Home நாடு புதன்கிழமை நாடாளுமன்றத்தின் முன் பெர்சே ஆர்ப்பாட்டம்

புதன்கிழமை நாடாளுமன்றத்தின் முன் பெர்சே ஆர்ப்பாட்டம்

1041
0
SHARE
Ad
நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பெர்சே பத்திரிக்கையாளர் சந்திப்பில்…

கோலாலம்பூர் – தேர்தல் ஆணையத்தின் தொகுதி எல்லை மாற்றங்கள் மீதான மசோதா எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் அன்றைய தினம் பொதுத் தேர்தலுக்கான கண்காணிப்பு அமைப்பான பெர்சே நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்துள்ளது.

அந்தத் தொகுதி எல்லை மாற்ற மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டாம் என்றும் பெர்சே  நாடாளுமன்ற அவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியாவிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளது.

அதே வேளையில், இந்தத் தொகுதி எல்லை மாற்றங்கள் குறித்த பல வழக்குகள் இன்னும் நீதிமன்ற விசாரணையில் பல்வேறு கட்டங்களில் இருப்பதால், அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதும் விவாதிப்பதும் நீதிமன்ற அவமதிப்புக்கு ஒப்பாகும் என ஜசெகவின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கும் எச்சரித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் பெர்சே உறுப்பினர்கள் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை நாடாளுமன்ற அவைத் தலைவர் பண்டிகாரிடம் வழங்கவும் முயற்சிகள் மேற்கொள்வர்.

“நமக்கான அரசாங்கத்தை ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்க வேண்டிய நமது உரிமைகளுக்காக நாம் விட்டுக் கொடுக்காமல் போராட வேண்டும். நமது அரசியல் சாசனத்திற்கு எதிராக அதிகார விதிமீறல்களும்  முறைகேடுகளும் தொடர்வதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது” என்றும் பெர்சே அறிவித்திருக்கிறது.

வாக்காளர்கள் இந்த தொகுதி எல்லை மாற்றங்கள் சமர்ப்பிக்கப்படுவதற்குத் தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட பெர்சே, இந்த மசோதாவை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது.

வெளிப்படைத் தன்மையின்றி, நடைமுறைகளை மீறி தேர்தல் ஆணையம் சமர்ப்பித்துள்ள இந்த மசோதாவை எதிர்க்க எதிர்வரும் புதன்கிழமையன்று பொதுமக்கள் நாடாளுமன்றத்தின் முன் திரள வேண்டும் என நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பெர்சே அமைப்பின் இடைக்காலத் தலைவர் ஷாருல் அமான் முகமட் சாரி தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் வழக்குகள் இன்னும் முடிவடையாத நிலையில் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா சமர்ப்பிக்கப்படக் கூடாது என்றும் ஷாருல் தெரிவித்தார்.

மலேசிய அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டபடி, பொதுமக்களின் ஆட்சேபங்களையும் தேர்தல் ஆணையம் இன்னும் செவிமெடுக்கவில்லை என்றும் ஷாருல் குற்றம் சாட்டினார்.

சபா தொகுதி எல்லை திருத்தங்கள் சமர்ப்பிக்கப்படாதது ஏன்?

அதே வேளையில், இன்னொரு கோணத்தில், சபா மாநிலத்தில் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை மாற்றங்கள் சமர்ப்பிக்கப்பட்டு சபா சட்டமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னரும் இதுவரையில் அங்கீகாரத்திற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டால்தான் அவை சட்டமாகும்.

ஆனால் சபா எல்லை திருத்தங்களை இதுவரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல், மேற்கு மலேசியாவுக்கான தொகுதி எல்லை மாற்றங்களை மட்டும் தேர்தல் ஆணையம் சமர்ப்பிக்கிறது.

சபா மாநில தொகுதி எல்லை மாற்றங்கள் நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டால், எதிர்வரும் பொதுத் தேர்தலில் அந்தத் தொகுதி எல்லை மாற்றங்களால் ஷாபி அப்டாலுக்கு சாதகமான வாய்ப்புகள் ஏற்படும் என்ற கருத்தும் நிலவுகிறது. அதனால்தான் சபா தொகுதி மாற்றங்கள் நாடாளுமன்றத்தில் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

தேர்தல் ஆணையத்தின் இந்த பாரபட்சமற்ற போக்கையும் பலர் கண்டித்துள்ளனர்.

இந்தத் தொகுதி எல்லை மாற்றங்களை நிறைவு செய்து சமர்ப்பிக்க தேர்தல் ஆணையத்திற்கு இரண்டு ஆண்டுகள் தரப்பட்டிருக்கிறது. அந்த கால அவகாசம் எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. கடந்த செப்டம்பர் 2016-ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் தனது தொகுதி மாற்ற நடவடிக்கைக்கான அறிவிப்பை வெளியிட்டது.

இந்தத் தொகுதி எல்லை மாற்றங்களுக்கான அனைத்து சட்டரீதியான எதிர்ப்புகளும் ஒரு முடிவுக்கு வந்தபின்னரே நாடாளுமன்றத்தில் இந்த மசோதா சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் பெர்சே தெரிவித்திருக்கிறது.