Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘கொடிவீரன்’ – அண்ணன், தங்கையின் பாசப் போராட்டம்!

திரைவிமர்சனம்: ‘கொடிவீரன்’ – அண்ணன், தங்கையின் பாசப் போராட்டம்!

1277
0
SHARE
Ad

Kodiveeranகோலாலம்பூர் – கிராமத்துப் படங்களைத் தனது தனித்துவமான பாணியில் கொடுக்கக் கூடியவர் இயக்குநர் முத்தையா. அம்மண்ணுக்கே உரிய அன்பையும், கோபத்தையும் மிக எதார்த்தமாகத் தனது படங்களில் வைக்கக் கூடியவர்.

அந்த வகையில், சசிகுமாரை வைத்து மீண்டும் ‘கொடிவீரன்’ படத்தை இயக்கியிருக்கிறார். ஏற்கனவே முத்தையா, சசிகுமார் கூட்டணியில் ‘குட்டிப்புலி’ திரைப்படம் மிகுந்த வரவேற்ப்பைப் பெற்றிருப்பதால், இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு சற்று கூடியிருந்தது.

சரி.. கதை என்ன?

#TamilSchoolmychoice

kodi-veeran-movie-stills-hdதங்கை சனுஷாவோடு கிராமத்தில் வசித்து வருகின்றார் சசிகுமார்.

திருவிழாவில் சாமியாடி எல்லோருக்கும் குறி சொல்லும் சசி, தனது தங்கைக்குக் குறி சொல்லும் போது, தங்கையைத் திருமணம் செய்யப் போகும் கணவர் மூலம் ஒரு மிகப் பெரிய இழப்பு வரப்போவதாகச் சொல்கிறார்.

இந்நிலையில், சனுஷாவுக்கும், அதே கிராமத்தில் ஆர்டிஓ ஆபிசரான விதார்த்துக்கும் திருமணம் நடக்கிறது. சசிகுமார் குறி சொன்னபடி, விதார்த்துக்கு ஒரு கண்டம் வருகிறது.

அதாவது, அதே ஊரில் 7 கொலைகளைச் செய்த பசுபதி மீதும், அவரது மச்சான் மீதும், விதார்த் விசாரணைக் கமிஷன் அமைக்கிறார். இதனால் பசுபதி விதார்த்தைக் கொலை செய்யத் திட்டம் தீட்டுகிறார்.

தங்கை கணவர் விதார்த்தை சசிகுமார் எதிர்களிடமிருந்து மீட்டாரா என்பதே படத்தின் சுவாரசியம்.

Kodiveeran2சசிகுமார் நடிப்பில் சற்று ஹீரோயிசம் கூடியிருக்கிறது. அண்ணனாக தங்கை பாசத்தில் உருகுவதும், மஹிமா நம்பியாருடன் காதல் கொள்வதுமாக அழகாக நடித்திருக்கிறார்.

மஹிமாவும், சனுஷாவும் துறுதுறுவென திரையில் பார்க்க அழகாக இருப்பதோடு, நன்றாகவும் நடித்திருக்கிறார்கள்.

வில்லனாக பசுபதியும், அவரது தங்கையாக பூர்ணாவும், அவரது கணவராக அறிமுக நடிகர் ஒருவருமாக மிரட்டியிருக்கிறார்கள்.

திரைக்கதையைப் பொறுத்தவரையில், தங்கைகளின் நலனுக்காகப் போராடும் அண்ணன்களின் பாசப்போராட்டமாக விறுவிறுப்பாக அமைத்திருக்கிறார் முத்தையா.

Kodiveeranகுறிப்பாக, படத்தில் இடம்பெறும் அனல் தெறிக்கும் வசனங்கள் அண்ணன் தங்கை பாசத்தையும், இரத்த சொந்தங்களின் பிணைப்பையும் காட்டுகிறது.

அதோடு, தாய்மாமன், பங்காளி உறவு முறைகளின் முக்கியத்துவத்தையும் மிக அழகாக கதையின் வழி சொல்லியிருக்கிறார் முத்தையா.

என்றாலும், பல படங்களில் பார்த்துப் பழகிய காட்சிகள் என்பதால், லேசான அலுப்பைத் தருகிறது.

மேலும், அண்ணன்கள் எல்லாம் கரடு முரடாக இருக்க, தங்கை கதாப்பாத்திரங்கள் அனைத்தும் முற்றிலும் பொருந்தாமல் கேரளத்து முகங்களாக இருப்பது அப்பட்டமாகத் தெரிகின்றது.

கதிரின் ஒளிப்பதிவும், ரகுநந்தனின் பின்னணி இசையும் கிராமத்துக் கதைக்கு ஏற்றவாறு மிக சிறப்பாகப் பின்னிப் பிணைந்திருக்கிறது.

மொத்தத்தில், ‘கொடிவீரன்’ – கிராமத்து மணம் வீசும் அண்ணை – தங்கை பாசப் போராட்டம்!

-ஃபீனிக்ஸ்தாசன்