Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ – காமெடி மட்டும் போதுமா பாஸ்?

திரைவிமர்சனம்: ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ – காமெடி மட்டும் போதுமா பாஸ்?

394
0
SHARE

ONNPSகோலாலம்பூர் – பெண்ணைக் கடத்தும் வழக்கமான காமெடி கதை தான், ஆனால் அதை விஜய் சேதுபதியை வைத்து சற்று வித்தியாசமான முயற்சியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஆறுமுக குமார்.

ஆந்திரா அருகில் ஒரு மலைகிராமம். அங்கு மொத்தமே 200 பேர் தான். அவர்களுக்கு எமன் தான் கடவுள். வெளியூர்களுக்குச் சென்று யாரையும் கொலை செய்யாமல், துன்புறுத்தாமல், லாவகமாகத் திருடுவது தான் அம்மக்களுக்கு தொழில்.

அக்கூட்டத்தின் தலைவி விஜி, தனது மகன் விஜய்சேதுபதியைக் கூப்பிட்டு, துணைக்கு ரமேஸ் திலக்கையும், ராஜ்குமாரையும் அனுப்பி வைத்து, வெளியூரில் திருடிவிட்டு வரச் சொல்கிறார்.

திருடுவதற்காக வெளியூருக்கு வரும் விஜய் சேதுபதி, அங்கு கதாநாயகி நிகாரிகாவைப் பார்க்கிறார். அவரைப் பார்த்ததும் தனது குலத்தின் கொள்கைகளை மீறி அவரைக் கடத்திக் கொண்டு தனது கிராமத்திற்குத் திரும்புகிறார்.

ONPS1அதே நேரத்தில், நிகாரிகாவைக் காதலித்த கௌதம் கார்த்திக், இதனை அறிந்து, தனது நண்பர் டேனியல் அன்னிப்போப் உடன் அவரைத் தேடிக் கொண்டு மலைகிராமத்திற்கு வருகிறார்.

நிகாரிகாவை விஜய் சேதுபதி கடத்தியது ஏன்? கௌதம் கார்த்திக் நிகாரிகாவை விஜய் சேதுபதியிடமிருந்து மீட்டாரா? என்பதே பிற்பாதி சுவாரசியம்.

முதல்பாதி முழுக்க தனது இரு சீடர்களுடன் விஜய் சேதுபதி, நிகாரிகாவைத் தேடி அலைவதும், இன்னொரு பக்கம் கௌதம் கார்த்திக்கும், டேனியலும் போலீசிடமும், விஜய் சேதுபதியிடமும் மாறி மாறி அடி வாங்குவதுமாக நகர்கிறது.

ONPS2திருட வந்த விஜய் சேதுபதி எதற்காக நிகாரிகாவைக் கடத்த முயற்சி செய்கிறார்? எதை வைத்து நிகாரிகா தனது மனைவி என்கிறார்? என்ற கேள்வி மட்டுமே ரசிகர்களை அமர வைக்கின்றது.

மற்றபடி, கௌதம் கார்த்திக், டேனியலின் மொக்கை காமெடியும், இன்னொரு பக்கம் ராஜ்குமாரின் கோமாளித் தனமான கதாப்பாத்திரமும் எரிச்சலைத் தான் கொடுக்கின்றது.

விஜய் சேதுபதி வித்தியாசமான கெட்டப்புகளில் வருகிறார் என்றாலும், அவரது நடிப்பிற்குத் தீனி போடுவது போன்ற வேலைகள் முதல் பாதியில் குறைவு தான்.

இரண்டாவது பாதி முழுக்க மலைக்கிராமத்தில் நடக்கின்றது. கிராமவாசிகளின் காமெடி ஆங்காங்கே கொஞ்சம் சிரிக்க வைக்கின்றது.

படத்தில் திடீரென ஒரு நம்ப முடியாத திருப்பம். நிகாரிகாவை கடத்தியதற்கான காரணத்தை அங்கு தான் வைக்கிறார் இயக்குநர். அப்புறம் வழக்கம் போல் கல்யாண கலாட்டாவில் முடிகிறது படம்.

கதையிலோ, திரைக்கதையிலோ எந்த ஒரு அழுத்தமும் இன்றி, முழுக்க முழுக்க காமெடியை மட்டுமே நம்பி படம் எடுக்கப்பட்டிருப்பதால், எங்கு சிரிப்பது? எங்கு சோகமாவது? என்று ரசிகர்களே குழம்பும் அளவிற்கு ஜவ்வாக இழுக்கிறது படம்.

அதேபோல், “அண்ணே நம்ம கொள்கை”, “பாவாவ தப்பா பேசாத” என ஒரே மாதியான வசனங்களும் சலிப்பை ஏற்படுத்துகின்றன.

நடிகை காயத்ரியின் நடிப்பும், முகபாவனைகளும் அழகு. இரண்டாம் பாதியில் அவர் தான் கொஞ்சம் கவனிக்க வைக்கிறார்.

ONPS3ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசையும், பாடல்களும் கதையின் சூழலுக்கு ஏற்ப சிறப்பாக இருக்கின்றது. ஸ்ரீசரவணனின் ஒளிப்பதிவில் மலைக்கிராமமும், அச்சூழலும் ரசிக்க வைக்கின்றது.

‘மூடர்கூடம்’, ‘ஜில் ஜங் ஜக்’ வரிசையில் புதிதாகச் சேர்ந்திருக்கிறது ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. மேற்சொன்ன இரண்டு படங்களையும் ரசித்திருந்தால், இந்தப் படமும் உங்களுக்கு பிடிக்கும்.

-ஃபீனிக்ஸ்தாசன்

Comments