Home உலகம் ‘பெக்கிக்கு இப்படி ஒரு முடிவு ஏற்பட்டிருக்கக்கூடாது’ – தூதரக அதிகாரியின் குடும்பம் கண்ணீர்!

‘பெக்கிக்கு இப்படி ஒரு முடிவு ஏற்பட்டிருக்கக்கூடாது’ – தூதரக அதிகாரியின் குடும்பம் கண்ணீர்!

785
0
SHARE
Ad

Rebeccamurder1பிரிட்டனைச் சேர்ந்த ரெபேக்கா டைக்ஸ்.. வயது 30 .. கடந்த ஜனவரி மாதம் தான் லெபனான் தலைநகர் பெய்ருட்டில் உள்ள பிரித்தானிய தூதரகத்தில் அனைத்துலக மேம்பாட்டுப் பிரிவில் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார்.

குடும்பத்தினரைப் பிரிந்து தனியாக பணியாற்றிக் கொண்டிருந்தாலும், “இந்த உலகத்தை சிறந்ததாக மாற்ற வேண்டும்” என்ற கனவை தனக்குள் எப்போதும் கொண்டிருந்தவர்.

எல்லோரிடமும் அன்பாகப் பேசும் பெண்ணான ரெபேக்கா, கொஞ்சம் கொஞ்சமாக பெய்ருட்டில், தனது நண்பர்கள் வட்டத்தை வளர்த்துக் கொண்டிருந்தார். கடந்த 11 மாதங்களில் ஓரளவு பெய்ருட்டை பழகியிருந்தார்.

#TamilSchoolmychoice

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டுக்குச் சென்று குடும்பத்தினரைப் பார்ப்பதாக இருந்த ரெபேக்கா, முன்னதாக, கடந்த டிசம்பர் 15-ம் தேதி, வெள்ளிக்கிழமை இரவு நண்பர்களுடன் கேளிக்கை விடுதிக்குச் சென்று நன்றாக ஆடி பாடி கொண்டாட விரும்பியிருக்கிறார்.

அதன் படி, பெய்ருட் அருகேயுள்ள கெமாய்ஸ் என்ற இடத்தில் உள்ள கேளிக்கை விடுதிக்குச் சென்று இரவு முழுவதும், நண்பர்களுடன் ஆடி பாடி மகிழ்ந்துவிட்டு, வீடு திரும்ப உபர் வாடகை காரை அழைத்திருக்கிறார்.

ஆனால் அதில் தான் தனது உயிரை எடுக்கப் போகும் எமன் வருகிறான் என்பதை ரெபேக்கா அறிந்திருக்கவில்லை.

Rebeccamurder
(ரெபேக்கா தனது நண்பர்களைக் காணச் சென்ற கேளிக்கை விடுதி)

ரெபேக்காவை காரில் ஏற்றிய சில நிமிடங்களிலேயே காரை அருகேயுள்ள மலைப்பாதையில் ஓட்டிச் சென்ற 35 வயது கார் ஓட்டுநர், ஆளில்லா பகுதி ஒன்றில் ரெபேக்காவைப் பாலியல் வல்லுறவு புரிந்ததோடு, அவரது கழுத்தில் கயிறை இறுக்கிக் கொலையும் செய்து, சாலையோரம் தூக்கி வீசிச் சென்றிருக்கிறான்.

மறுநாள் சனிக்கிழமை காலை அச்சாலையோரம் சென்றவர்கள் பெண் சடலம் ஒன்று கிடப்பதைக் கண்டறிந்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

முதலில் சடலத்தை வைத்து யாரென்று அடையாளம் கண்டறிய இயலாத காவல்துறை, பின்னர் உள்ளூர் ஓவியர்களை வைத்து சடலத்தின் முகத்தைப் படம் வரைய வைத்து சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்பிய போது தான் இறந்தது தூதரக அதிகாரி ரெபேக்கா என்ற விவரம் தெரியவந்தது.

ரெபேக்காவின் இறப்பை பெய்ருட்டில் உள்ள பிரிட்டானிய தூதகரத்தினராலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இன்னும் தாங்கள் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்கிறார்கள் சக தூதரக அதிகாரிகள்.

லெபனானுக்கான பிரிட்டன் தூதர் ஹியூஜோ ஷார்டர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ரெபேக்காவின் இறப்பை அறிந்து பேரதிர்ச்சி அடைந்திருக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல்கள். ரெபேக்காவின் குடும்பத்தினரைத் தேற்ற ஆலோசகர்களை ஏற்பாடு செய்திருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

ரெபேக்காவின் குடும்பத்தினர் பிரிட்டன் வானொலி ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டியில், “நாங்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளிவரவில்லை. பெக்கி மிகவும் அன்பானவள், நேர்மையானவள். அவளுக்கு இவ்வளவு கொடுமையான முடிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை” என்று கண்ணீருடன் தெரிவித்திருக்கின்றனர்.

ரெபேக்காவை பாலியல் வல்லுறவு கொண்டு, கொலை செய்து வீசிய லெபனானைச் சேர்ந்த உபர் கார் ஓட்டுநரை அந்நாட்டு காவல்துறை கைது செய்திருக்கிறது. அவன் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஏற்கனவே, அவன் மீது போதை மருந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.