Home நாடு பெர்சாத்து இரத்து: கொதிக்கும் நடுநிலை வாக்காளர்களால் தே.மு. வாக்குகளை இழக்கும்

பெர்சாத்து இரத்து: கொதிக்கும் நடுநிலை வாக்காளர்களால் தே.மு. வாக்குகளை இழக்கும்

1006
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று வியாழக்கிழமை காலை முதல் துன் மகாதீரின் தலைமையிலான பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து கட்சியின் பதிவு தற்காலிகமாக இரத்து செய்யப்படுகிறது என்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த போது, அரசியல் ஆர்வலர்களால் நம்மிடையே பகிரப்பட்ட தொலைபேசி அழைப்புகளின் மூலம் ஒரு பொதுக் கருத்தை உணர முடிந்தது.

நடுநிலை வாக்காளர்களின் ஆதரவை – யாருக்கு வாக்களிப்பது என்பதை இதுவரை முடிவு செய்யாத வாக்காளர்களின் பொன்னான வாக்குகளை – தேசிய முன்னணி பொதுத் தேர்தலுக்கு முன்பே இழந்து நிற்கிறது என்பதுதான் அது!

மகாதீரை மீண்டும் பிரதமராக வரவே விடக் கூடாது – அவரால்தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள் – இந்தியர்கள் அவரால்தான் தலையெடுக்க முடியாமல் போனது – என்றெல்லாம் நேற்று வரை பேசிக் கொண்டிருந்த இந்திய நண்பர் ஒருவர் பெர்சாத்து கட்சியின் பதிவு இடைக்கால இரத்து என்ற செய்தி வந்ததும் கொதித்துப் போனார்.

#TamilSchoolmychoice

“இரத்தம் கொதிக்கிறது. தேசிய முன்னணிக்கு வாக்களிக்கவே கூடாது. எப்படி நஜிப் இவ்வாறு செய்யலாம்? இது அநியாயம்” என்றெல்லாம் அடுத்த கணமே அடுக்கிக் கொண்டே போனார்.

இந்தப் பொதுத் தேர்தலில் இதுவரையில் பிரதமர் நஜிப் செய்த பல முடிவுகளில் இமாலயத் தவறு பெர்சாத்து கட்சியின் பதிவை இரத்து செய்தது என்பதை பொதுத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டும் என எதிர்பார்க்கலாம்.

காரணம், இன்னும் கணிசமான விழுக்காட்டு வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுக்கவில்லை.

வாக்களிப்பு தினம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் எனக் காத்திருக்கும் இந்த நடு நிலை வாக்காளர்கள் பொதுவாக பொதுத் தேர்தல் திட்டமிடல் ஆய்வாளர்களால் ‘கிரே’ (Grey) – இளம் கறுப்பு – வண்ணப் பிரிவினர் என அடையாளம் காட்டப்படுவார்கள்.

அதாவது, வழக்கமான ஆதரவுப் பிரிவினர் வெண்மை நிறத்திலும், எதிர்ப்புப் பிரிவினர் அல்லது எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கறுப்பு அல்லது சிவப்பு நிறத்திலும் அடையாளம் காட்டப்படுவார்கள். அடுத்து இதுவரை யாருக்கு வாக்களிப்பது என முடிவு செய்யாத வாக்காளர்கள் இளம் கறுப்பு நிறத்தால் அடையாளம் காட்டப்படுவார்கள்.

பொதுவாக, அரசியல் கட்சிகள் பொதுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், இந்த நடுநிலை வாக்காளர்களைக் கவர்வதற்குத்தான் பல முயற்சிகள் மேற்கொள்வார்கள். காரணம், இவர்கள் எந்தப் பக்கம் சாய்கிறார்களோ அந்தக் கட்சிதான் வெல்லும் என்பது பெரும்பான்மை ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்ளும் அரசியல் விதி.

எனவேதான், பொதுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், அரசியல் கட்சிகள் அதிரடியான அறிவிப்புகளையோ, இந்த நடுநிலை வாக்காளர்களின் முடிவைப்  பாதிக்கும் நடவடிக்கைகளையோ எடுக்க மாட்டார்கள்.

ஆனால், நஜிப்பின் செயலோ அதற்கு நேர்மாறாக இருக்கிறது!

பெர்சாத்து கட்சியின் பதிவை இரத்தாக்கும் முடிவால், இந்த நடுநிலை வாக்காளர்கள் தற்போது ஆத்திரத்தில் இருக்கிறார்கள். கொதிப்பில் இருக்கிறார்கள்.

நஸ்ரி போன்ற ஒரு சில அமைச்சர்கள்தான், பெர்சாத்து கொசுக் கட்சி என வர்ணித்துத் தங்களுக்குத் தானே சுகம் தேடிக் கொள்கிறார்கள்.

ஆனால், நடுநிலை வாக்காளர்கள் யாரும் அப்படிக் கருதவில்லை.

பெர்சாத்து கட்சிக்கும், அரசியல் அரங்கில் தங்களின் வலிமையைக் காட்ட ஒரு வாய்ப்பு தந்திருக்க வேண்டும் என நினைக்கும் நடுநிலை வாக்காளர்கள் நிச்சயம் தேசிய முன்னணிக்கு எதிராகத்தான் வாக்களிப்பார்கள்.

அவர்களை மீண்டும் தங்கள் பக்கம் ஈர்க்க – அவர்களின் மனதை மாற்ற – அவர்களை வெண்மை நிறத்தினராக அடையாளம் காட்ட – தேசிய முன்னணி கைவசம் அஸ்திரங்கள் எதுவும் கைவசம் இருப்பதாக இதுவரை தெரியவில்லை!

-இரா.முத்தரசன்