Home இந்தியா சீன அதிபருடன் மோடியின் ‘தனிப்பட்ட’ சந்திப்பு குறித்த 10 முக்கியத் தகவல்கள்!

சீன அதிபருடன் மோடியின் ‘தனிப்பட்ட’ சந்திப்பு குறித்த 10 முக்கியத் தகவல்கள்!

943
0
SHARE
Ad

பெய்ஜிங் – வுஹான் நகரில் நடைபெற்ற 2 நாள் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. காரணம், சீன அதிபர் இது போன்ற நட்புமுறையிலான சந்திப்பை நடத்துவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில், இச்சந்திப்பின் போது நடந்த பேச்சுவார்த்தைகளில் 10 முக்கிய அம்சங்களாவன:

#TamilSchoolmychoice

1. நட்பு முறையிலான இச்சந்திப்பு இன்னொரு முறை இந்தியாவில் நடத்த வேண்டுமென சீன அதிபருக்கு மோடி அழைப்பு விடுத்திருக்கிறார்.

2. அனைத்துலகத் தலைமைத்துவப் பொறுப்புகளில் இந்தியாவும், சீனாவும் “இரண்டு பெரும் சக்தியாகத் திகழ வேண்டுமென” மோடி பேராளர்களை வலியுறுத்தினார்.

3. அனைத்துலகப் பொருளாதாரத்தில், கடந்த 1600 ஆண்டுகளில், இந்தியாவும், சீனாவும் 50 விழுக்காடு பங்காற்றியிருப்பதாக மோடி தெரிவித்தார். அதேவேளையில், சீனா – இந்தியா இடையிலான நட்புறவில் அமைதியையும், நிலைப்புத்தன்மையையும் நிலைநிறுத்த வேண்மென சீன அதிபர் வலியுறுத்தினார்.

4. இரு நாடுகளின் நட்புறவிற்காக, பொதுப் பார்வை, சிறந்த தகவல் தொடர்பு, வலுவான உறவு, திட்டங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகிய 5 அம்சங்களை மோடி பரிந்துரை செய்தார்.

5. கடந்த சனிக்கிழமை, இரு தலைவர்களுக்கிடையில் நடந்த தனிப்பட்ட முறையிலான இச்சந்திப்பின் போது, மொழிப்பெயர்ப்பாளர்கள் மட்டுமே உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

6. மோடியும், அதிபர் ஜீயும் கிழக்கு ஏரிக்கரையில் நடந்து சென்று படகு ஒன்றில் ஏறி சவாரி செய்தனர். இதன் மூலம் மாநாட்டில் அவர்கள் இருவரும் நல்ல நட்புறவை அடைந்திருப்பதைக் காணலாம்.

7. டோக்லாம் எல்லையில் சீனப்படைகளுக்கும், இந்தியப் படைகளுக்கும் நீடித்த மோதல் காரணமாக இருநாட்டு உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. அந்த இடைவெளியை சரி செய்யும் விதமாக, சீன அதிபரின் அழைப்பை ஏற்ற இந்திய பிரதமர் மோடி சீனாவில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

8. எனவே, இச்சந்திப்பில் டோக்லாம் எல்லைப் பிரச்சனை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர்.

9. ஆலோசனைக்குப் பிறகு இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை. காரணம், சீனா, இந்தியா இடையிலான மற்ற விவகாரங்கள் இன்னும் தீர்வு காணப்படாததால் அதனைச் செய்யவில்லை எனக் கூறப்படுகின்றது.

10. “எங்களது பேச்சுவார்த்தை மிகவும் ஆழமாகவும், இனிமையாகவும் இருந்தது. இந்தியா – சீனா இடையிலான நட்புறவு இன்னும் வலுவடைவதற்கும், அனைத்துலக விவகாரங்கள் குறித்தும் பேசினோம்” என மோடி தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.