Home நாடு முனைவர் மனோன்மணி தேவிக்கு ‘ஐயை இலக்கணக் கதிர்’ விருது

முனைவர் மனோன்மணி தேவிக்கு ‘ஐயை இலக்கணக் கதிர்’ விருது

1582
0
SHARE
Ad
மனோன்மணி தேவி டத்தோ சரவணனிடம் இருந்து விருது பெறுகிறார்

கோலாலம்பூர் – கடந்த சனிக்கிழமை 17 மார்ச் 2018-ஆம் நாள் தலைநகர் நேதாஜி மண்டபத்தில்  நடைபெற்ற அனைத்துலக முதல் ‘ஐயை உலகத்தமிழ் மகளிர் ஒன்றுகூடல்’ நிகழ்ச்சியில் பல நாடுகளிலிருந்தும் பல்துறையைச் சார்ந்த பெண்கள் இங்கு சிறப்பிக்கப்பட்டனர்.

அவ்வகையில் நம் நாட்டுச் சிறந்த  மகளிர்களின் பட்டியலில் முனைவர் மனோன்மணி தேவி அண்ணாமலை அவர்களுக்கும்  ‘ஐயை  இலக்கணக்கதிர்’ என்ற விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. தமிழ் இலக்கணத்துறையில் தன்னை  முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் முனைவர் மனோன்மணி தேவி. அவருக்குக் கிடைத்த இந்த விருது அவரது தமிழ்ப் பணிக்குக் கிடைத்த ஓர் அங்கீகாரமாகும்.

பல்லாண்டுகள் தமிழ் இலக்கணப் பணி

முனைவர் மனோன்மணி தேவி இடைநிலைப் பள்ளியில் 16 ஆண்டுகள் தமிழ் ஆசிரியையாகப் பணிபுரிந்து நல்லாசிரியர் விருது பெற்றவர். இலக்கணத்தில் தடம் பதித்து  முனைவராகத் தன்னை உயர்த்திக் கொண்டவர்.  தமது அடிப்படைத் தமிழ் இலக்கண அறிவைத் இலக்கணப் பேராசான் சீனி நைனா முகம்மது அவர்களிடம் கற்றுத் தேர்ந்தவர். 2007ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ் இலக்கணப் பாடத்தை அவர் கற்பிக்கத் தொடங்கினார். அதே வேளையில் தமது ஆசான் கம்பார் கனிமொழி குப்புசாமி அவர்களிடம் தமிழ் இலக்கியத்தையும் மனோன்மணி தேவி கற்றுத் தேர்ந்தார்.

#TamilSchoolmychoice

மலாயாப் பல்கலைக் கழகத்தில் நவீன தமிழ் இலக்கியத்திலும், அண்ணாமலைப்  பல்கலைக்கழகத்தில் மொழியியலிலும்  இரு முதுகலைப் பட்டங்கள் பெற்றவர் மனோன்மணி. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்,  ஒருசிலர் மட்டுமே ஆர்வம் காட்டும் இலக்கணத்துறையைத் தேர்ந்தெடுத்து, மரபிலக்கணத்தில் முனைவர் பட்டம் பெற்ற மலை நாட்டின் முதல் பெண் ஆய்வாளரும் இவரே.

முனைவர் மனோன்மணி  தமிழ் இலக்கணத்தில் பல ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்தவர். “இலக்கண ஆய்வில் ஒரு துமி”, “இலக்கிய ஆய்வில் ஒரு துமி” ஆகிய நூல்களை வெளியீடு செய்தவர்.

சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் (உப்சி) 2011 ஆம் ஆண்டு விரிவுரையாக பணியை ஆரம்பித்த முனைவர் மனோன்மணி தேவி  தற்போது உப்சி தமிழ்ப்பிரிவின் தலைவராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளார். முனைவர் மனோன்மணி தேவி ஐயை உலக மகளிர் மாநாட்டில் அடையாளங் காணப்பட்டு, ஐயை இலக்கணக்கதிர் விருது பெற்றது பாராட்டுக்குரியதாகும்.

ஐயை உலகத் தமிழ் மகளிர் குழுமம்

உலகத் தமிழ் மகளிரை இணைக்கும் இயக்கமாக பல நாடுகளின் உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட ஐயை உலகத் தமிழ் மகளிர் இயக்கத்தை ஒரிசா பாலு தோற்றுவித்தார். ‘ஐயா’ என ஆண்கள் அழைக்கப்படுவதற்கு இணையாக மகளிரை ‘ஐயை’ என அழைக்கும் விதமாக இந்த மகளிர் குழுமத்திற்கு ஐயை எனப் பெயர் சூட்டப்பட்டதாக அந்த இயக்கத்தினர் தங்களின் பெயருக்கான விளக்கத்தைத் தந்திருக்கின்றனர்.

ஐயை குழுமத்தின் முதல் மாநாடு மார்ச் 17-ஆம் தேதி மலேசியாவில் நேதாஜி மண்டபத்தில் நடந்தேறியபோது அதன் முதல் அங்கத்தில் கட்டுரைகள் படைக்கப்பட்டன. அதன் பின்னர் ஐயை விருதளிப்பு விழாவும் நடைபெற்றது.

உலகளாவிய அளவில் தமிழ்ப்பெண்களை – அவர்களின் தனித்திறமைகள் மற்றும் ஆற்றிக்கொண்டிருக்கும் சேவைகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்து – ஐயை சிறப்பு விருதுகளும், மற்றவர்களுக்கு அவர்கள் துறை சார்ந்த விருதுகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு, இந்தியா, இலங்கை, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, துபாய் ஆகிய நாடுகளில் இருந்து ஐயை குழுவினர் பேச்சாளர்களாகவும், கட்டுரைகளைப் படைக்கவும் விருதுகளைப்  பெறவும் வருகை தந்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சி இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் தலைமையிலும், பேராக் மாநில சபாநாயகர் தங்கேஸ்வரி முன்னிலையிலும், கெடா பிரமுகர் டத்தின் தாமரைச்செல்வி சுப்பிரமணியம் வரவேற்புரையுடனும் நடைபெற்றது.

சிறப்பு ஐயை விருதுகள் பட்டியலின்படி, மலேசிய நாட்டைச் சேர்ந்த சபாநாயகர் தங்கேஸ்வரிக்கு (ஜான்சிராணி) விருதும், முனைவர் முல்லை ராமையாவுக்கு (தமிழ்ப் பேரொளி) விருதும், நாட்டியக் கலைஞர் தஞ்சை இந்திரா மாணிக்கத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.

முனைவர் முல்லை உலகிலேயே முதன்முதலில் தமிழில் கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்காக ஒலிவழி கற்றல் முறையை உருவாக்கியமைக்காக இந்த ஐயை தமிழ்ப்பேரொளி விருதைப் பெற்றார்.