கலைஞராக நடிகை ரதி அருமையான நடிப்பு. ராய் லஷ்மிக்கு ஆறுதல் சொல்லும் இடங்களில் முகபாவணைகளால் மிகவும் ரசிக்க வைக்கின்றார். மீண்டும் தமிழிலும் கொஞ்சம் தலைக் காட்டுங்கள் ரதி என்று சொல்ல வைக்கிறார்.

போலீஸ் அதிகாரியாக ஆதித்யாவின் நடிப்பு ஓகே. இன்னும் கொஞ்சம் மிரட்டலான கதாப்பாத்திரமாக இருந்திருக்கலாம். அதேபோல் நடிகராக வரும் ரவி கிஷான் நடிப்பு ரசிக்க வைக்கின்றது.

என்றாலும், முதல் பாதியில் மிக மெதுவாக நகரும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் கவர்ச்சிக் காட்சிகளால் வேகமெடுத்துப் பின், முக்கியமாகச் சம்பவத்தின் பின்னணிக்கான காரணத்தைச் சொல்லும் இடங்களில் மிகவும் தடுமாறியிருக்கிறது.ராய் லஷ்மியின் அந்த மெமரி சிப் ஐடியா மட்டும் புதுமை.

Julie 2இதனிடையே, படத்தில் ஒரு காட்சி வருகின்றது. அதாவது ராய் லஷ்மி, பிச்சைக்காரர் ஒருவரை அழைத்து வந்து மீசை தாடியெல்லாம் வழித்து, வீட்டிலேயே வேலை போட்டுக் கொடுக்கிறார். பெயரே தெரியாத அந்த நபருக்கு அம்பானி என்று பெயர் சூட்டுகிறார். நட்சத்திர விடுதியில் சாப்பிட அழைத்துச் செல்லும் போது, சாப்பிட்டுக் கொண்டே, “இது எனக்கு பர்ஸ்ட் டைம்..இப்படியெல்லாம் சாப்பிட்டதே இல்ல.. எங்க அம்மா சார்” என்று ராய் லஷ்மியைக் காட்டுகிறார்.

என்ன எங்கேயோ பார்த்த காட்சி மாதிரி இருக்கிறதா? ஆம்.. ‘அபியும் நானும்’ படத்தில் நம்ம ரவி சாஸ்திரி கூறும் அதே வசனம் தான். அதை அப்படியே சுட்டு தனது படத்தில் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் தீபக் ஷிவ்தசானி.இப்படியாகப் படத்தில் எங்கேயோ பார்த்த காட்சிகள் பல.

சமீர் ரெட்டியின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் பளீச் இரகம். விஜு ஷா, ரூபாண்ட், அதிப் அலி, ஜாவுத் மொஷின் என நான்கு பேர் இசையமைத்திருக்கின்றனர்.

ஆனால், பின்னணி இசை அவ்வளவாக ஈர்க்கவில்லை.. பாடல்கள் சுமார் இரகம் தான்..

மொத்தத்தில், அழுத்தமாகச் சொல்ல சரியான கதை இருந்தும் கூட, அதை திரைக்கதையாக்குவதிலும், விறுவிறுப்பாகத் தருவதிலும் சொதப்பியிருக்கிறது திரைக்கதை. ராய் லஷ்மியின் கவர்ச்சி மட்டுமே ரசிகர்களைச் சற்று தக்க வைக்கிறது.

-ஃபீனிக்ஸ்தாசன்