Home தேர்தல்-14 “1977 ஜனதா சம்பவங்களை மறக்காதீர்கள்” – பக்காத்தானுக்கு சசி தரூர் எச்சரிக்கை

“1977 ஜனதா சம்பவங்களை மறக்காதீர்கள்” – பக்காத்தானுக்கு சசி தரூர் எச்சரிக்கை

2074
0
SHARE
Ad
சசி தரூர்

(இந்தியாவின் கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான சசி தரூர் மே 24-ஆம் நாள் மலேசியப் பொதுத் தேர்தல் குறித்த தனது கருத்துகளை இணையத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சசி தரூர் ஐக்கிய நாடுகளின் மன்றத்தின் உதவி செயலாளர்களில் ஒருவராகப் பணியாற்றிய அனுபவமும் வாய்ந்தவர். சிறந்த எழுத்தாளரான அவர் இதுவரையில் 17 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

1977-ஆம் ஆண்டில் 30 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த ஜனதா கூட்டணிக்கு நேர்ந்த நிலைமை பக்காத்தான் கூட்டணிக்கும் நிகழாமல் இருக்க அனைவரும் கவனமுடன் செயல்பட வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார். அவரது ஆங்கிலக் கட்டுரையின் சில முக்கிய அம்சங்கள் இங்கே செல்லியல் வாசகர்களுக்காக தமிழில் வழங்குகிறோம்)

#TamilSchoolmychoice

“ஒரு ஜனநாயகவாதி என்ற முறையில் மலேசியாவின் புதிய கூட்டணி அரசாங்கத்திற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மலேசியாவுக்கு கடந்த வாரத்தில் நான் வருகை தந்தபோது எனது நினைவுகள் 1977-ஆம் ஆண்டில் மார்ச் அல்லது ஏப்ரல் மாதவாக்கில் அப்போது இந்தியாவின் தலைநகர் புதுடில்லி இருந்த காலச் சூழலுக்கு என்னை மீண்டும் அழைத்துச் சென்றன.

இப்போது மலேசியாவில் இருக்கும் கொண்டாட்டங்களைப் போலவே அப்போதும் புதுடில்லியிலும் இந்தியாவிலும் கொண்டாட்டங்கள் நிகழ்ந்தன. மலேசியாவில் ஏற்பட்டது போன்ற அதிரடியான அரசியல் மாற்றம் அப்போது இந்தியாவில் நிகழ்ந்திருந்தது. காரணம் 30 ஆண்டுகளாக (1977 வரை) ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டிருந்தது. அரசியலில் இனி எதுவும் சாத்தியம்தான் என்பது போன்ற நம்பிக்கை தோன்றியிருந்தது.

மொரார்ஜி தேசாய்

இன்று மலேசியாவில் மகாதீரும், அன்வார் இப்ராகிமும் பார்க்கப்படுவது போன்று அன்று (1977) இந்தியாவில் மொரார்ஜி தேசாயும், ஜகஜீவன் ராமும் பார்க்கப்பட்டார்கள். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மக்களால் வெறுப்புடன் பார்க்கப்பட்ட பலமான எதிரியை தோல்வியைடையச் செய்திருந்தன. தோல்வியுற்ற கட்சி குறித்தும், அதன் தலைவர் குறித்தும் யாரும் நல்ல வார்த்தைகள் கூறுவதைப் பார்க்கவோ, கேட்கவோ முடியாது.

அப்போதைக்கும் இப்போதைக்கும் ஒரு சில வித்தியாசங்கள் சிறிய அளவில் இருக்கவே செய்தன. அப்போது 1977-இல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்தாற்போல் 30 ஆண்டுகள் பதவியில் இருந்தது. இப்போதோ 60 ஆண்டுகளாக தேசிய முன்னணி ஆட்சியில் இருந்திருக்கிறது.

