Home கலை உலகம் திரைவிமர்சனம்: அபியும் அனுவும் – நல்ல கதைக்கரு.. ஆனால் அதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கலாம்!

திரைவிமர்சனம்: அபியும் அனுவும் – நல்ல கதைக்கரு.. ஆனால் அதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கலாம்!

1141
0
SHARE
Ad

சென்னை – ஊட்டியில் சமூக சேவைகள் செய்து வரும் பியா பாஜ்பாய் (அனு), தனது பேஸ்புக் பக்கத்தில் நிறைய சமூக விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிடுகிறார்.

அதனைப் பார்த்து ரசித்து காதல் வயப்படுகிறார் சென்னையில் வசிக்கும்  டோவினோ தாமஸ்.

பியாவுடன் பேஸ்புக் சாட் வழியாக நட்பாகப் பேசிப் பழகி, ஒருகட்டத்தில் தனது காதலை வெளிப்படுத்துகிறார். ஆனால் காதலைச் சொன்னவுடன் பியா எந்த ஒரு பதிலும் சொல்லாமல் தொடர்பிலிருந்து விடுபடுகின்றார். இதனால் டோவினோ தாமஸ் பியாவைத் தேடி ஊட்டிக்கே செல்கிறார்.

#TamilSchoolmychoice

அங்கு தாமசிற்காகக் காத்திருக்கும் பியா, நேரில் வந்து காதலைச் சொல்ல வேண்டும் என்பதற்காகத் தான் அவ்வாறு தொடர்பிலிருந்து விடுபட்டதாகக் கூறி இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார். அதோடு உடனடியாகத் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும் படியும் கூறுகின்றார்.

மறுநாளே இருவரும் பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்து கொள்கின்றனர். அதன் பின்னர் பெற்றோருக்கும் தெரிந்ததும் இரு வீட்டாரும் ஆசீர்வாதம் தெரிவிக்கின்றனர்.

நிறைய கனவுகளோடு மகிழ்ச்சியாகத் தொடங்குகிறது அபி, அனுவின் வாழ்க்கை. அனு கர்ப்பமடைகின்றார்.

அப்போது தான் அபி, அனுவின் உறவு முறையில் மிகப் பெரிய சிக்கல் இருப்பது தெரிய வருகின்றது. இதனால் ஒட்டுமொத்த சந்தோசமும் உடைந்து சுக்கு நூறாகிறது.

திருமணமாகும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பு தான். ஆனால் இருவருக்குமான உறவு முறையியில் ஏற்படும் இப்படி ஒரு சிக்கலை அபியும், அனுவும் எப்படி எதிர்க்கொள்கிறார்கள்? என்பதே படத்தின் சுவாரசியம்.

பழம்பெரும் இயக்குநர் பி.ஆர்.பந்துலுவின் மகளான பி.ஆர்.விஜயலட்சுமி தான் ‘அபியும், அனுவும்’ படத்தின் இயக்குநர். மலையாளத்திலும், தமிழிலும் இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

அனுவாக பியா பாஜ்பாய் அசத்தல் நடிப்பு. துறுதுறுவென குழந்தைத்தனமாக முகபாவனைகளாக இருக்கட்டும், திருமணத்திற்குப் பின் உறவுச் சிக்கலில் இருக்கும் போது கணவனின் அன்பிற்காக ஏங்குவதாகட்டும் அருமையான நடிப்பு.

அபியாக பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் சிறப்பாக நடித்திருக்கிறார். மகிழ்ச்சி, சோகம் என அனைத்து உணர்வுகளையும் மிக அழகாக வெளிப்படுத்துகிறார். என்றாலும் மலையாளம் கலந்த அவரது தமிழ் உச்சரிப்பும், குரலும் காதல் காட்சிகளில் சற்று உறுத்துலை ஏற்படுத்துகின்றது.

பியாவின் அம்மாவாக ரோஹினியும், அபியை நன்கு கவனித்துக் கொள்ளும் பக்கத்துவீட்டு தம்பதியாக பிரபு, சுஹாசினியும் நடித்திருப்பது கதைக்கு சரியான தேர்வு. அவர்களின் இருப்பு படத்திற்குப் பக்கபலம் சேர்த்திருப்பதோடு, கதையுடன் ரசிகர்கள் ஒன்றுவதற்கு உதவியாக இருக்கின்றது.

