Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘ஒரு குப்பைக் கதை’ – நல்ல கருத்துடன் கூடிய எளிமையான படம்!

திரைவிமர்சனம்: ‘ஒரு குப்பைக் கதை’ – நல்ல கருத்துடன் கூடிய எளிமையான படம்!

683
0
SHARE

சென்னை – ஊர்ல இருக்குற பொண்ணுங்க எல்லாம் டாக்டர், எஞ்சினியர் மாப்ளய தான் கட்டுவேன்னு சொன்னா அப்புறம் குப்பை அள்ளும் தொழிலாளர்கள் போன்றவர்களை யார் தாங்க கல்யாணம் பண்ணுவா? என்பதை பொட்டில் அறைந்தார் போல் சொல்லியிருக்கிறது காளி ரங்கசாமி என்ற புதுமுகம் இயக்கியிருக்கும் ‘ஒரு குப்பைக் கதை’.

நடன இயக்குநர் தினேஸ் இத்திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகியிருக்கிறார்.

கதைப்படி, குப்பை அள்ளும் குலத்தொழிலைச் செய்து வரும் தினேசுக்கு யாரும் பெண் தர மறுக்கிறார்கள்.

பல ஏமாற்றங்களுக்குப் பிறகு, வேறுவழியின்றி கிளார்க் வேலை செய்வதாகப் பொய் சொல்லி வால்பாறையைச் சேர்ந்த மனீஷா யாதவைத் திருமணம் செய்து சென்னைக்கு அழைத்து வருகின்றார்.

கூவத்திற்கு அருகிலுள்ள குடிசை வீட்டில், கடுமையான நாற்றத்தையும் தாங்கிக் கொண்டு, மகிழ்ச்சியுடன் வாழ முயற்சி செய்யும் மனீஷாவுக்கு, தனது கணவர் கிளார்க் இல்லை, குப்பை அள்ளுபவர் என்ற உண்மை தெரிய வருகின்றது.

அதிலிருந்து கணவரை சுத்தமாகப் பிடிக்காமல் போய்விடுகிறது. இதனிடையே குழந்தை பெற்றுக் கொள்ள தாய் வீட்டிற்குச் செல்லும் மனீஷா, தன்னால் இனி சென்னைக்குப் போய் அந்த நாற்றத்தில் வாழ முடியாது என உறுதியாகச் சொல்லிவிடுகிறார்.

இதனால் வேறுவழியின்றி தான் உயிராக நேசித்த குப்பை அள்ளும் வேலையைக் கைவிடும் தினேஸ், குப்பத்திலிருந்தும் வெளியேறி அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்து மனீஷாவைத் தங்க வைக்கிறார்.

என்றாலும், கணவர் மீது ஈர்ப்பு இல்லாமல் இருக்கும் மனீஷாவை, பக்கத்துவீட்டு ஐடி இளைஞரான சுஜா மேத்யூஸ் எளிதாக கவர்ந்து, ஆசை வார்த்தைகள் கூறி காதல் வலையில் விழ வைக்கிறார்.

பின்னர், கைக்குழந்தையுடன் மனீஷாவை ஓசூருக்கு அழைத்துச் சென்றுவிடுகிறார். இச்சம்பவத்தால் மிகவும் மனமுடையும் தினேஸ் என்ன கதிக்கு ஆளாகிறார்? புருஷனை விட்டு கள்ளக்காதலுடன் ஓடிய மனீஷா என்ன கதிக்கு ஆளாகிறார்? என்பதை மிகவும் எளிய திரைக்கதை அமைப்பில் எதார்த்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

நடிகராக அறிமுகமாகும் தினேசுக்கு கச்சிதமாகப் பொருந்தக் கூடிய வகையிலான கதை. என்றாலும் முகபாவணைகளால் ஈர்க்க வேண்டிய பல இடங்களில் நடிக்க முடியாமல் தடுமாறுகிறார்.

மனீஷா.. பொருத்தமான தேர்வு. கணவரைப் பிடிக்காமல் எரிந்து விழும் இடங்களிலும், பக்கத்து வீட்டு இளைஞரிடம் மனதைப் பறிகொடுக்கும் இடங்களிலும் மிகவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார்.

ஜிம் பாடி இளைஞராக சுஜாமேத்யூஸ் அந்தக் கதாப்பாத்திரத்திற்கு நன்றாக இருக்கிறார். ஆனால் நடிப்பில் அவ்வளவாக ஈர்க்கவில்லை.

முதல் பாதி முழுக்க யோகி பாபு, தினேசுடன் வந்து அவ்வப்போது பஞ்ச டயலாக் பேசி ரசிக்க வைக்கிறார்.

கதையைப் பொறுத்தவரையில் ஏற்கனவே ஓரளவுப் பரீட்சயமான கதை என்றாலும், குப்பை அள்ளும் தொழிலாளர்களை மையப்படுத்தி, அவர்களின் வாழ்வியலையொட்டி திரைக்கதை அமைத்திருப்பது புதுமை.

கூவம் ஆற்றங்கரையில் உள்ள குடிசை வீடுகள், சாலையோர குப்பை மேடுகள், பாரபட்சமின்றி இரவுகளில் மது அருந்தும் பாமரப் பெண்கள் என எளிய மனிதர்களினூடே எதார்த்தமாகப் பயணித்திருப்பதே இப்படத்தின் பலமாக இருக்கின்றது.

அதேவேளையில், இரண்டாம் பாதியில் வலுவான காட்சிகள் இல்லாமல் சுவாரசியம் குறையும் திரைக்கதை கிளைமாக்ஸ் வரையில் எந்த ஒரு அழுத்தமான காட்சிகளும் இல்லாமலேயே முடிகின்றது.

என்றாலும், கள்ளக்காதல் ஏற்படுவதற்கான காரணங்களை முகம் சுளிக்க வைக்கும் ஆபாசமில்லாமல் மேலோட்டமாக சொல்லி குடும்பங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது படம்.

‘உன் பக்கத்துல வந்தாலே குப்ப நாத்தம் கொமட்டிக்கிட்டு வருது’, ‘என் பிள்ளை அங்க வளர்ந்தா என்ன அம்மான்னு கூப்பிட மாட்டா ங்கோத்தா.. ங்கொம்மான்னு தான் கூப்பிடுவா’ போன்ற வசனங்கள் எளிய மனிதர்களின் நிலையை கண்ணாடி போல் காட்டி கதிகலங்கச் செய்கிறது.

மகேஸ் முத்துசாமியின் ஒளிப்பதிவில் சென்னை, வால்பாறை, ஓசூர் எனப் பல இடங்களை கதைக்கு ஏற்ற வகையில் மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறது கேமரா.

ஜோஸ்வா ஸ்ரீதரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே இரகம்.

மொத்தத்தில், ‘ஒரு குப்பை கதை’ – நல்ல கருத்துடன் கூடிய எளிமையான படம்!

-ஃபீனிக்ஸ்தாசன்

 

Comments