Home நாடு சபா அரசியலில் மீண்டும் பைரின் கித்திங்கானின் ஆதிக்கம்!

சபா அரசியலில் மீண்டும் பைரின் கித்திங்கானின் ஆதிக்கம்!

876
0
SHARE
Ad

Pairin Kitingan_Green Sabahகோத்தா கினபாலு – பொதுத்தேர்தல் நெருங்க, நெருங்க யாரும் எதிர்பாராதவிதமாக மிக பரபரப்பான, சுவாரசியமான அரசியல் களமாக உருவெடுத்திருக்கிறது சபா மாநிலம். சரவாக் மாநிலத்தின் அரசியல் சலனமற்று பெரிய மாற்றங்களை ஏற்படுத்தா வண்ணம் பொதுத் தேர்தலைக் கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், சபா மாநில அரசியலோ, கடும் போட்டிகளோடும், மிகப் பெரிய அரசியல் மோதல்களோடும் 14-வது பொதுத் தேர்தலை எதிர்நோக்கும் என கருதப்படுகிறது.

பல மாதங்களுக்கு முன்பே, அரசியலில் இருந்து விலகுகிறேன், மீண்டும் பொதுத் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என அறிவித்து விட்ட 77 வயதான பிபிஎஸ் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ ஜோசப் பைரின் கித்திங்கான், சபா அரசியல் நெருக்கடி காரணமாக மீண்டும் அந்த மாநிலத்தின் அரசியல் மையப் புள்ளியாக உருவெடுத்திருக்கிறார்.

காரணம், இவர் பல ஆண்டுகாலமாக வென்று வந்திருக்கும் இரண்டு முக்கியத் தொகுதிகள், இவர் மீண்டும் போட்டியிடாவிட்டால், எதிர்க்கட்சிகளுக்கு குறிப்பாக, அவரது இளைய சகோதரர் ஜெப்ரி பைரின் கித்திங்கான் வசம் சென்று விடலாம் என தேசிய முன்னணியின் தலைமைத்துவம் அஞ்சுகிறது.

maximus Ongkili-sabah-kota marudu MP
டத்தோ டாக்டர் மேக்சிமஸ் ஓங்கிலி
#TamilSchoolmychoice

ஜெப்ரி கித்திங்கானோ, ஸ்டார் (STAR) என்ற எதிர்க்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்று சபா அரசியல் களத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார். அரசியலில் இருந்து தனது அண்ணன் ஒதுங்கும் பட்சத்தில் அவருக்குப் பதிலாக கடசான் டுசுன் இன மக்களின் ஆதரவைப் பெற்ற தலைவராக தான் உருவெடுக்கலாம் என்ற கனவுகளோடு ஜெப்ரி செயல்பட்டு வருகிறார்.

பிபிஎஸ் கட்சியின் துணைத் தலைவரான டத்தோ டாக்டர் மேக்சிமஸ் ஓங்கிலி தற்போது பிபிஎஸ் கட்சியின் இடைக்கால தேசியத் தலைவராகப் பதவி வகித்து வருகிறார்.

பைரின் கித்திங்கானுக்குப் பதிலாக தம்புனான் தொகுதியில் மேக்சிமஸ் போட்டியிட எண்ணம் கொண்டுள்ளார். எனினும் பைரின் இடத்தை அவரால் நிரப்ப முடியாது, அதற்கேற்ற அரசியல் செல்வாக்கு அவருக்கு இல்லை, தம்புனான் தொகுதியில் நின்றால் மேக்சிமஸ் தோல்வியடையக் கூடும் என தேசிய முன்னணி கருதுகிறது. இதன் காரணமாக, பைரின் அரசியலில் இருந்து விலகினால், அவரது இடத்தை அவரது தம்பி கைப்பற்றி விடுவார் என்பதால், மீண்டும் பைரின் கித்திங்கானுக்கே நெருக்கடி கொடுத்து சபா அரசியலில் அவரை முன் நிறுத்துகிறது தேசிய முன்னணி.

