Home நாடு ரபிடா அசிஸ் குற்றச்சாட்டு உண்மையல்ல – ஹிஷாமுடின் மறுப்பு

ரபிடா அசிஸ் குற்றச்சாட்டு உண்மையல்ல – ஹிஷாமுடின் மறுப்பு

825
0
SHARE
Ad
ஹிஷாமுடின் ஹூசேன் ஓன்

கூச்சிங் – பிரதமர் நஜிப்புக்கு எழுதியுள்ள பகிரங்கக் கடிதத்தில் தற்காப்பு அமைச்சு 40,000 ஹெக்டர் பரப்பளவுள்ள நிலத்தை பிரபலமில்லாத ஒரு நிறுவனத்திற்குக் குத்தகைக்கு கொடுத்துள்ளது என முன்னாள் அம்னோ அமைச்சர் டான்ஸ்ரீ ரபிடா அசிஸ் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என இன்று சரவாக் தலைநகர் கூச்சிங்கில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹூசேன் தெரிவித்துள்ளார்.

ரபிடா அசிஸ் தனது கடிதத்தில், மூன்று நபர்களை உரிமையாளர்களாகக் கொண்ட ஒரு நிறுவனம் தற்காப்பு அமைச்சின் 40 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவு கொண்ட நிலங்களைத் தற்போது தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்றும் ரபிடா (படம்) குற்றம் சாட்டியிருந்தார்.

#TamilSchoolmychoice

Rafidah Azizஇது ஒரு தனியார்மயமாக்கல் திட்டம் என்றும் குறிப்பிட்ட ரபிடா, 2007-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் அப்துல்லா படாவியின் அமைச்சரவையில் நஜிப் தற்காப்பு அமைச்சராக இருந்தபோது இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது என்றும், அந்தத் திட்டத்திற்கான நிறுவனத்தை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள் – ஏன் ஆயுதப் படைகளின் நலநிதி வாரியத்திடம் அந்தத் திட்டம் ஒப்படைக்கப்படவில்லை – என்றெல்லாம் தான் கேள்விகள் எழுப்பியதாகவும் ரபிடா அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அந்தக் காலகட்டத்தில் ரபிடா அசிஸ் அனைத்துலக வாணிப தொழில்துறை அமைச்சராக இருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த ஹிஷாமுடின் “சில ஆண்டுகளுக்கு முன்னால் தரிசாகக் கிடக்கும் தற்காப்பு அமைச்சின் நிலங்களை விவசாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளும் திட்டம் ஒன்று குறித்து விவசாயத் துறை அமைச்சிடம் விவாதித்தேன். ஆனால் அதற்குப் பின்னர் இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் தொடரவில்லை” என்றும் கூறினார்.

எனினும் இதுகுறித்த முழுவிவரங்கள் அடங்கிய அமைச்சரவைக் கூட்டக் குறிப்புகளைப் பார்த்த பின்னர் இதுகுறித்து விரிவான விளக்கம் தரப் போவதாகவும் ஹிஷாமுடின் கூறினார்.

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட அந்த நிறுவனத்தின் பெயரையும், அதன் 3 உரிமையாளர்களின் பெயரையும் வெளியிட வேண்டும் என்றும் ரபிடா நஜிப்புக்கு சவால் விடுத்துள்ளார்.