Home நாடு ஜெலுபு மஇகாவுக்கா? எதிர்ப்பு தெரிவிக்கிறார் ராய்ஸ் யாத்திம்!

ஜெலுபு மஇகாவுக்கா? எதிர்ப்பு தெரிவிக்கிறார் ராய்ஸ் யாத்திம்!

996
0
SHARE
Ad
ராய்ஸ் யாத்திம்

கோலாலம்பூர் – நெகிரி செம்பிலானில் உள்ள தெலுக் கெமாங் தொகுதிக்குப் பதிலாக மஇகாவுக்கு ஜெலுபு தொகுதி ஒதுக்கப்படும் என வெளியாகியுள்ள செய்தியைத் தொடர்ந்து அந்த மாற்றத்திற்கு முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நெகிரி செம்பிலான் அரசியலில் நீண்ட காலம் கோலோச்சியவர் ராய்ஸ் யாத்திம். ஜெலுபு நாடாளுமன்றத்தின் உறுப்பினராக பல தவணைகள் – 2013 வரை – இருந்த ராய்ஸ் நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசாராகவும் இருந்திருக்கிறார்.

தற்போது மலேசிய அரசாங்கத்திற்கான பண்பாட்டுத் துறை ஆலோசகராகவும் ராய்ஸ் யாத்திம் பணியாற்றுகிறார்.

#TamilSchoolmychoice

இந்த மாற்றம் குறித்து ஜெலுபு அம்னோ தலைவர் தனக்குத் தெரிவித்ததாகவும் ராய்ஸ் கூறியிருக்கிறார்.

“பல காரணங்களுக்காக இந்த தொகுதி மாற்றத்தை நான் எதிர்க்கிறேன். முதலாவது இங்கு வெறும் 2,600 இந்தியர்கள்தான் இருக்கிறார்கள். 33 ஆயிரம் மலாய் வாக்காளர்களும் 12 ஆயிரம் சீன வாக்காளர்களும் இருக்கின்றனர். ஆனால் தெலுக் கெமாங்கில் 20 விழுக்காடு இந்திய வாக்காளர்கள் இருக்கின்றனர். அங்கு மஇகா போட்டியிடாமல் ஜெலுபு தொகுதியை மஇகாவுக்கு ஒதுக்குவது முறையல்ல” என அவர் கருத்து தெரிவித்ததாக மலேசியாகினி தெரிவிக்கிறது.

இந்த மாற்றம், முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ முகமட் இசா சமாட் வசதிக்காக மேற்கொள்ளப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. அதே வேளையில் மீண்டும் மஇகா தெலுக் கெமாங்கில் போட்டியிட்டால், பல்வேறு காரணங்களால் அங்கு தோல்வியையே தழுவும் என்பதால், அந்தத் தொகுதியைக் காப்பாற்றும் ஒரு நடவடிக்கையாகவும் இந்த தொகுதி மாற்றம் அமைகிறது.

2008, 2013 என இரு பொதுத் தேர்தல்களிலும் தெலுக் கெமாங்கில் மஇகா வெற்றி பெற முடியவில்லை.

ஜெலுபு நாடாளுமன்றம் – 2013 பொதுத் தேர்தல் முடிவுகள்

தெலுக் கெமாங் அம்னோ தொகுதி தலைவர், முன்னாள் அமைச்சர், முன்னாள் மந்திரி பெசார் என்ற முறையில் தெலுக் கெமாங் தொகுதி மக்களோடு நெருக்கமானத் தொடர்புகளைக் கொண்ட முகமட் இசா ஒருவரே தெலுக் கெமாங்கை தேசிய முன்னணிக்காக மீட்டுத் தரக் கூடிய வேட்பாளராகப் பார்க்கப்படுகிறார்.

நீண்ட காலமாக அம்னோ வசம் இருந்து வரும் ஜெலுபு தொகுதியை மஇகாவுக்கு விட்டுக் கொடுத்திருப்பது குறித்து எதிர்ப்பு தெரிவித்திருக்கும் ராய்ஸ், ஜெலுபுவிலுள்ள கிராமத்துத் தலைவர்களும், வேட்பு மையங்களின் பிரதிநிதிகளும் கூட இதன் தொடர்பில் கலந்தாலோசிக்கப்படவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

மேலும், தான் நெகிரி மந்திரி பெசாரைத் தொடர்பு கொண்டதாகவும், அவருக்கும் இது குறித்து முழுமையான விவரங்கள் தெரியவில்லை என்றும் ராய்ஸ் குறை கூறியுள்ளார்.

ஜெலுபு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சைனுடின் இஸ்மாயில் காலமாகி விட்டாலும், அவருக்குப் பதிலாக ஜெலுபு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட அம்னோவில் சிறந்த தலைவர்கள் பலர் இருக்கிறார்கள் என்றும் ராய்ஸ் சுட்டிக் காட்டியிருக்கிறார்.