Home நாடு ஜிஎஸ்டி இரத்து: ஏப்ரல் 7-இல் தே.முன்னணியின் தேர்தல் அறிக்கை பதில் தருமா?

ஜிஎஸ்டி இரத்து: ஏப்ரல் 7-இல் தே.முன்னணியின் தேர்தல் அறிக்கை பதில் தருமா?

984
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஜிஎஸ்டி இரத்து செய்யப்படும் என கடந்த மார்ச் 8-ஆம் தேதி, தனது தேர்தல் அறிக்கையை பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அறிவித்ததில் இருந்து தேசிய முன்னணி வட்டாரங்களில் சற்றே கலக்கமும், இதை எப்படி சமாளிப்பது என்ற கவலையும் அதிகமாக ஏற்பட்டிருப்பது கண்கூடாகத் தெரிகிறது.

காரணம், பக்காத்தானின் தேர்தல் அறிக்கை வெளியான நாள்முதல், பிரதமர் உள்ளிட்ட அனைத்து தேசிய முன்னணித் தலைவர்களும் இந்த ஒரே அம்சத்தை நோக்கித்தான் தங்களின் எதிர்ப்புக் குரல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

ஜிஎஸ்டி இல்லாவிட்டால் நாடு திவாலாகி விடும் என்ற அளவுக்கு தேசிய முன்னணித் தலைவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். ஆனால், இயல்பாகவே எழும் இரண்டு கேள்விகளுக்கு தேசிய முன்னணி தலைவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.

ஆட்சிக்கு வந்த முதல் 100 நாட்களில் பக்காத்தான் நிறைவேற்றப் போகும் 10 திட்டங்கள்
#TamilSchoolmychoice

முதலாவது, ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு, சேவை வரியால் பொதுமக்கள் தினமும் படும் அவதிகள், அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினங்களுக்கான தீர்வை – மாற்றுத் திட்டத்தை – தேசிய முன்னணியால் இதுவரை வழங்க முடியவில்லை.

பிரிம் தொகை வழங்கப்பட்டாலும் இது அனைத்து மக்களையும் சென்று சேர்வதில்லை. எனவே, மக்களின் ஜிஎஸ்டி குறித்த மக்களின் குறைபாடு இன்னும் தீர்ந்தபாடில்லை.

இரண்டாவது கேள்வி – ஜிஎஸ்டி, சாலைக் கட்டணம் (டோல்) போன்றவற்றின் வசூல் இல்லையென்றால், நாடு திவாலாகிவிடும் என்றால், ஜிஎஸ்டி வராமல் இருந்திருந்தால், உண்மையிலேயே நாடு திவாலாகி விட்டிருக்குமா என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது. இதற்கும் தேசிய முன்னணி தரப்பிலிருந்து பதில் இல்லை.

பக்காத்தான் தேர்தல் அறிக்கை மூன்று அம்சங்களில் பெரும்பாலான வாக்காளர்களைக் குறிவைத்து வெற்றிகரமாக வடிவமைக்கப்பட்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

ஜிஎஸ்டி இரத்து, டோல் கட்டணம் படிப்படியாக நீக்கம், பிடிபிடிஎன் கல்விக் கடன்கள் மீதான சலுகைகள் ஆகிய மூன்றே அவையாகும். மக்களிடையே அதிகம் பேசப்படும் தேர்தல் அறிக்கைத் திட்டங்களாக இவை திகழ்கின்றன.

ஜிஎஸ்டி, டோல் இரண்டும் குறித்த பக்காத்தான் அறிவிப்புகள்  பெரும்பாலான பொதுமக்களைக் கவர்ந்திருக்கும் வேளையில் பிடிபிடிஎன் கடனுதவிச் சலுகைகள் இளைய சமுதாயத்தினரை – மாணவர் சமுதாயத்தினரைக் கவர்ந்துள்ளது. இந்த முறை இளைஞர்கள்தான் வாக்காளர்களில் பெரும்பான்மையினராகத் திகழப் போகின்றனர் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய முன்னணி தலைவர்கள் கூட இந்த மூன்று அம்சங்கள் குறித்துத்தான் பக்காத்தானுக்கு எதிராகத் தீவிரமான பதில் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

தேசிய முன்னணி தேர்தல் அறிக்கை கலக்கத்தைத் தீர்க்குமா?

இதற்கிடையில் எதிர்வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

புக்கிட் ஜாலில் புத்ரா அரங்கத்தில் நடைபெறவிருக்கும் தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் அனைத்து தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கையில் பக்காத்தானின் அறிவிப்புகளை முறியடிக்கும் வகையில் – மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் – அம்சங்கள் இடம் பெறாவிட்டால்,

அதுவே, தேசிய முன்னணியின் பிரச்சாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஜிஎஸ்டி இரத்து என்ற ஒரே அம்சத்தின் காரணமாக பக்காத்தான் கூட்டணி வாக்காளர்களின் ஆதரவைக் கூடுதலாகப் பெறும் சூழ்நிலையும் ஏற்படும்.

-இரா.முத்தரசன்