Home நாடு தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (9) – பியூபோர்ட் (சபா)

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (9) – பியூபோர்ட் (சபா)

1484
0
SHARE
Ad
Azizah Binti Mohd Dun-datuk-beaufort MP
டத்தோ அசிசா பிந்தி முகமட் டுன் – நடப்பு பியூபோர்ட் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் – மகளிர் மேம்பாடு, குடும்பம் மற்றும் சமூகத் துறை அமைச்சின் துணை அமைச்சர்

(2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றது – மாறியுள்ள அரசியல் சூழல் -ஆகியவற்றால் 14-வது பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற தேசிய முன்னணி பெரும் சவாலை எதிர்நோக்கப் போகும் தொகுதிகளின் வரிசையைத் தனது பார்வையில் வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

சபா மாநிலத்தின் பியூபோர்ட் நாடாளுமன்றத் தொகுதியை வெறும் 673 வாக்குகள் பெரும்பான்மையில்தான் 2013-இல் வென்றது தேசிய முன்னணி. அம்னோவின் சார்பில் தேசிய முன்னணி சின்னத்தில் நின்ற டத்தோ அசிசா பிந்தி முகமட் டுன் 12,827 வாக்குகள் பெற, அவரை எதிர்த்து நின்ற பிகேஆர் கட்சியின் லாஜிம் பின் உகின் 12,154 வாக்குகள் பெற்றார். மூன்றாவது வேட்பாளராகப் போட்டியிட்ட ஸ்டார் கட்சியின்  குவான் டீ பின் கோ 409 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

ஆக, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பெற்ற மொத்த வாக்குகள் 12,563 ஆகும். அப்படிப் பார்த்தால் 264 வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பெற்றுத்தான் தேசிய முன்னணி இந்தத் தொகுதியைக் கடந்த பொதுத் தேர்தலில் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

beaufort-parliament-sabah-2013-resultsஇந்தத் தொகுதி முஸ்லீம் பூமிபுத்ராக்களை பெரும்பான்மையாகக் கொண்டதாகும். 2013 புள்ளி விவரங்களின்படி பியூபோர்ட் தொகுதியில் 61 விழுக்காடு வாக்காளர்கள் பூமிபுத்ரா முஸ்லீம்கள். முஸ்லீம் அல்லாத பூமிபுத்ராக்கள் – அதாவது கடசான் டுசுன் போன்ற இன மக்கள் – 30 சதவீத வாக்காளர்களாக இருக்கின்றனர்.

பிகேஆரும் வாரிசானும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுமா?

எனவே, இந்த முறை இந்தத் தொகுதியில் பிகேஆர் கட்சியும், ஷாபி அப்டாலின் வாரிசான் கட்சியும் புரிந்துணர்வோடு தேர்தல் உடன்பாடு கண்டு, ஒரே வேட்பாளரை ஒருமித்து நிறுத்தினால் அதனால் தேசிய முன்னணியின் நிலைமை நிச்சயம் ஆட்டம் காணும் என்பதைக் கூறத் தேவையில்லை.

இந்தத் தொகுதியில் 8 விழுக்காடு சீன வாக்காளர்களும் இருக்கின்றனர். ஜசெகவின் பிரச்சாரத்தின் மூலம் இந்த சீன வாக்காளர்களில் ஒரு கணிசமான பிரிவினரும் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

அசிசா மற்றும் லாஜிம் – வேட்பாளர்கள் ஓர் ஒப்பீடு

பியூபோர்ட் சபா மாநிலத்தில் கூட்டரசுப் பிரதேசமான லாபுவானுக்கு அருகாமையில் உள்ள ஊர்.

பியூபோர்ட் தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ அசிசா மகளிர் மேம்பாடு, குடும்பம் மற்றும் சமூகத் துறை அமைச்சின் துணை அமைச்சராகவும் இருந்து வருகிறார். 2004-ஆம் ஆண்டில் பியூபோர்ட் தொகுதியில் போட்டியின்றி வென்றவர் இவர்.

ஆனால், 2008-ஆம் ஆண்டில் இந்தத் தொகுதி அம்னோவின் டத்தோ லாஜிம் உக்கினுக்கு வழங்கப்பட அவரும் 10,914 வாக்குகள் பெற்று வென்றார். ஆனால் பின்னர் பிகேஆர் கட்சியில் இணைந்து விட்டார் லாஜிம்.

2013 பொதுத் தேர்தலில் லாஜிமை மீண்டும் பிகேஆர் கட்சி நிறுத்த அவருக்கு எதிராக மீண்டும் களத்தில் இறக்கப்பட்டார் டத்தோ அசிசா. சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

beufort-sabah-location mapஇந்த முறை மீண்டும் லாஜிம் பிகேஆர் சார்பில் போட்டியிடுவாரா அல்லது இந்தத் தொகுதி ஷாபியின் வாரிசான் கட்சிக்கு ஒதுக்கப்படுமா என்பது இன்னும் முடிவாகவில்லை. அசிசாவும் மீண்டும் நிற்பாரா என்பது தெரியவில்லை.

எனினும், ஷாபி அப்டாலின் வாரிசான் கட்சி, பிகேஆர், ஜசெக இணைந்த கூட்டணியைச் சந்திக்கப் போகும் தேசிய முன்னணி வேட்பாளர் யாராக இருந்தாலும் இந்தத் தொகுதியை மீண்டும் அவர் வென்றெடுப்பது சிம்ம சொப்பனமாகவே இருக்கும்.

-இரா.முத்தரசன்

தொடர்புடைய முந்தைய கட்டுரைகளின் இணைப்புகள்:

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (1) : பெந்தோங்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (2): தெலுக் இந்தான்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (3) – கோல சிலாங்கூர்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (4) : லாபிஸ்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (5) – தித்திவாங்சா

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (6) – பாகோ!

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (7) – செம்பூர்ணா!

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (8) – கோத்தா மருடு (சபா)