Home நாடு தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (8) – கோத்தா மருடு (சபா)

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (8) – கோத்தா மருடு (சபா)

1092
0
SHARE
Ad
maximus Ongkili-sabah-kota marudu MP
மேக்சிமஸ் ஓங்கிலி – மத்திய அமைச்சர் – கோத்தா மருடு நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினர்

(2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றது – மாறியுள்ள அரசியல் சூழல் -ஆகியவற்றால் 14-வது பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற தேசிய முன்னணி பெரும் சவாலை எதிர்நோக்கப் போகும் தொகுதிகளின் வரிசையைத் தனது பார்வையில் வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சபா மாநிலம் பல அதிரடி மாற்றங்களைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்காத்தான் கூட்டணிக்கு ஆதரவாக இங்கே ஜசெக, பிகேஆர் கட்சிகள் தீவிரமாக வாக்குகள் திரட்டி வருகின்றன.  இந்த முறை டத்தோஸ்ரீ ஷாபி அப்டாலின் வாரிசான் கட்சியும் இணைந்து கொண்டிருப்பதால், ஒரு வலுவான கூட்டணியை ஏற்படுத்தி, சுமுகமான தொகுதிப் பங்கீடுகளின் மூலம் சில தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டியை ஏற்படுத்தி தேசிய முன்னணியைத் தோற்கடிக்க முடியும் என பக்காத்தான் நம்பிக்கை கொண்டுள்ளது.

இதற்கு முந்தைய கட்டுரையில் ஷாபி அப்டால் எவ்வாறு செம்பூர்ணா தொகுதியை தனது வாரிசான் கட்சிக்காகவும், பக்காத்தான் கூட்டணிக்காகவும் வென்றெடுக்க முடியும் என்பதைப் பார்த்தோம்.

kota marudu-parliament-location
சிவப்பு நிற வட்டக் குறியிடப்பட்ட பகுதிதான் சபா மாநிலத்தின் கோத்தா மருடு நாடாளுமன்றத் தொகுதி
#TamilSchoolmychoice

மேலும் சபா மாநிலத்தில் உள்ள மூன்று தொகுதிகள் தேசிய முன்னணிக்கு தோல்வியை ஏற்படுத்தக் கூடிய தொகுதிகளாகப் பார்க்கப்படுகின்றன. அவை கோத்தா மருடு, பியூபோர்ட், பென்சியாங்கான், ஆகியவையாகும். பல தொகுதிகளில் தேசிய முன்னணி, குறிப்பாக அம்னோ, கணிசமான பெரும்பான்மையில் வென்றாலும், இந்த மூன்று தொகுதிகளில் பெரும்பான்மை மிகக் குறைவு என்பதோடு, இந்தத் தொகுதிகளில் ஏற்பட்ட பல்முனைப் போட்டியால்,  எதிர்க்கட்சிகளின் ஒட்டு மொத்த வாக்குகள் தேசிய முன்னணி பெற்ற வாக்குகளை விட அதிகமாகும்.

எனவே, சபா கட்சிகள் தங்களின் அரசியல் கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒருமித்து ஒரே வேட்பாளரை நிறுத்தினால், முதல் கட்டமாக நாம் மேலே குறிப்பிட்ட மூன்று தொகுதிகளையும் வென்றெடுக்க முடியும்.

842 வாக்குகள் வித்தியாசத்தில் தே.மு வென்ற கோத்தா மருடு

முதலாவதாக கோத்தா மருடு தொகுதியைப் பார்ப்போம்!

கடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் மேக்சிமஸ் பின் ஓங்கிலி 842 வாக்குகளில் மட்டுமே வென்ற தொகுதி இது!

Kota Marudu-parliament-2013-results
2013 நாடாளுமன்றத் தேர்தலில் கோத்தா மருடு தொகுதியின் முடிவுகள்

ஆனால் அவரை எதிர்த்து மூன்று கட்சிகள் போட்டியிட்டன. பிகேஆர் 14,326 வாக்குகள் பெற்ற நிலையில் மற்றொரு எதிர்க்கட்சியான ஸ்டார் (STAR) 2,228 வாக்குகள் பெற்றது. இங்கே போட்டியிட்ட மற்றொரு எதிர்க்கட்சியான எஸ்ஏபிபி (SAPP) வெறும் 444 வாக்குகளை மட்டுமே பெற்றது.

