Home நாடு மகாதீரைப் பதவி விலகச் சொல்லி பெர்சாத்து உறுப்பினர் புகார்!

மகாதீரைப் பதவி விலகச் சொல்லி பெர்சாத்து உறுப்பினர் புகார்!

683
0
SHARE
Ad

Bersatu AGMகோலாலம்பூர் – கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பெர்சாத்து கட்சியின் முதல் ஆண்டுப் பொதுக்கூட்டம், கட்சியின் அரசியலமைப்புக்கு உட்பட்டு நடக்கவில்லை என்றும், அதனை உடனடியாக விசாரணை செய்யும் படியும் சங்கங்களின் பதிவிலாகாவிற்கு வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

தெமெர்லோ பெர்சாத்து தொகுதித் தலைவர் அமெரஸ் சே ஆன் இது குறித்துக் கூறுகையில், “சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டம் சில தரப்பினரின் பிரச்சினைகளைப் பற்றி பேச தன்மூப்பாக நடத்தப்பட்ட ஒன்றாகவே தோன்றியது. கட்சியின் பிரச்சினைகளைப் பற்றி பேச அக்கூட்டத்தில் எந்த முன்னெடுப்பும் எடுக்கப்படவில்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், “ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் பேராளர்கள் யாரும் கட்சியின் அரசியலமைப்புக்குட்பட்டு தேர்வு செய்யப்படவில்லை. அங்கு எந்த ஒரு கிளை மற்றும் தொகுதி அளவிலான பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு, அதன் மூலம் முதல் ஆண்டுக்கூட்டத்தின் பேராளர்கள் தேர்வு செய்யப்படவில்லை. அதுமட்டுமின்றி இளைஞர் மற்றும் மகளிர் கிளைகளின் கூட்டம் நடைபெறவில்லை.”

#TamilSchoolmychoice

“நான் ஏமாற்றப்பட்டது போலும், வேடிக்கையாக நடத்தப்பட்டது போலும் உணர்ந்தேன். அதனால் தான் இந்த விவகாரத்தில் ஆர்ஓஎஸ் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறினேன்” என சங்கங்களின் பதிவிலாகாவில் புகார் அளித்த பின் அமரெஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது மற்றும் முன்னாள் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ மொகமது யாசின் ஆகியோரால் தொடங்கப்பட்ட பெர்சாத்து கட்சி, ஆண்டுப் பொதுக்கூட்டம் நடத்தவில்லை என்றும், இளைஞர் அணியை உருவாக்கவில்லை என்றும் சங்கங்களின் பதிவிலாகா குறிப்பிட்டு வந்தது.
அவ்வாறு செய்யவில்லை என்றால், கட்சியின் பதிவு இரத்தாகும் வாய்ப்பு இருப்பதாகவும் சங்கங்களின் பதிவிலாகா எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை ஷா ஆலம் மாநாட்டு மண்டபத்தில், 137 தொகுதிகளிலிருந்து 941 பேராளர்கள் பங்கேற்க பெர்சாத்து கட்சியின் முதல் ஆண்டுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதனிடையே, டாக்டர் மகாதீர் முகமது, பெர்சாத்து கட்சியின் தலைவர் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும், அவர் தனது தனிப்பட்ட நோக்கத்திற்காக போராடுகிறார் என்றும் அமெரஸ் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.