திரைக்கதையைப் பொறுத்தவரையில் முதல் பாதி ஜவ்வாக இழுக்கிறது. டோவினோ தாமஸ் பேஸ்புக்கில் பியாவிற்கு பிரண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்து, அதை அவர் ஏற்றுக் கொண்டு, அதன் பின்னர் “என்ன பண்ற?” என இருவரும் வழக்கமான சாட்டிங்கில் ஆரம்பித்து, காதலாகி கல்யாணத்தை அடைவதற்குள் இழுவை தாங்காமல் பலர் தங்களது ஃபேஸ்புக்கைத் திறந்து பழைய பிரண்ட் ரெக்வெஸ்டையெல்லாம் பார்க்கத் தொடங்கிவிடுகின்றனர். இன்னும் சிலர் வெளியே போவதும் வருவதுமாக நேரத்தைக் கடத்துகின்றனர். அந்த அளவிற்கு இழுவையோ இழுவை.

இரண்டாம் பாதியில் பியாவிற்கும், டோவினோவிற்கும் உறவுமுறையில் சிக்கல் ஏற்படும் போது தான் படத்தின் சுவாரசியமே தொடங்குகிறது. ஆனால் அது கூட கொஞ்ச நேரத்திலேயே மீண்டும் பழைய நிலைக்கே சென்று ரசிகர்களின் ஒட்டுமொத்த உற்சாகத்தையும் சாப்பிட்டுவிடுகின்றது.

இரண்டாம் பாதி முழுக்க பியாவின் அழுகையும், தாமசின் கோபத்தையும், சுஹாசினியின் அறிவுரையையும் தவிர வேறு எதுவும் இல்லை என்ற அளவிற்கு அவ்வளவு பெரிய இடைவெளியைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

என்றாலும், திருமணத்திற்கு முன் உறவினர்கள் யார் யார் என்பது குறித்து நன்கு ஆராய்ந்த பிறகு திருமணம் செய்ய வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வையும் இப்படம் ஏற்படுத்தியிருக்கிறது.

அதே போல், கதாப்பாத்திரங்களுக்கு இடையிலான தொடர்பையும், தன்மையையும் மிக அழகாக இணைத்திருக்கிறார் இயக்குநர்.

மேலும், குழந்தையில்லாத சுஹாசினி, சிக்கலான உறவில் உண்டான குழந்தையை போராடி சுமக்கும் பியா, கடன் சுமையால் ரோஹினி செய்த செயல், குழந்தையின் அருமை தெரியாத டோவினோ தாமசின் அம்மா என தாய்மைக்கான வித்தியாசங்களை மிக அழகாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

அதற்கேற்ப வசனங்களும் பல இடங்களில் நச்சென மனசில் இடம்பிடிக்கின்றன.

அனு: “உனக்கு என்ன செக்ஸ் தானே வேணும்?”

அபி: “ஆமா.. வேணும்.. ஆனா கல்யாணத்துக்கு அப்புறம். காலத்துக்கும் உன் கூட மட்டும்”

அனு: “அதுக்குத் தான் கல்யாணம் பண்றியா?”

அபி: “கல்யாணத்துக்கு அப்புறம் புருஷனும், பொண்டாட்டியும் காவியமா எழுதுறாங்க? செக்ஸ் தானே.. காதலோட ஒரு பகுதி செக்ஸ் தான்”

இப்படியாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு பற்றியும்,

“இந்த உலகம் என்னை மலடின்னு சொல்லுது. அதனால தற்க்கொலை செஞ்சிக்கலாம்னு கூட தோணுச்சு”

“அதான்.. டாக்டரு 6 மாசத்துல நாள் குறிச்சிட்டாரே? அப்புறம் ஏன் இந்த மருந்த தடவுற?”

“ஏங்க.. உங்களுக்காவது எக்ஸ்பெயரி டேட் தெரிஞ்சிடுச்சு. எனக்கு அது கூட தெரியாது. நாளைக்கு இருப்போம்ங்கிற நம்பிக்கையில தான் இன்றைய சந்தோசமே அடங்கியிருக்கு”

இப்படியாக தாய்மை, உலக நியதி உள்ளிட்டவைகளை எளிமையாக மனதில் நிற்கும் படியாகச் சொல்கிறது வசனங்கள்.

அகிலன் ஒளிப்பதிவில், ஊட்டியின் குளிர்ச்சியும், சென்னையின் பரபரப்பும் மிக அழகாகப் பதிவாகியிருக்கின்றது.

தரன் குமார் பின்னணி இசை அவ்வளவாக ஈர்க்கவில்லை என்றாலும், பாடல்கள் எளிமையாக மனதில் நிற்கும் இரகம்.

மொத்தத்தில் ‘அபியும் அனுவும்’ – நல்ல கதைக்கரு.. சொன்ன விதத்தில் காலத்திற்கேற்ற வேகமும் விறுவிறுப்பும் இல்லை. இன்னும் சிறப்பாகச் சொல்லியிருக்கலாம்.

-ஃபீனிக்ஸ்தாசன்