ஆக இந்த மூன்று கட்சிகளின் வாக்குகளையும் கூட்டினால், எதிர்க்கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் 16,998 ஆகும். அதாவது தேசிய முன்னணி பெற்ற வாக்குகளை விட 1,830 வாக்குகளைக் கூடுதலாக எதிர்க்கட்சிகள் பெற்றிருக்கின்றன என்பதிலிருந்து இந்தத் தொகுதியில் தேசிய முன்னணி எதிர்நோக்கப் போகும் ஆபத்தை ஓரளவுக்குப் புரிந்து கொள்ளலாம்.

போதாக் குறைக்கு இந்தத் தொகுதியில் முஸ்லீம் பூமிபுத்ராக்கள் 26 விழுக்காடு இருக்கின்றனர். ஷாபி அப்டாலின் ஊடுருவலால் இதில் கணிசமான வாக்குகளையும் அவரால் எதிர்க்கட்சிக் கூட்டணிக்குத் திருப்ப முடியும்.

சபா மாநிலத்திலுள்ள எதிர்க்கட்சிகளுக்கிடையில் கூட்டணி அமைப்பது குறித்தும், தொகுதிப் பங்கீடுகள் குறித்தும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்தாலும் வெற்றியடையாவிட்டாலும், ஏற்கனவே உறுதியாகிவிட்ட பிகேஆர், ஜசெக மற்றும் ஷாபி அப்டாலின் வாரிசான் ஆகிய கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி உடன்பாடு மட்டும் சபாவில் சில நாடாளுமன்றத் தொகுதிகளை வீழ்த்தும் வலிமையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேக்சிமஸ் ஓங்கிலி

ஜோசப் பைரின் கித்திங்கான் தலைமை தாங்கியுள்ள – கடசான் டுசுன் இன மக்களிடையே செல்வாக்குடன் திகழும் கட்சி பிபிஎஸ் அதாவது பார்ட்டி பெர்சாத்து சபா. இந்தக் கட்சியின் துணைத் தலைவராக இருப்பவர்தான் மேக்சிமஸ் ஓங்கிலி. பைரின் கித்திங்கானுக்கு நெருங்கிய உறவுக்காரர் ஓங்கிலி.

Joseph-Pairin-Kitingan
ஜோசப் பைரின் கித்திங்கான் – பிபிஎஸ் கட்சியின் தேசியத் தலைவர்

2004-ஆம் ஆண்டு முதல் கோத்தா மருடு தொகுதியை வெற்றிகரமாகத் தற்காத்து வருகிறார். மத்திய அமைச்சரவையில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் புத்தாக்க அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார்.

ஆனால், பைரின் கித்திங்கானின் சகோதரரான ஜெப்ரி கித்திங்கான் ஸ்டார் என்ற தனிக்கட்சியைக் கண்டு பிபிஎஸ், அம்னோ மற்றும் தேசிய முன்னணிக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார்.

பொதுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் சபா மாநில கட்சிகள் சில அதிரடி முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோசப் பைரின் கித்திங்கான் 77 வயதாகி விட்டதால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்றும் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கப் போகிறேன் என்றும் ஏற்கனவே அறிவித்து விட்டார். 64 வயதான ஓங்கிலியும் தளர்ந்து போய் விட்டார். பைரின் கித்திங்கானுக்குப் பிறகு பிபிஎஸ் கட்சியின் தலைமையை ஏற்றாலும் பைரின் அளவுக்கு ஓங்கிலி கடசான் டுசுன் இன மக்களிடையே செல்வாக்கு பெற்றவரில்லை.

எனவே, ஜெப்ரி கித்திங்கான் சபா அரசியலில் எடுக்கப் போகும் முடிவுகளும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இவ்வாறாக முற்றிலும் மாறியுள்ள சபா அரசியல் களத்தில் மேக்சிமஸ் ஓங்கிலி மிகவும் சவாலான கோத்தா மருடு தொகுதியைத் தற்காத்து தேசிய முன்னணிக்கு மீண்டும் வெற்றியைத் தேடித் தருவாரா?

-இரா.முத்தரசன்

தொடர்புடைய முந்தைய கட்டுரைகளின் இணைப்புகள்:

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (1) : பெந்தோங்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (2): தெலுக் இந்தான்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (3) – கோல சிலாங்கூர்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (4) : லாபிஸ்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (5) – தித்திவாங்சா

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (6) – பாகோ!

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (7) – செம்பூர்ணா!