பைரின் கித்திங்கான் தொகுதிகள்

sabah-tambunan-state assmbly-2013-results
சபா தம்புனான் சட்டமன்றத் தொகுதியின் 2013 பொதுத் தேர்தல் முடிவுகள்

தேசிய முன்னணியின் அச்சத்திற்கும் காரணம் உண்டு. கடந்த 2013 பொதுத் தேர்தலில் 2,079 வாக்குகள் பெரும்பான்மையில் தம்புனான் சட்டமன்றத் தொகுதியில் பைரின் வென்றார் என்றாலும், அவருக்கு எதிராகக் கிடைத்த மொத்த எதிர்க்கட்சிகளின் வாக்குகள் 5,905 ஆகும். அதாவது பல தவணைகளாக பைரின் தற்காத்து வந்த தம்புனான் தொகுதியில் அவருக்கே எதிரான வாக்குகள் அவர் பெற்ற வாக்குகளை விட 319 வாக்குகள் அதிகம் என்பதால், இந்தத் தேர்தலில் அவர் நிற்காமல் ஒதுங்கிக் கொண்டால் நிலைமை என்னவாகும் என்பதை நாம் விளக்க வேண்டியதில்லை.

அதே போல அவர் போட்டியிட்டு வென்று வந்துள்ள நாடாளுமன்றத் தொகுதி கெனிங்காவ் ஆகும். இங்கேயும் கடந்த பொதுத் தேர்தலில் அவர் கடும் போட்டிக்கிடையில் வெற்றியடைந்தாலும், அவரை எதிர்த்து நின்ற எதிர்க்கட்சிகளின் மொத்த வாக்குகள் அவர் பெற்ற வாக்குகளை விட அதிகம் ஆகும்.

sabah-keningau-parliament-2013-results
பைரின் கித்திங்கான் போட்டியிட்டு வென்ற சபா கெனிங்காவ் நாடாளுமன்றத் தொகுதியின் 2013 பொதுத் தேர்தல் முடிவுகள்

கெனிங்காவ் நாடாளுமன்றத் தொகுதியையும் 1986 முதல் பைரின் தற்காத்து வருகிறார் என்றாலும் கடந்த 2013 பொதுத் தேர்தலில் அவர் 3,918 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் – அவரை எதிர்த்து நின்ற ஸ்டார் மற்றும் பிகேஆர் கட்சிகள் கூட்டாக பெற்ற மொத்த வாக்குகள் 19,725 ஆகும்.

அதாவது பைரினை விட எதிர்க்கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் 3,907 கூடுதலாகும். அதிலும் அவரை எதிர்த்து நின்ற அவரது சொந்தத் தம்பி ஜெப்ரி கித்திங்கான் 11,900 வாக்குகள் பெற்ற நிலையில் மற்றொரு எதிர்க்கட்சியான பிகேஆர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஸ்டீபன் சண்டோர் 7,825 வாக்குகள் பெற்றார். எதிர்க்கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட பிளவு காரணமாகவே பைரின் வெற்றி பெற முடிந்தது என்பது கண்கூடு.

jeffrey-kitingan
ஜெப்ரி கித்திங்கான்

எனவே, மீண்டும் பைரின் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டு அவருக்குப் பதிலாக ஜெப்ரி கெனிங்காவ் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டால் – எதிர்க்கட்சிகள் ஒருமுகமான ஆதரவை அவருக்கு வழங்கினால் – ஜெப்ரியே இங்கு வெல்வார் எனக் கருதப்படுவதால், பைரின் கித்திங்கானுக்கு 77 வயதானாலும் பரவாயில்லை – மீண்டும் அவரையே நிறுத்துவோம் – என தேசிய முன்னணி முடிவு செய்திருக்கிறது.

இந்த முறை ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியும் மிகவும் முக்கியம் என்பதால், எதையும் விட்டுக் கொடுக்க தேசிய முன்னணி தயாராக இல்லை.

இதன் காரணமாகத்தான் – மீண்டும் சபா அரசியலில் தனது 77-வது வயதிலும் களம் காண, வேறு வழியின்றி இறக்கி விடப்படுகிறார் பைரின்.

பைரின் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று சாதனை படைப்பாரா? – அல்லது தான் அறிவித்தபடி அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வாரா?

அல்லது தேசிய முன்னணியின் வற்புறுத்தலால் மீண்டும் தனது சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு மக்களால் – வாக்காளர்களால் புறக்கணிக்கப்பட்டு – தனது இறுதிக் காலத்தில் தோல்வி முகத்தோடு, சபா அரசியலை விட்டு ஒதுங்குவாரா?

-இரா.முத்தரசன்