Home 13வது பொதுத் தேர்தல் பாடாங் கோத்தாவில் போட்டியிடத் தயார் – டெங் சாங்கிற்கு லிம் குவான் பதிலடி

பாடாங் கோத்தாவில் போட்டியிடத் தயார் – டெங் சாங்கிற்கு லிம் குவான் பதிலடி

570
0
SHARE
Ad

330x220x703ca0ea073601f5ff68acca4b8e0124.jpg.pagespeed.ic.pVQXTYqN9mபினாங்கு, மார்ச் 28 – எதிர்வரும் 13 ஆவது பொதுத் தேர்தலில் பாடாங் கோத்தா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுமாறு பினாங்கு தேசிய முன்னணியின் தலைவர் டெங் சாங் யாவ் விடுத்த சவாலை தான் ஏற்றுக்கொண்டதாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய குவான் எங்,

“டெங் விடுத்த சவாலை ஏற்றுக்கொண்டு அவருக்கு எதிராக பாடாங் கோத்தாவில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். ‘தான் விழுந்த இடத்திலேயே எழுந்து நிற்க வேண்டும்’ என்று டெங் கூறியிருக்கிறார். அப்படியானால் கடந்த 2008 ஆம் ஆண்டுத் தேர்தலில் அவர் சௌ கான் யாவ்விடம் பறிகொடுத்த சட்டமன்றத் தொகுதியான  பாடாங் கோத்தாவில் இம்முறை களமிறங்கட்டும். இது இரண்டு தனிப்பட்ட தலைவர்களுக்கு இடையே நடக்கும் போட்டியல்ல, முகம்மட் அலிக்கும், ஜோ பக்னருக்குமிடையே நடக்கும் யுத்தம்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஆனால்  கடந்த தேர்தலில் டெங் சாங் யாவ் தான் தோல்வியடைந்த  பாடாங் கோத்தா சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா என்பது சந்தேகமே.

இது பற்றி செய்தியாளர்கள் அவரைக் கேட்டதற்கு,” நான் லிம் குவானுக்கு எதிராக சவால் விடவில்லை. ஆனால் லிம் அதை சவாலாக எடுத்துக்கொண்டால் மீண்டும் படாங் கோத்தாவில் போட்டியிடுவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என்று டெங் கூறியுள்ளார்.

இருப்பினும், கெராக்கான் தலைமைச் செயலாளரான டெங்,பினாங்கு மாநிலத்தில் உள்ள புக்கிட் தெங்காவில், பி.கே.ஆரின் ஓங் சின் வென்னை எதிர்த்துப் போட்டியிடக்கூடும் என்றும் பரவலாக நம்பப்படுகிறது.

ஒருவேளை டெங், புக்கிட் தெங்காவில் போட்டியிடும்  பட்சத்தில், அவருக்கு எதிராக லிம் குவான் களமிறங்கலாம்  என்றும், அதற்கு வசதியாக ஜ.செ.க.வும், பி.கே.ஆரும் தொகுதி மாற்றங்களை செய்து கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.Untitled

எது எப்படியோ லிம் குவான் எடுத்திருக்கும் இந்த முடிவு, டெங் சாங் யாவின் அடுத்த கட்ட அரசியல் வாழ்க்கைக்கு பெரும் தடை கல்லாக இருக்கலாம் என்ற கருத்து தற்போது அனைத்து அரசியல் வட்டாரங்களிலும் நிலவி வருகிறது.

காரணம், இப்போதுதான் முதன்முறையாக பினாங்கு மாநில தேசிய முன்னணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் டெங், இந்த பொதுத் தேர்தலில் வென்றால்தான் அவர் கெராக்கான் கட்சியிலும் அடுத்த கட்ட தலைமைத்துவத்திற்கு செல்ல முடியும்.

இல்லாவிட்டால், இந்த பொதுத் தேர்தலில் அவர் மீண்டும் தோல்வியுற்றால் அவரது அரசியல் எதிர்காலமும் கேள்விக் குறியாகி விடும்.