Home நாடு பூச்சோங்: கோபிந்த் சிங்கிற்குப் பதிலாக அவரது தங்கை சங்கீத் கவுர்

பூச்சோங்: கோபிந்த் சிங்கிற்குப் பதிலாக அவரது தங்கை சங்கீத் கவுர்

1203
0
SHARE
Ad
சங்கீத் கவுர்

கோலாலம்பூர் – ஜசெகவின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் இந்த முறை ஜோகூர் மாநிலத்தை மையமாக வைத்துப் போட்டியிடுவார்கள் என்ற ஆரூடங்களுக்கு மத்தியில் பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ ஜோகூரில் கூலாய் தொகுதியில் நிறுத்தப்படுவார் என ஆரூடம் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதியில் அவரது தங்களை சங்கீத் கவுர் டியோ அங்கு ஜசெகவின் சார்பில் நிறுத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

இது உண்மையானால், மறைந்த கர்ப்பால் சிங் குடும்பத்தினரில் பெரும்பாலோர் ஜசெக வேட்பாளர்களாகப் போட்டியிடும் சூழ்நிலை உருவாகும். ஏற்கனவே கர்ப்பாலின் மூன்று மகன்கள் ஜசெகவின் முக்கிய பொறுப்புகளில் இருந்து வரும் நிலையில், தற்போது நான்காவதாக சங்கீத் கவுர் இணையக் கூடும்.

#TamilSchoolmychoice

சங்கீத் கவுரை வேட்பாளராக நிறுத்துவதன் மூலம், அதிகமான மகளிருக்கு பொதுத் தேர்தலில் வாய்ப்புகள் வழங்கும் கடப்பாட்டையும் ஜசெக பூர்த்தி செய்யும்.

ஒரு வழக்கறிஞரான சங்கீத் கவுர், சிலாங்கூர் ஜசெகவின் மாநில மகளிர் பிரிவு துணைத் தலைவியாகத் தற்போது பொறுப்பு வகித்து வருகிறார்.

பக்காத்தான் கூட்டணியின் தலைவராக துன் மகாதீர் பொறுப்பேற்ற போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, எனது தந்தை இருந்திருந்தால் இந்த முடிவுக்கு ஒப்புக்கொண்டிருக்க மாட்டார் என்ற அதிரடி அறிக்கையையும் அப்போது சங்கீத் கவுர் விடுத்தார்.

இதற்கிடையில் சுபாங் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இரண்டு தவணைகளாக இருந்து வரும் ஹன்னா இயோ பூச்சோங் தொகுதியில் நிறுத்தப்படலாம் என்றும் ஜசெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2013 பொதுத் தேர்தலில் கோபிந்த் சிங் பூச்சோங் தொகுதியில் 32,802 வாக்குகள் பெரும்பான்மையில் கெராக்கான்-தேசிய முன்னணி வேட்பாளரான கோகிலன் பிள்ளையைத் தோற்கடித்தார்.