Home நாடு “எஸ்பிஎம் தமிழ் எடுப்பவர்கள்: 9730 – எஸ்டிபிஎம் தமிழ் எடுப்பவர்கள்: 789” – கமலநாதன் தகவல்

“எஸ்பிஎம் தமிழ் எடுப்பவர்கள்: 9730 – எஸ்டிபிஎம் தமிழ் எடுப்பவர்கள்: 789” – கமலநாதன் தகவல்

1155
0
SHARE
Ad
kamalanathan-2nd tamil schools board-conf-(2)-03022018
பிப்ரவரி 2 முதல் 4 வரை சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற தமிழ்ப் பள்ளிகளின் மேலாளர் வாரியங்களுக்கான கருத்தரங்கத்தில் கமலநாதன் உரையாற்றுகிறார்

கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கி, 4-ஆம் தேதி வரை தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற தமிழ்ப் பள்ளிகளின் மேலாளர் வாரியங்களுக்கான தேசிய நிலையிலான கருத்தரங்கத்தைத் திறந்து வைத்த கல்வி துணையமைச்சர், டத்தோ ப.கமலநாதன், உணர்ச்சிகரமான, அதே சமயத்தில் தமிழ்ப் பள்ளிகள் குறித்த தனது உள்ளக் கிடக்கைகள் வெளிப்படுத்தும் வண்ணம் உரையொன்றை வழங்கினார்.

அவரது உரையில் பல முக்கியமாக தகவல்களையும், புள்ளிவிவரங்களையும் அவர் தனது திறப்புரையின் போது ஆவணப் படங்களுடன் வெளியிட்டார். அதில் சில குறிப்பிடத்தக்க, தமிழ்ப் பள்ளிகள் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில அதிகாரபூர்வத் தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

எஸ்டிபிஎம் தமிழ் எடுக்கும் மாணவர்கள்

kamalanathan PRESENTATION-7எஸ்டிபிம் தேர்வுகளில் தமிழை ஒரு பாடமாக எடுக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2018 முதல் தவணையில் 789 ஆக இருந்தது. எஸ்டிபிஎம் தேர்வு எழுதும் மொத்த மாணவர்கள் 49,885 பேர். இதில் இந்தியர்கள் மட்டும் 2,974 ஆவர். இத்தனை இந்தியர்களில் 789 பேர் தமிழ் எடுப்பது மிக அதிகமான விகிதாச்சாரமாகும்.

#TamilSchoolmychoice

எஸ்டிபிஎம் தேர்வுகளில் சீனமொழியை ஒரு பாடமாக எடுக்கும் சீன மாணவர்களுடன் ஒப்பிடும்போது தமிழை ஒரு பாடமாக எடுக்கும் இந்திய மாணவர்கள் அதிக விகிதாச்சாரத்தில் இருக்கின்றனர் என்றும் கமலநாதன் தனதுரையில் குறிப்பிட்டார்.

எஸ்பிஎம் தமிழ் எடுப்பவர்கள்: 9730

எஸ்பிஎம் தேர்வுகளில் தமிழை ஒரு பாடமாக எடுப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் இருந்து வருகிறது. 2017-இல் 9,730 மாணவர்கள் தமிழ் மொழியை எஸ்பிஎம் தேர்வுகளில் ஒரு பாடமாகத் தேர்வு செய்தனர்.

தமிழ் இலக்கியத்தை ஒரு பாடமாக எடுக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2017-ஆம் ஆண்டில் 3,139 ஆக இருந்தது.

kamalanathan PRESENTATION-5தமிழ்ப் பள்ளிகளில் பாலர் வகுப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டில் 5,597 மாணவர்கள் பாலர் வகுப்புகளில் தமிழ்ப் பள்ளிகளில் கல்வி பயின்றனர்.

தேசிய மாதிரி தமிழ்ப் பள்ளிகளில் கல்வி பயின்று வருபவர்கள் மொத்த எண்ணிக்கை 2017 புள்ளி விவரங்களின்படி 87,230 மாணவர்களாவர். நடப்பு 2018-ஆம் ஆண்டில் தமிழ்ப் பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை சற்றே உயர்ந்து 87,520 ஆக இருந்து வருகிறது.

புதிய 7 பள்ளிகள் கட்டி முடிக்கப்படும்போது, மொத்த மாணவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

50 பாலர் பள்ளிகளுக்கு 10 மில்லியன்

kamalanathan PRESENTATION-4தமிழ்ப் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கையை நிலைநிறுத்துவதற்கும், எதிர்காலத்தில் உயர்த்துவதற்கும் அத்தியாவசியமான முக்கியக் களமாகக் கருதப்படுவது பாலர் வகுப்புகளாகும். எனவே இதற்காக சிறப்பு நிதி ஒதுக்கீடாக 10 மில்லியன் ரிங்கிட் 50 பாலர் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

தமிழ்ப் பள்ளிகளின் கட்டமைப்பு மேம்பாடு

kamalanathan-speech-slide-12009-ஆம் ஆண்டு முதல் – அதாவது பிரதமராக நஜிப் துன் ரசாக் பதவியேற்றது முதல் இப்போது வரை மொத்தம் 947.54 மில்லியன் ரிங்கிட் தமிழ்ப் பள்ளிகளுக்கென பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இதில் புதிதாக 7 பள்ளிகள் நிர்மாணிக்கப்பட்டு, 523-ஆக இருந்த தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கை தற்போது 530-ஆக உயர்வு கண்டுள்ளது. 21 பள்ளிகள் இடமாற்றம் கண்டுள்ளன. 18 புதிய இணைக் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

தமிழ்ப் பள்ளி மாணவர்களை விளையாட்டுத் துறையிலும் ஊக்குவிக்கும் நோக்கத்துடன் 15 தமிழ்ப் பள்ளிகளுக்கு விளையாட்டு வசதிகளை மேம்படுத்த 3 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

மெட்ரிகுலேஷன் வகுப்புகளில் இந்தியர்களுக்கு வாய்ப்பு

kamalanathan PRESENTATION-6மெட்ரிகுலேஷன் வகுப்புகளில் இந்திய மாணவர்களுக்கு 1,500 இடங்கள் ஒதுக்கப்பட்டாலும் அதனைப் பூர்த்தி செய்யும் தகுதி வாய்ந்த மாணவர்கள் குறைவாகவே இருந்து வந்தனர். இந்த நிலைமையும் தற்போது கட்டங் கட்டமாக சரிசெய்யப்பட்டு வருகிறது. 2016-இல் 1397 ஆக இருந்த மெட்ரிகுலேஷன் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2917-இல் 1,479 ஆக உயர்ந்திருக்கிறது.

7 புதிய பள்ளிகள் எங்கு? எவ்வளவு செலவு?

kamalanathan PRESENTATION-3

புதிதாக அமையவிருக்கும் 7 தமிழ்ப் பள்ளிகள் எங்கு அமைக்கப்படவிருக்கின்றன – அவற்றுக்கான மொத்த கட்டுமான செலவினங்கள் எவ்வளவு என்பதை மேலே உள்ள வரைபடம் காட்டுகிறது.

இந்த 7 புதிய தமிழ்ப் பள்ளிகளின் நிர்மாணிப்பிற்கும் மொத்தம் 130.75 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருக்கிறது. 2012-இல் 523 ஆக இருந்த தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கை, 2018-ஆம் ஆண்டு நிறைவடையும்போது 530 ஆக உயர்வு கண்டிருக்கும். இதன் மூலம் மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்திருக்கும்.

kamalanathan PRESENTATION-2

-செல்லியல் தொகுப்பு