ஜெகஜீவன்ராம்

மொரார்ஜி தேசாயும் ஒரு முன்னாள் துணைப் பிரதமர்தான். தேசிய நிலையிலான பதவி எதையும் பத்தாண்டுகளுக்கு அவர் வகித்திருக்கவில்லை. அதே போல் மகாதீரும் ஒரு முன்னாள் பிரதமர். 16 ஆண்டுகளாக அரசாங்கத்திற்கு வெளியில் இருந்திருக்கிறார்.

ஜகஜீவன்ராம் இறுதி நேரத்தில் வந்து சேர்ந்தவர். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் அவர் மொரார்ஜி தேசாய் அணியில் வந்து இணைந்தார். அன்வாரும் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர். கடந்த 10 ஆண்டுகளாக சிறையில் இருந்தவர்.

1977 இந்திய சம்பவங்களுக்கும் தற்போதைய மலேசிய சம்பவங்களுக்கும் இடையில் அடிப்படையில் உள்ள ஒரு பொது அம்சம் ஒன்றேதான். மக்கள் கொதித்தெழுந்தார்கள் – தங்களின் எதிர்கால நம்பிக்கைகளை முன்னெடுக்கக் கூடிய தகுதி வாய்ந்த தலைவர்களை அடையாளம் கண்டு பொதுத் தேர்தல் வழி அதிரடியான உருமாற்றத்தை அமைதியான முறையில் வாக்குப் பெட்டிகளின் வழியாகக் கொண்டு வந்தார்கள்.

ஆனால், 1977-இல் அரங்கேறிய இந்திய அரசியல் மாற்றங்கள் இரண்டே ஆண்டுகளில் மீண்டும் மாறின. ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அந்தக் கூட்டணி உடைந்தது. தோல்வி கண்ட மூன்றே ஆண்டுகளுக்குள் தோல்வியடைந்த கட்சி (காங்கிரஸ்) மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

எனவே இதே போன்று மலேசியாவிலும் நடைபெறும் எனக் கூறுவதைக் கேட்க மலேசியர்கள் விரும்ப மாட்டார்கள்.

ஆனால், அவர்களும் 1977-இல் ஜனதா கூட்டணி எதிர்நோக்கிய அதேபோன்ற சவால்களை எதிர்நோக்கியுள்ளனர். அன்வாரின் கட்சி மிக அதிகமான தொகுதிகளை வென்றிருந்தாலும் 2 அமைச்சர்களை மட்டுமே கொண்டிருக்கிறது. மற்ற கட்சிகளுக்கு முக்கியமான பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. உலகில் தேர்ந்தெடுக்கப்பட்ட மிக அதிக வயதான தலைவரான மகாதீர் பிரதமராக இருக்க அவருக்கு அடுத்த நிலையில் காத்திருக்க வேண்டிய அடுத்த பிரதமராக அன்வார் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்.

இரண்டு வருடங்களில் நிலைமைகளை சரி செய்துவிட்டு பதவி விலகுவதாக மகாதீர் அறிவித்திருக்கிறார். ஆனால் அரசியலில் 2 வருடங்கள் என்பது மிக நீண்டகாலம் என்பதை எந்த இந்தியனும் எடுத்துக் கூறுவான். அதிலும் இதே அன்வாரைச் சிறையில் தள்ளியதும் மகாதீர்தான் என்பதும் கவனிக்கத்தக்கது.

மலேசியாவும் இந்தியாவும் பல வகைகளில் ஒற்றுமையைக் கொண்டுள்ளன. பல மதங்களையும், பல இனங்களையும் கொண்ட நமது நாடுகளில் சகிப்புத் தன்மை குறைந்து வருவதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. இருப்பினும் பல குற்றங் குறைகள் தென்பட்டாலும் இருநாடுகளிலும் ஜனநாயக நடைமுறை செழிப்புடன் இயங்குகிறது. அதற்கான மரியாதையும் பெருமளவில் இருந்து வருகின்றது.

-செல்லியல் தொகுப்பு