Home இந்தியா ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க மாட்டேன்: கமல் விளக்கம்

ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க மாட்டேன்: கமல் விளக்கம்

1170
0
SHARE
Ad

சென்னை – மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கமாட்டேன் என்றும், ஆனால் அவரது இறுதிச்சடங்குகளில் கலந்து கொண்டு, ஸ்ரீதேவியின் கணவர் மற்றும் குழந்தைகளுக்கு ஆறுதல் சொல்வேன் என்றும் மநீம கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

இன்று திங்கட்கிழமை பிற்பகல் மும்பை செல்லும் முன் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல், ஸ்ரீதேவியின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, அவரது கணவர், குழந்தைகளுக்கு ஆறுதல் கூற மும்பை செல்வதாகத் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி 21-ம் தேதி, முன்னாள் குடியரசுத் தலைவர் அமரர் அப்துல் கலாமின் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார் கமல்.

#TamilSchoolmychoice

அப்போது செய்தியாளர்கள், “அப்துல் கலாமின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்காத நீங்கள், அவரது வீட்டில் இருந்து அரசியல் பயணத்தைத் தொடங்குகிறீர்களே?” என்று கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த கமல், நான் இறுதி ஊர்வலங்களில் பங்கேற்பதில்லை எனத் தெரிவித்தார்.

கமலின் இந்தப் பதில் சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம் கமல் மறைந்த சினிமா நட்சத்திரங்கள் பலருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியிருக்கிறார் என ஊடகங்கள் சுட்டிக் காட்டியிருந்தன.

இதனால் தான், ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தப் போவது குறித்து கமல் இவ்வாறு விளக்கமளித்திருக்கிறார்.

இதனிடையே, துபாயில் ஸ்ரீதேவியின் நல்லுடல் பிரேதப் பரிசோதனை நடைபெற்றுவிட்ட நிலையில், தற்போது அந்நாட்டு காவல்துறைத் தரப்பில் கூடுதல் விசாரணை நடைபெற்று வருவதாகவும், அது நிறைவடைந்தவுடன் அவரது நல்லுடல் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டு, பின்னர் தனிவிமானம் மூலம் மும்பை கொண்டு வரப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.