Home நாடு “கனவுலகில் வாழ்வது வேதமூர்த்தியே! மஇகா அல்ல!” டி.மோகன் பதிலடி

“கனவுலகில் வாழ்வது வேதமூர்த்தியே! மஇகா அல்ல!” டி.மோகன் பதிலடி

1471
0
SHARE
Ad
டத்தோ டி.மோகன்

கோலாலம்பூர்- மஇகாவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம், விழுக்காடு ரீதியில் இந்தியர்கள்தான் அதிகமான அளவில் தேசிய முன்னணியை ஆதரிக்கின்றனர் என்றும், தற்போதைய சூழ்நிலையில் 60 முதல் 65 விழுக்காடு வரையிலான இந்தியர்கள் தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்குகின்றனர் என்றும் கூறியிருந்தார்.

அதற்கு, பதிலளிக்கும் வகையில் அறிக்கை விட்ட ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி டாக்டர் சுப்ராவின் கூற்றில் உண்மையில்லை என்றும் மஇகா கனவுலகில் வாழ்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.

பி.வேதமூர்த்தி

இதனைத் தொடர்ந்து, மஇகா தேசிய உதவித் தலைவர்  செனட்டர் டத்தோ டி.மோகன் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் “இந்திய சமுதாயத்தில் குழப்பமான சூழலை உருவாக்கி அதில் குளிர்காய்ந்தவரும், பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்து இந்தியர்களுக்கு 1 மில்லியன் பவுண்ட் வாங்கித் தருவதாக சொல்லி இன்று வரை அதற்கு விளக்கம் அளிக்காதவருமான வேதமூர்த்தி அன்றைய காலம் தொட்டு இன்று வரை கனவுலகில் வாழ்ந்து வருகின்றாரே தவிர மாறாக மஇகா அல்ல” என பதிலடி கொடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

“ஹிண்ட்ராப் போராட்டவாதி உதயக்குமார், மனோகரன் உட்பட சிறைவாசம் சென்ற பலர் அதன் கொள்கையிலிருந்து விலகாது இருக்கிறார்கள். ஆனால் சுயநல அரசியலுக்காக வேதமூர்த்தி கொள்கை இழந்து செயல்பட்டு வருகிறார். ஹிண்ட்ராப் இயக்கத்தினர் அனைவரும் போராடிக் கொண்டிருந்த வேளையில் இலண்டனில் ஒளிந்துக்கொண்டு சுகபோக வாழ்க்கை வாழ்ந்த வேதமூர்த்தியை இனியும் இந்தியர்கள் நம்புவதாக இல்லை. தான் காணும் பகல் கனவுகளை மக்களிடத்தில் சொல்லி அவர்களை குழப்பி ஏமாற்றும் வேலைகள் இனியும் எடுபடாது” என்றும் டி.மோகன் கூறினார்.

22 ஆண்டுகளாக நாட்டை ஆண்டு விட்டு இந்தியர்களை புறக்கணித்த துன் மகாதீரைப் பற்றியும், சுயநலத்திற்காக இந்தியர்களின் உணர்வுகளை தூண்டிய வேதமூர்த்தியை பற்றியும் இந்தியர்கள் தெளிவு பெற்றுவிட்டார்கள்.

“அன்றைய காலத்தில் வேதமூர்த்தி, மகாதீரைப் பற்றி படுமோசமாக விமர்சனம் செய்து விட்டு இன்று அவர்களெல்லாம் கைகோர்த்திருப்பது ஏன்? தேசிய முன்னணி அரசாங்கத்தை எதிர்த்த நிலையில் எதன் அடிப்படையில் இவர் துணையமைச்சராக பதவிப்பிரமாணம் எடுத்தார்? பிறகு அந்தப் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு என்னவானது? இந்தியர்களுக்கு பெற்றுத்தருவதாக கூறிய பணம் எங்கே? இதற்கெல்லாம் வேதமூர்த்தியால் விளக்கம் அளிக்க முடியுமா?” எனவும் மோகன் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

“வேதமூர்த்தியை பொறுத்தவரையில் அவரால் மக்களை சந்திக்க முடியாது. வெற்று அறிக்கை மட்டுமே வெளியிட முடியும். நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு என இவரின் அரசியல் சுயநலபோக்கை மக்கள் உணர்ந்து விட்டார்கள். ஆகவே இனியும் ஏமாற இந்தியர்கள் முட்டாள்கள் அல்லர். மஇகாவைப் பொறுத்தவரையில் இந்தியர்களின் உரிமைகளுக்கும், உணர்வுகளுக்கும் குரல் கொடுக்கும் ஒரே கட்சி. அத்தகைய நிலைப்பாட்டின் மூலமாகத்தான் தனது சேவைகளின் அடிப்படையில் இந்தியர்களிடையே தனது ஆதரவினை அதிகப்படுத்தியுள்ளது” என்றும் மோகன் விளக்கினார்.

மஇகாவின் தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கட்சியையும், சமுதாயத்தையும் காக்கும் கடப்பாட்டோடு செயல்பட்டு வரும் வேளையில் அவரின் கூற்றை விமர்சிக்க வேதமூர்த்தி போன்ற சுயநலவாதிகளுக்கு தகுதி இல்லை என்றும் கூறிய மோகன்,

“அதே நேரத்தில் நமது பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தமிழ்ப்பள்ளிகள் தொடங்கி இந்தியர்களை அனைத்து நிலைகளிலும் உயர்த்த திட்டங்களை வகுத்து அதனை செயல்படுத்தி வருகிறார். முந்தைய கால பிரதமர்களை விட இவர் இந்திய சமுதாயத்திற்காக அதிகமாக செய்துள்ளார். அதன் காரணமாகத்தான் இந்தியர்களின் ஆதரவும் மஇகாவின் பக்கமும், தேசிய முன்னணியின் பக்கமும் திரும்பி உள்ளது” என்றார் டி.மோகன்.

ஆகவே வேதமூர்த்தி வெற்று அறிக்கை வெளியிட்டு இந்திய சமுதாயத்தை ஏமாற்றலாம் என கனவு காண வேண்டாம் என டி.மோகன் தமதறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.