Home நாடு லங்காவி : மகாதீர் போட்டியிடுவது உறுதி

லங்காவி : மகாதீர் போட்டியிடுவது உறுதி

802
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் பல்வேறு கட்சிகளால் வரிசையாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பக்காத்தான் கூட்டணியின் தலைவர் துன் மகாதீர் லங்காவியில் போட்டியிடுவது உறுதி என பெர்சாத்து கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று பகாங், தெமர்லோவில் ஆயிரக்கணக்கில் திரண்ட ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றி, பகாங் மாநிலத்தில் போட்டியிடும் பெர்சாத்து கட்சியின் வேட்பாளர்களை மகாதீர் அறிவித்தார்.

எதிர்வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி கெடா மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் மகாதீர், அன்றைய தினம் தனது முந்தைய நாடாளுமன்றத் தொகுதியான குபாங் பாசுவில் பிரச்சாரத்தை மேற்கொள்வார். மறுநாள் ஏப்ரல் 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் லங்காவித் தீவில் மகாதீர் பிரச்சாரங்களை மேற்கொள்வார். அந்த சமயத்தில் அவர் லங்காவியில் போட்டியிடுவதை அறிவிப்பார் என்றும் பக்காத்தான் ஹரப்பான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

மகாதீர் போட்டியிட அவரது முந்தைய தொகுதி குபாங் பாசுவும் கவனத்தில் கொள்ளப்பட்டதாகவும் ஆனால் இறுதி முடிவாக லங்காவி நாடாளுமன்றமே தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லங்காவி தொகுதியைக் கடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட அம்னோ வேட்பாளர் நவாவி பின் அகமட் 11,861 வாக்குகள் வித்தியாசத்தில் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

91 விழுக்காடு மலாய் வாக்காளர்களையும், 6 விழுக்காடு சீன வாக்காளர்களையும் 2 விழுக்காடு இந்தியர்களையும் கொண்டது லங்காவி நாடாளுமன்றம். மற்றவர்கள் லங்காவியில் ஒரு விழுக்காடு மட்டுமே உள்ளனர்.

குவா மற்றும் ஆயர் ஹங்காட் என 2 சட்டமன்றத் தொகுதிகளை லங்காவி நாடாளுமன்றம் கொண்டிருக்கிறது.